173
இரணைத்தீவிற்கு சென்று அங்கு குடியேறிய மக்களை நான் சொந்த நிலத்தை மீட்ட மக்களாகவே பார்க்கின்றேன் என முன்னளா் பாராளுமன்ற உறுப்பினரும் சமத்துவம் சமூகநீதிக்கான மக்கள் அமைப்பின் தலைவருமான மு. சந்திரகுமார் தெரிவித்துள்ளார்.
மக்களின் போராட்டத்திற்கு ஆதரவளிக்கும வகையில் இன்று(26) இரணைத்தீவுக்கு சென்ற அவர் அங்கு ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் குறிப்பிடுகையில்
இரணைத்தீவு மக்கள் தங்களின் மண்ணை மீட்கும் போராளிகளாக காணப்படுகின்றனர். அண்மைக் காலமாக வடக்கு கிழக்கில் தமிழ் மக்கள் தங்களின் பல பிரச்சினைகளுக்கு தாங்களாகவே போராட்டங்களை நடத்தி வெற்றிப்பெற்றிருக்கின்றார்கள்.
கேப்பாபிலவு, கிளிநொச்சி பரவிபாஞ்சான், வலி வடக்கு போன்ற இடங்களில் மக்கள் தாங்களே தங்களின் சொந்த நிலத்திற்கு செல்வதற்கான போராட்டத்தை மேற்கொண்டு அதில் கணிசமான வெற்றியையும் பெற்றிருக்கின்றார்கள்.
அவ்வாறே இரணைத்தீவு மக்களும் ஒரு வருடமாக இரணைமாதாநகரில் சொந்த நிலத்திற்குச் செல்வதற்கான போராட்டத்தை மேற்கொண்டார்கள் இந்தக் காலத்தில் பல அமைச்சர்கள் அரசியல்வாதிகள் என பலர் வந்து பல வாக்குறுதிகளை வழங்கினார்கள் ஆனால் அவர்கள் எவரும் இந்த மக்களின் கோரிக்கையை நிறைவேற்றவில்லை இந்த நிலையில் மக்கள் நம்பிக்கையோடும் உறுதி தளராதும் தங்களின் சொந்த நிலத்திற்கு வந்து நிலத்தை மீட்டு குடியேறிக்கொண்டிருக்கின்றார் கள் எனவே அவர்களை பாராட்ட வேண்டும். இரணைத்தீவு மக்களின் உறுதி இவ்வாறு போராடும் மக்களுக்கு ஒரு முன்னுதாரணம்.
இரணைத்தீவு மக்களின் மனவுறுதியை நான் பாராட்டுகிறேன். அத்தோடு மக்களின் போராட்டத்தை தங்களின் அரசியலாக்கி அதில் அரசியல் இலாபம் தேடுபவர்களுக்கும் இந்த மக்களின் போராட்டம் ஒரு நல்ல படிப்பினையை ஏற்படுத்தியிருக்கிறது. கடந்த காலத்தில் பாராளுமன்ற உட்பட பல இடங்களில் இந்த மக்களுக்காக நான் குரல் கொடுத்திருக்கிறேன். ஆனாலும் நாங்கள் நினைத்தது போன்று எதுவும் நடக்கவில்லை. இன்று இந்த மக்கள் இரணைத்தீவில் வந்து குடியேறியிருப்பதற்கு காரணம் எந்த அரசியல் வாதிகளும் அல்ல மாறாக இந்த மக்களின் உறுதியான போராட்டத்தின் விளைவே அது எனவும் மு. சந்திரகுமார் தெரிவித்தார்
Spread the love