(ஆக்கம் மற்றும் ஒளிப்படங்கள் :- சிவகரன். )
பூநகரி நாச்சிக்குடா கடற்கரையில் இருந்து மேற்குப்பக்கமாக சுமார் 12 கடல் மைல்களுக்கு அப்பால் இருக்கின்ற ஒரு சிறிய அழகிய தீவுதான் இரணைதீவு. சிறிய சிறிய இரண்டு தீவுகள் ஒன்றோடொன்று ஒட்டிக்கொண்டிருப்பதால் இந்தத்தீவுக்கு இரணை தீவு என பெயர் வந்ததாக அந்த ஊர் மக்கள் தெரிவிக்கின்றனர்.
சுமார் 8 கிலோமீற்றர் நீளமும், 3கிலோமீற்றர் அகலமும் கொண்ட இந்த தீவு 1992 ஆம் ஆண்டு தொடக்கம் சிறிலங்கா கடற்படையின் முழுமையான கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டு அங்கு பூர்வீகமாக வாழ்ந்த மக்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டிருந்தனர்.
24 சதுர கிலோமீற்றர் பரப்பளவைக் கொண்ட ஒரு அழகிய தீவுக்குள் வாழ்ந்த மக்கள் தமக்கு தேவையைன உணவுப்பொருட்களை அங்கேயே உற்பத்தி செய்வந்திருக்கின்றனர். வயல்,விலங்கு வேளாண்மை, மரக்கறித்தோட்டங்கள், பிரதானமாக மீன்பிடித்தொழில் என வாழ்ந்த மக்கள் கடந்த 26 ஆண்டுகளாய் அகதி வாழ்வை வாழ்ந்து வருகின்றனர்.
இரணைதீவில் இருந்து சிறிலங்கா கடற்படையின் தாக்குதலால் 1992 இல் இடம் பெயர்ந்து பூநகரி முழங்காவில் இரணைமாதா நகரில் குடியேறிய மக்கள் கடந்த 26 ஆண்டுகளாகவும் தமது சொந்த இடத்தில் குடியேறுவதற்கு காத்திருந்தனர் ஆனால் இரணைதீவு மக்களை இரணைதீவில் குடியேற்ற அரசாங்கமோ அல்லது அரச அதிகாரிகளோ ஆக்கபூர்வமான எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளாமல் அந்த மக்களை தொடர்ந்தும் இரணை மாதா நகரிலேயே குடியிருக்குமாறும் அவர்களுக்கு வேண்டிய உதவிகளை தாம் வழங்குவதாகவும் கூறிவந்தனர்.
இந்த நிலையில் இரணைதீவு றோமன் கத்தோலிக்க தமிழ்க்கலவன் பாடசாலையை இரணைமாதா நகரில் இரண்டு மாடிகள் கொண்ட நிரந்தர பாடசாலையாக அமைத்துக்கொடுத்து அந்த மக்களை இரணைமாதா நகரிலேயே நிரந்தரமாக குடியிருக்கும் ஏற்பாடுகளை அரசாங்கமும் அரச அதிகாரிகளும் மேற்கொண்டனர்.
என்ன வசதி வாய்ப்புக்கள் வழங்கப்பட்டாலும் எமது சொந்த நிலம் தான் எமக்கு வேண்டும் என்ற குறிகோலுடன்செயற்பட்ட இரணைதீவு மக்கள் தமது சொந்த நிலத்திற்கு செல்ல தங்களை அனுமதிக்க வேண்டும் என கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக முழங்காவில் இரணைமாதா நகரில் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
மக்களின் கவனயீர்ப்பு போராட்டம் ஒருவருடத்தை எட்டியும் அரசாங்கத்தினால் ஆக்கபூர்வமான பதில் கிடைக்காததையிட்டு ஆத்திரமடைந்த மக்கள் யாருடைய சொற்களையும் பொருட்படுத்தாது தாங்களாகவே தங்களது மீன்பிடி படகுகளில் ஏறி தமது சொந்த நிலத்திற்கு சென்றுவிட்டனர்.
தற்போது முழுமையும் சிறிலங்கா கடற்படையின் கட்டுப்பாட்டில் இருக்கும் இந்தத்தீவில் இப்போது பற்றைக்காடுகளும், சோடை விழுந்த தென்னை மரங்களும் பாழடைந்த கட்டிடங்களும்,உடைந்த மக்களின் வாழ்விடங்களும்,கட்டாக்காலியாக திரியும் ஒரு தொகுதி மாடுகளுமே அந்த மக்களுக்கு மிச்சமாய் இருக்கின்றன.
1992 ஆம் ஆண்டு தாங்கள் தமது சொந்த ஊரை விட்டு இடம் பெயரந்த போது அங்கு 2000 இற்கும் அதிகமான செம்மறி ஆடுகள் இருந்ததாகவும் அந்த செம்மறி ஆடுகளை இரணைதீவு செம்மறி இனம் என்றே எல்லோரும் விரும்பி வேண்டியதாகவும் இரணைதீவு செம்மறி என்ற ஒரு இன ஆடுகள் இப்போது இல்லாமல் போயிருப்பதாகவும் மருந்துக்கு கூட ஒரு செம்மறி ஆட்டை தமது ஊரில் பார்க்க முடியவில்லை என்கிறார்கள் அவ்வூர் மக்கள்.
சொந்த ஊரில் குடியேற வேண்டும் என்ற அவாவில் அந்தப்பகுதி மக்கள் இராணுவக்கெடுபிடிகளைத்தாண்டி அங்கு குடியேறுகின்றனர். இருப்பினும் இது வரையில் அரசாங்கத்திடமிருந்தோ அல்லது அரச அதிகாரிகளிடமிருந்தோ இரணைதீவில் மீள் குடியேறுவதற்கான எந்த அனுமதியும் வழங்கப்படவில்லை. இதனால் சொந்த ஊருக்குச் சென்ற மக்களுக்கு அரச தரப்பிலிருந்து இதுவரை எந்த உதவியும் கிடைக்கவில்லை. பாழடைந் கட்டிடங்களில் எந்தவித அடிப்படை வசதிகளுமற்ற நிலையில் நிர்க்கதியான நிலையில் தமது சொந்த ஊரில் இருக்கின்றோம் என்ற மன நின்மதியோடு மட்டும் வாழ்வை தொடங்குகின்றனர்.