குளோபல் தமிழ்ச் செய்தியாளர்..
தன்னை கைதுசெய்யும் முயற்சியானது அரசியல் காரணங்களின் அடிப்படையில் முன்னெடுக்கப்படுவதால், அதனை உடனடியாக நிறுத்துமாறு கோரி இலங்கை மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜூன் மகேந்திரன், சர்வதேச காவற்துறையினரிடம் மேன்முறையீடு ஒன்றை முன்வைத்துள்ளார். தன்னை கைதுசெய்யும் நடவடிக்கையானது முற்றும் முழுதான அரசியல் காரணங்களை அடிப்படையாக கொண்டது எனவும் அவர் கூறியுள்ளார்.
இலங்கை மத்திய வங்கியில் இடம்பெற்றதாக கூறப்படும் பிணை முறி மோசடி சம்பந்தமாக முன்னாள் ஆளுநரை கைதுசெய்ய சர்வதேச காவற்துறையினர் சிகப்பு அறிக்கை பிடியாணையை அண்மையில் பிறப்பித்தனர். அதேவேளை மிக் விமான கொள்வனவில் நடந்துள்ளதாக கூறப்படும் நிதி மோசடி தொடர்பில் ரஷ்யாவுக்கான இலங்கையின் முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்கவை கைதுசெய்யவும் சிகப்பு அறிக்கை பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளதுடன் அவரும் அதனை எதிர்த்து மேன்முறையீடு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.