உராய்வு நீக்கி எண்ணெய் சந்தையில் அதன் தரம் மற்றும் விலை தொடர்பாக எழுந்துள்ள பிரச்சினைகளுக்கு தீர்வு யோசனைகள் எதிர்வரும் ஜூன் மாதம் 30 ஆம் திகதி முன்வைக்கப்படவுள்ளது என இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் தமித குமாரசிங்க தெரிவித்தார்.
நேற்று (24) கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்ற உராய்வு நீக்கி எண்ணெய் தொடர்பான பொதுமக்களிடம் கருத்து கேட்கும் நிகழ்வில் உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
மேலும், அவர் அங்கு உரையாற்றுகையில்;
இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழு உராய்வு நீக்கி எண்ணெயை பயன்படுத்தும் பாவனையாளர்களின் நலன்கருதியும் அவர்களது உரிமைகளை பாதுகாக்க வேண்டிய தேவையும் எழுந்துள்ளது. இதற்காக கொள்கைரீதியாக பல ஆலோசனைகளையும் தயாரிக்க வேண்டி உள்ளது.
கடந்த மார்ச் மாதம் முதல் உராய்வு நீக்கி எண்ணெய்ச் சந்தையில் ஏற்பட்டுள்ள முரண்பாடுகள் தொடர்பாக எழுத்து மூலமாக எமது ஆணைக்குழு ஆலோசனைகளை பெற்றுக்கொண்டது. அதனை தொடர்ந்து இன்று (24) பொதுமக்களிடம் கருத்துக்களை வாய்மொழிமூலமாக கேட்டறிந்துகொண்டது. இதன்போது சுமார் 300 க்கும் மேல்பட்ட பாவனையாளர்கள் கலந்துகொண்டு தங்களது கருத்துக்களை தெரிவித்தனர்.
அடுத்த மாதம் 15 ஆம் திகதி ஆணைக்குழு உராய்வு நீக்கி எண்ணெய் சந்தையில் அதன் தரம் மற்றும் விலை தொடர்பான பிரதிபலிப்பை வெளியிடவுள்ளது அதனை தொடர்ந்து பிரச்சினைகளுக்கு தீர்வு யோசனைகள் எதிர்வரும் ஜூன் மாதம் 30 ஆம் திகதி முன்வைக்கப்படவுள்ளது.