குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
வடக்கு மாகாண சபை அமைச்சுக்கள், திணைக்களங்கள் ஆகியவற்றில் இடம்பெற்ற ஊழல் மோசடிகள் தொடர்பான விசாரணை அறிக்கையின் பரிந்துரைகளை விரைந்து சபையின் ஆயுள் காலத்துள் அதாவது எதிர்வரும் ஒக்ரோபர் 25ஆம் திகதிக்குள் நிறைவேற்றுமாறு எதிர்வரும் வியாழக்கிழமை இடம்பெறவுள்ள மாகாண சபை அமர்வில் தீர்மானம் கொண்டு வரப்படவுள்ளது.
நிதி மோசடிகள், அதிகார முறைகேடுகள் உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் காலத்துக்குக் காலம் விசாரணைக் குழுக்கள் அமைக்கப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன. அந்த விசாரணை அறிக்கைகள் பகிரங்கப் படுத்தப்படவில்லை என்பதுடன, அவற்றின் பரிந்துரைகளும் முழுமையாக நடைமுறைப்படுத்தப்படவில்லை.
ஆரம்ப விசாரணைகளில் தவறிழைத்தவராக அடையாளம் காணப்படுபவர்கள் மீது, முறையான முழுமையான விசாரணை நடத்தப்பட்டு குற்றச்சாட்டுப் பத்திரம் தயாரிக்கப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டும், உயர் அதிகாரிகள் சிலர் இதனால் தண்டனைகளிலிருந்து தப்பித்து தொடர்ந்தும் பதவிகளில் உள்ளனர் என்ற குற்றச்சாட்டும் நிலவி வரும் நிலையிலேயே இந்தத் தீர்மானம் வடக்கு அவைக்கு கொண்டு வரப்பட்டவுள்ளது
வடக்கு மாகாண சபையின் 121ஆவது அமர்வு எதிர்வரும் வியாழக்கிழமை இடம்பெறவுள்ளது. இந்த அமர்வில் வடக்கு மாகாண சபை உறுப்பினர் அ.பரஞ்சோதி மேற்படி தீர்மானத்தை சபைக்கு கொண்டு வரவுள்ளார்.
அதில் குறிப்பிடப்பட்டு உள்ளதாவது ,
வடக்கு மாகாண சபையின் ஆளுகைக்கு உட்பட்ட அமைச்சுக்கள், திணைக்களங்கள், அதிகார சபைகள் மற்றும் அதன் கீழ் இயங்கும் நிறுவனங்களில் நடைபெற்ற ஊழல்கள், மோசடிகள், முறைகேடுகள், நிதி கையாடல்கள் சம்பந்தமாக பல விசாரணைக் குழுக்கள் நியமிக்கப்பட்டன. அந்தக் குற்றச்சாட்டுக்கள் விசாரிக்கப்பட்டு பல சிபாரிசுகள் செய்யப்பட்டுள்ளன.
அந்த சிபாரிசுகள் சம்பந்தமாக இதுவரை எந்தவிதமான ஆக்க பூர்வமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. வடக்கு மாகாண சபையின் ஆயுள்காலம் நிறைவடைய இன்னும் சில காலமே உள்ளது. இது சம்பந்தமான நடவடிக்கைகளை துரிதப்படுத்த வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது.
விசாரணை அறிக்கைகளில் குறிப்பிடப்பட்டுள்ள சிபாரிசுகளின் அடிப்படையில் சட்ட நடவடிக்கை எடுக்க ஏற்ற ஒழுங்குகளை செய்ய வேண்டும் என்று இந்த சபையை கோருகின்றேன் – என்றுள்ளது.