அனைத்து ஏவுகணை சோதனைகளையும் நிறுத்திவிட்டு, அணுஆயுத சோதனை தளத்தையும் உடனடியாக மூடப் போவதாக வட கொரிய ஜனாதிபதி கிம் ஜாங்-உன் தெரிவித்துள்ளார். அணுஆயுதமாக்குதல் அடையப்பட்டதால், இனி ஏவுகணை சோதனைகள் நடத்த வேண்டிய அவசியமல்லை என கிம் தெரிவித்துள்ளார்
இதனையடுத்து ஏப்ரல் 21ஆம் திகதியில் இருந்து அணுஆயுத சோதனைகள் மற்றும் கண்டம் விட்டு கண்டம் பாயக்கூடிய ஏவுகணைகள் ஏவுவதையும் நிறுத்துவிடுவதாக கொரிய மைய செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. கொரிய தீபகற்பத்தில் பொருளாதார வளர்ச்சி மற்றும் அமைதியை இலக்காக வைத்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசு ஊடகம் தெரிவித்துள்ளது.
வடகொரிய ஜனாதிபதி கிம் ஜாங்-உன் தென் கொரிய மற்றும் அமெரிக்க ஜனாதிபதிகளை விரைவில் சந்திக்கவுள்ள நிலையில் இந்த அறிவிப்பினை விடுத்துள்ளார். வடகொரிய ஜனாதிபதியின் இந்த அறிவிப்பானது வட கொரியாவிற்கும், ஒட்டு மொத்த உலகிற்கும் நற்செய்தி எனவும் பெரும் முன்னேற்றம் எனவும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தன் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
அதேவேளை வட கொரியாவின் இந்த அறிவிப்பானது அர்த்தமுள்ள ஒரு முன்னேற்றம் என தென் கொரிய ஜனாதிபதியின் செய்தி தொடர்பாளர் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை இது மாதிரியான உறுதி மொழிகளை, இதற்கு முன்னர் வட கொரியா மீறியுள்ளது எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது