குளோபல் தமிழ்ச் செய்தியாளர்..
பிரான்சுக்கு புலம்பெயரும் அகதிகளுக்கான விதிகளை கடுமையாக்கும் புதிய குடியேற்ற மசோதாவை அந்நாட்டின் தேசிய சட்டப்பேரவை நிறைவேற்றியுள்ளது. இந்தப் புதிய மசோதாவின்படி, அகதிகளின் மனுக்களுக்கு வழங்கப்படும் காலக்கெடு குறைக்கப்பட்டுள்ளது. அத்துடன் சட்டவிரோதமாக குடியேறுபவர்களுக்கான சிறைத்தண்டனை அறிமுகம் செய்யப்பட்டு இருப்பதுடன் மேலும் பல விடயங்கள் அந்த மசோதாவில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தப் புதிய சட்ட மசோதாவால் புலம்பெயர்ந்து இதுவரை அகதி அந்தஸ்த்து பெறாத இலங்கைத் தமிழர்களும் பாதிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் என சமூக ஆர்வலர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்.
இலங்கையின் வடக்கு கிழக்கில் ஏற்பட்ட அசாதாரண நிலைகளை அடுத்து உயிராபத்து நிறைந்த பலர் பிரான்சிற்கு புலம்பெயர்ந்து அகதி அந்தஸ்த்திற்கு விண்ணப்பித்து அதற்காக நீண்ட காலம் காத்திருக்கிறார்கள். பலர் 5 முதல் 10 வருடங்களுக்கு மேலாகவும் அகதி அந்தஸ்த்து கிடைக்கப்பெறாமல் காத்திருக்கிறார்கள். இந்த நிலையில் பிரான்சின் புதிய சட்ட மசோதா இவர்கள் மீதும் பாயுமா என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.