உணவு வீண்விரயம் குறித்த விழிப்புணர்வுகளை மக்களுக்கு வழங்க வேண்டும் என ”விண்மீன்கள்” என்ற அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.
வலிகளை உணர்ந்த நாம் பசியின் வலியை உலகுக்கு எடுத்துச் சொல்ல வேண்டும் என அந்த அமைப்பு இன்று (சனிக்கிழமை) வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
“விண்மீன்களின் செயற்பாடு” என்பது ஒரு தனிமனித விளம்பரமோ அல்லது எமது படைப்பினை ஊக்குவிக்குமாறு உங்களிடம் வேண்டும் ஒரு நிகழ்வோ அல்ல. உலகில் உள்ள மூன்றில் இரண்டு மக்களின் பசியின் வலியை உணர்ந்த ஒரு திட்டம்.
இந்த மனித வாழ்வின் முக்கிய ஒன்றாக பசியின் கொடுமை உள்ளது. உணவின்றி பலகோடி மக்கள் சாகும்போது நாம் அந்த உணவினை வீணாக்குகின்றோம் என்ற ஏக்கத்தின் வலி.
எனவே, கிராமங்களில் உள்ள மக்களை சந்திக்கும்போதும் மாணவர்களை சந்திக்கும் போதும், அரச அலுவலங்களில் பேசும்போதும் 5 நிமிடங்கள் உணவு வீண்விரயம் பற்றி பேசுங்கள். சமூக வலைத்தளங்களில் நீங்கள் பயன்படுத்தும் உங்கள் பொன்னான நேரங்களில் 10 நிமிடங்களை உணவு வீண்விரயம் பற்றி சிந்திக்க ஒதுக்குங்கள்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை குறித்த அமைப்பின் ஏற்பாட்டில் ‘உணவு வீண்விரயத்தினை தடுக்க வேண்டும்’ என்ற தொனிப்பொருளில் விழிப்புணர்வுப் பேரணி ஒன்றும் நடத்தப்பட்டுள்ளது.
குறித்த பேரணியில் கையெழுத்திடும் நிகழ்வும் இடம்பெற்றதுடன், இப்பேரணி யாழ்ப்பாணத்தை நோக்கி இன்று காலை வவுனியா பழைய பேருந்து நிலையத்திலிருந்து ஆரம்பமாகியது.
வவுனியா நகரசபையின் தலைவர் இ.கௌதமன் கலந்து கையெழுத்திட்டு இந்த நிகழ்வினை ஆரம்பித்து வைத்ததுடன், இப்பேரணியானது ஏ9 வீதியூடாக ஓமந்தை, புளியங்குளம், கனகராயன்குளம், மாங்குளம், முருகண்டி, இரணைமடு ஊடாக இன்று மாலை கிளிநொச்சியைச் சென்றடைந்துள்ளது.
நாளை ஞாயிற்றுக்கிழமை (22.04.2018) அன்று காலை 8.00 மணிக்கு கிளிநொச்சி மாவட்ட செயலகத்திற்கு முன்பாக அன்றைய நாள் நிகழ்வுகள் ஆரம்பமாகி தொடர்ந்து ஏ9 வீதியுடாக பரந்தன் , இயக்கச்சி , பளை , கொடிகாமம் , சாவக்கச்சேரி , கைதடி ஊடாக யாழ்ப்பாண மாவட்ட செயலத்தினை சென்றடையவுள்ளது.
நாளைமறுதினம் (23.04.2018) திங்கட்கிழமை அன்று காலை 8.00 மணிக்கு யாழ்ப்பாண மாவட்ட செயலகத்திற்கு முன்பாக அன்றைய நாள் நிகழ்வுகள் ஆரம்பாகி யாழ் மத்திய பேரூந்து நிலையம் , நாச்சிமார் கோவிலடி , நல்லூரடி , திருநெல்வெலி, மருதானர்மடம் , கோப்பாய், புத்தூர் , நெல்லியடி , மந்திகை ஊடாக பருத்தித்துறை நகரை சென்றடைந்து பேரணி நிகழ்வுகள் நிறைவடையவுள்ளது.