ahmad-shah-bbc-afghanistan
பிபிசி ஆப்கன் சேவையின் செய்தியாளர் அகமது ஷா, ஆப்கானிஸ்தானின் ஹோஸ்ட் மாகாணத்தில் இன்று சுட்டுக்கொல்லப்பட்டார். இன்று திங்கள்கிழமை காலை ஆப்கன் தலைநகர் காபூலில் நடந்த இரட்டை வெடிகுண்டுத் தாக்குதலில் 8 பத்திரிகையாளர்கள் உட்பட குறைந்தது 25 பேர் கொல்லப்பட்ட நிலையில், வேறொரு சம்பவத்தில் பிபிசி செய்தியாளர் கொல்லப்பட்டுள்ளார்.
இது தொடர்பாக பிபிசி உலக சேவையின் இயக்குநர் ஜேமி அங்கஸ் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில்,” ஆப்கானிஸ்தானில் இன்று காலை நடந்த தாக்குதலை தொடர்ந்து, பிபிசி ஆப்கன் செய்தியாளர் அகமது ஷா இறந்ததை பிபிசி மிகுந்த வருத்தத்துடன் உறுதி செய்கிறது. 29 வயதான அகமது ஷா, பிபிசி ஆப்கன் சேவையில் ஒரு வருடத்திற்கு மேலாகப் பணியாற்றினார். ஏற்கனவே தன்னை மிகவும் திறமையான பத்திரிகையாளராக நிறுவியிருந்த அவருக்கு, ஆஃப்கான் சேவையில் மிகுந்த மரியாதை இருந்தது.
இது ஒரு பேரிழப்பு. அகமது ஷாவின் நண்பர்களுக்கும், குடும்பத்திற்கும், பிபிசி ஆப்கான் சேவைக்கும் எனது வருத்தத்தை தெரிவித்துக்கொள்கிறேன். இந்த மிகக் கடினமான நேரத்தில் அவருடைய குடும்பத்தை ஆதரிப்பதற்கு எங்களால் முடிந்த அனைத்தையும் செய்கிறோம்” என கூறியுள்ளார்.
இதேவேளை இன்று காலை நடந்த தாக்குதலில் தனது முதன்மை புகைப்பட கலைஞர் ஷா மராய் கொல்லப்பட்டதாக AFP செய்தி நிறுவனம் கூறியுள்ளது. AFP செய்தி நிறுவனத்தின் புகைப்படக் கலைஞருடன், அங்கு செய்தி சேகரிக்க சென்ற பல செய்தியாளர்களும் இதில் உயிரிழந்துள்ளனர்.
முதல் வெடிப்புக்கு 15 நிமிடங்களுக்கு பின்னர், பொதுமக்களும் செய்தியாளர்களும் அங்கு திரண்டபோது இரண்டாவது குண்டு வெடித்தது. இந்த இரண்டாவது தாக்குதல் இத்தாக்குதலுக்கு ஐ.எஸ் குழு பொறுப்பேற்றுக் கொண்டுள்ளது.
செய்தியாளர்களை இலக்காக வைத்தே இரண்டாவது குண்டு வெடிப்பு நடத்தப்பட்டதாக AFP செய்தி நிறுவனம் டிவிட்டரில் தெரிவித்துள்ளது. வெடிகுண்டு வைத்திருந்தவர் ஒரு செய்தியாளர் போல பாவனை செய்து செய்தியாளர்கள் மத்தியில் குண்டினை வெடிக்கச் செய்ததாகக் கூறப்படுகிறது.
இதில் குறைந்தது 8 செய்தியாளர்கள், 4 போலீஸ் அதிகாரிகள் கொல்லப்பட்டுள்ளதாக அந்நாட்டு உள்துறை அமைச்சு செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆப்கான் இரட்டைக் குண்டுத்தாக்குதலில் எட்டு ஊடகவியலாளர்கள் – குழந்தைகள் உட்பட 25பேர் பலி
Apr 30, 2018 @ 10:32
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் இடம்பெற்ற இரட்டை தற்கொலைக் குண்டுத் தாக்குதலில், 25 பேர் உயிரிழந்துள்ளதுடன் சுமார் 45 பேர் படுகாயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவர்களில் எட்டு ஊடகவியலாளர்களும் உள்ளடங்குவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
முதலாவது குண்டுத் தாக்குதல இடம்பெற்றதனைத தொடர்ந்து அங்கு செய்திசேகரிப்புக்காக ஊடகவியலாளர்கள் குழுமியிருந்த வேளை அவர்களை இலக்கு வைத்து இரண்டாவது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மேலும் இந்தத் தாக்குதலில் உயிரிழந்தவர்களில் மதச் சார்பு பாடசாலை ஒன்றில் பயிலும் 11 சிறுவர்களும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமது நாட்டில், ஒரே தாக்குதலில் இத்தனை ஊடகவியலாளர்கள் உயிரிழந்த முதலாவது சந்தர்ப்பம் இதுவென, ஆப்கான் ஊடகவியலாளர் பாதுகாப்பு குழு தெரிவித்துள்ளது.