குட்கா ஊழல் விவகாரத்தை சிபிஐ விசாரிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தடை செய்யப்பட்ட போதைப் பொருளான குட்கா தமிழகம் முழுவதும் தடையின்றி விற்கப்படுகிறது. சட்டவிரோத குட்கா விற்பனைக்காக அமைச்சர் விஜயபாஸ்கர், டிஜிபி ராஜேந்திரன் உள்ளிட்ட அதிகாரிகள் பல கோடி ரூபாய் லஞ்சம் பெற்றுள்ளதாகவும் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பான வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இவ்வழக்கை நீர்த்து போகச் செய்ய தமிழக அரசின் ஊழல் கண்காணிப்பு ஆணையம் செயல்பட்டு வருகின்றது. இதனால் ஓய்வு பெற்ற நீதிபதியின் கண்காணிப்பில் சிபிஐ அதிகாரிகள் அடங்கிய குழு விசாரிக்க வேண்டும் என திமுக சட்டமன்ற உறுப்பினர் ஒருவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இவ்வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டு மேற்படி தீர்ப்பை அளித்துள்ளது.