ராஜஸ்தானைச் சேர்ந்த வெளிநாட்டு மருந்து நிறுவனம் ஒன்று தாங்கள் தயாரித்த மருந்துகளை விலங்குகளுக்கு பதிலாக மனிதர்களுக்கு கொடுத்து சோதனை மேற்கொண்டதன் காரணமாக 16 பேர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பொதுவாக, புதிதாக தயாரிக்கப்படும் மருந்துகளை எலி, முயல், குரங்கு ஆகிய விலங்குகளுக்கு கொடுத்து சோதனை செய்து பார்ப்பது வழக்கம். ஆனால், குறித்த வெளிநாட்டு மருந்து நிறுவனம் தாங்கள் தயாரித்த மருந்துகளை மனிதர்களுக்கே நேரடியாக கொடுத்து சோதனையை மேற்கொண்டுள்ளது. இதற்காக, நாளொன்றுக்கு 500 ரூபா ஊதியம் என்ற வீதத்தில், 21 பேரை கடந்த மூன்று நாட்களுக்கு முன் அந்த நிறுவனம் வேலைக்கு சேர்த்துள்ளது. மருந்துகளை விநியோகம் செய்வதற்கு ஆள் எடுப்பதாகக் கூறியே அவர்கள் வேலைக்கு சேர்க்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், நேற்று முன்தினம், தாங்கள் தயாரித்த புதிய மருந்துகளை அந்த நிறுவனத்தின் அதிகாரிகள், புதிய தொழிலாளர்கள் 21 பேருக்கு கொடுத்துள்ளனர். மருந்துகளை உட்கொண்ட 16 பேர் மயக்கமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் பலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாக ராஜஸ்தான் சுகாதாரத் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.