குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை பதவி கவிழ்க்கும் முயற்சியில் கூட்டு எதிர்க்கட்சி தொடர்ந்தும் தீவிரம் காட்டி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. எதிர்வரும் மே மாதம் 8ம் திகதி புதிய பாராளுமன்ற அமர்வுகள் ஆரம்பத்தின் போது, பிரதமரை வீட்டுக்கு அனுப்பி வைக்கும் அடுத்த கட்ட நகர்வுகள் மேற்கொள்ளப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
புதிய பாராளுமன்ற அமர்வுகளின் தலைமை உரையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அரசாங்கத்தின் கொள்கைகள் பற்றி விளக்கம் அளிக்க உள்ளார். இந்த விளக்கம் தொடர்பில் பாராளுமன்ற வாக்கெடுப்பு நடாத்துவதற்கு கூட்டு எதிர்க்கட்சித் திட்டமிட்டுள்ளது. ஏற்கனவே இவ்வாறான ஓர் வாக்கெடுப்பு 1960ம் ஆண்டு நடத்தப்பட்ட போது அதில் தோல்வியடைந்து அப்போதைய பிரதமர் டட்லி சேனாநாயக்க பதவியிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
நம்பிக்கையில்லா தீர்மான வாக்கெடுப்பின் போதான ஆதரவினை விடவும் குறைந்தளவு ஆதரவே தற்போது அரசாங்கத்திற்கு காணப்படுகின்றது எனவும் இதனால், ஜனாதிபதியின் கொள்கைப் பிரகடன உரையின் மீது வாக்கெடுப்பு நடாத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.இந்த வாக்கெடுப்பில் அரசாங்கம் தோல்வியைத் தழுவினால் பிரதமர் பதவி விலக வேண்டியதுடன், பாராளுமன்றையும் கலைக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.