பெரு நாட்டில் தொல்லியலாளர்கள் கண்டுபிடித்துள்ள நரபலிதான் உலக வரலாற்றிலேயே அதிக எண்ணிக்கையிலான குழந்தைகள் நரபலி கொடுக்கபட்ட சம்பவமாக இருக்கலாம் என கருதப்படுகிறது.
550 ஆண்டுகளுக்கு முன்னால், பெருவின் வட பகுதியில் அமைந்துள்ள கடலோர பிரதேசத்தில், ஒரே சமயத்தில் 140க்கும் மேற்பட்ட குழந்தைகள் நரபலி கொடுக்கப்பட்டுள்ளது.
முற்கால சிமு நாகரிக மையத்திற்கு அருகில் அமைந்துள்ள இன்றைய ட்ருஜிலோவுக்கு அருகில் இந்த நரபலி கொடுக்கப்பட்ட இடம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஒரே சம்பவத்தில் கொல்லப்பட்டுள்ள 200க்கு மேலான லாமா வகை ஒட்டகங்களும் இந்த குழந்தைகளோடு புதைக்கப்பட்டுள்ளன. தேசிய புவியியல் நிறுவனத்தின் நிதி ஆதரவோடு நடைபெற்றுள்ள இந்த ஆய்வின் கண்டுபிடிப்பு, அந்த நிறுவனத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
இதுபோன்றதொரு கண்டுபிடிப்பை ஒருபோதும் எதிர்பார்க்கவில்லை எனவும் வேறு யாரும் கூட இந்த கண்டுபிடிப்பை எதிர்பார்த்திருக்கமாட்டார்கள் எனவும் இந்த ஆய்வை தலைமையேற்று வழிநடத்திய ஜோன் வெரானோ தெரிவித்துள்ளார்.
இந்த நரபலி சம்பவத்தில் நரபலி கொடுக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ள 140 குழந்தைகளும் 5 முதல் 14 வரையான குழந்தைகள் என கருதப்படுகின்ற போதிலும் அதில் பெரும்பாலோர் 8 முதல் 12 வயது வரையானவர்கள் என்று தேசிய புவியியல் இணையதளம் தெரிவித்துள்ளது
மார்பு நடு எலும்பு உள்பட எலும்புகளில் வெட்டு அடையாளங்கள் இருப்பதால் இந்த குழந்தைகள் நரபலி கொடுக்கப்பட்டவர்கள் எனவும் விலா எலும்புகள் பல சேதமடைந்திருப்பதால் இதயங்கள் அகற்றபட்டிருக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது
2011ம் ஆண்டு 3,500 ஆண்டுகள் பழமையான கோயிலில் நடத்திய தொல்பொருள் ஆய்வில், 40 மனிதர்கள் மற்றும் 74 ஒட்டகங்களின் எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.