Home இலங்கை “உங்கள் எளிமையும், மனித வாஞ்சையும்  உங்களை எங்கள் சனங்களின் ஜனாதிபதி ஆக்கிவிடாது”

“உங்கள் எளிமையும், மனித வாஞ்சையும்  உங்களை எங்கள் சனங்களின் ஜனாதிபதி ஆக்கிவிடாது”

by admin

குளோபல் தமிழ் செய்திகளுக்காக தீபச்செல்வன்

மைத்திரிபால சிறிசேன குறித்து மகிந்த ராஜபக்சவின் தரப்பினர் கடுமையான விமர்சனம் செய்தனர். மைத்திரபால சிறிசேன ஈழத்தையே வழங்கப்போகிறார் என்றும் தென்னிலங்கையில் அவர்கள் பிரச்சாரம் செய்தனர். அப்போது தமிழ் மக்களின் இன்றைய முதன்மைப் பிரதிநிதியான இரா. சம்பந்தன் கூறுகையில் மைத்திரிபால சிறிசேனவை ஒரு நெல்சன் மண்டேலா ஆக்கும் முயற்சியிலும் ஒரு மகாத்மா காந்தி ஆக்கும் முயற்சியிலும் இறங்கியிருப்பதாகவும் அவருக்கு சமாதானத்திற்கான நோபல் பரிசு பெற்றுக் கொடுக்கக்கூடிய முன்னுதாரணமான நடவடிக்கைகளில் தாமும் அரசும் ஈடுபடுவதாகவும் கூறினார்.

மைத்திரிபால சினிசேன ஆட்சிப் பொறுப்பேற்று மூன்று ஆண்டுகள் கடந்துள்ள இந்த நிலையில் அவருக்கு சமாதானத்திற்கான நோபல் பரிசைப் பெற்றுக் கொடுப்பதை காட்டிலும் நடிப்புக்கான ஒஸ்கார் விருதை பெற்றுக்கொடுக்கும் நடவடிக்கையில் எவரேனும் முயற்சி செய்வதே பொருத்தமுடையது. அரசியலில் உண்மையான தலைவர்களைக் காட்டிலும் உண்மையான தலைவர்களைப் போல் நடிப்பர்களை் பலரைப் பார்த்திருக்கிறோம். மிக உன்னதமாக மக்கள் மனதை வென்றுவிடக்கூடிய தலைவர்கள்தான் பின்னாளில் தேசம் கடந்து மொழிகடந்து நாடு கடந்து வாழ்கிறார்கள். உலக சமூகத்தின் முன்னாள் முன்னுதாரணமானவர்களாக மிளிர்கிறார்கள்.

மைத்திரிபால சிறிசேன இலங்கையில் ஆகச்சிறந்த ஜனாதிபதி என்பதை அவருக்கு அருகில் இருப்பவர்களும் சில ஊடகங்களும் கூட பேசுகின்றன. எல்லோரும் நடக்கும் தெருவில் அவர் உடற்பயிற்சி செய்கிறார் என்றும் காலிமுகத்திடலில் மரத்தின் கீழ் இருந்து சாதாரணமாக மக்களுடன் உரையாடுகிறார் என்றும் சிரட்டையில் அவர் தேநீர் குடிக்கிறார் என்றும் விமானத்தில் அருகில் உள்ள பயணியுடன் சாதாரணமாக உரையாடுகிறார் என்றும் அதனால் ஆகச்சிறந்த மனிதர் என்றும் அவர் குறித்து அவ்வப்போது, குறிப்பாக இணையங்களில் கவர்ச்சிப் பதிவுகள் எழுதப்படுகின்றன.

ஒருமுறை கண்டிக்குச் செல்லும்போது சிறுமி ஒருத்தி ஜனாதிபதி மைத்திரியின் வாகனத்தை நோக்கி ஓடி வந்தமையால், அவர் வாகனத்தை விட்டிறங்கி அந்த சிறுமியை சந்தித்து அவளை மகிழச்சிப் படுத்தினாராம். ஆகச்சிறந்த மனிதர்தான். ஆனால் தமிழ் சிறுமி ஒருத்தியும் தமிழ் சிறுவன் ஒருத்தனும் தம் தந்தையை அனுப்பி வையுங்கள் என்று நேரில் சென்று கேட்டதற்கு, புதுவருத்திற்குள் உங்கள் அப்பாவை அனுப்புகிறேன் என்று கூறிய ஜனாதிபதி இன்னமும் அனுப்பவில்லையே. தென்னிலங்கை சிறார்களை மடியில் தூக்கி வைத்து குழந்தைகளின் ஜனாதிபதியாக இருக்கும் மைத்திரிபால சிறிசேன ஈழக் குழந்தைகளை ஏமாற்றுகிறார் அல்லவா?

தென்னிலங்கையில் மரத்தடிகளில் மக்களை சந்திக்கும் மைத்திரிபால சிறிசேன வடக்கு கிழக்கிற்கு வரும்போது ஏன் தெருவோரமாக வருடக்கணக்கில் இருந்து போராடும் தாய்மார்களுக்கு அவர்களின் பிள்ளைகள் எங்கே? அவர்களுக்கு என்ன நடந்தது என்பதை சொல்லவில்லை? வலி வடக்கு முகாம் ஒன்றிற்குள் சென்று அங்கு சிறிது நேரம் இருந்த ஜனாதிபதி ஏன் இன்னமும் கேப்பாபுலவு நிலங்களையும் வலி வடக்கின் நிலங்களையும் விடுவிக்கவில்லை? இலங்கை ஜனாதிபதி தெற்கிற்கு மாத்திரமே ஆகச்சிறந்த ஜனாதிபதியாக, ஆகச்சறிந்த மனிதராக இருக்க விரும்புகிறாரா? வடக்கு கிழக்கு மக்களை தன்னுடைய பிரசைகளாக அவர் கருதவில்லையா? எங்கள் தெருவில் போராடும் அவர்களும் தனித் தமிழீழம் கேட்கின்றனர் என கூறுகிறாரா?

ஏனெனில், வெளிநாடு ஒன்று சென்றபோது, அவருக்கு எதிராக ஈழத் தமிழர்கள் போராடியபோது, ஈழவாதிகளுடன் பேசத் தயார் இல்லை என்று மைத்திரிபால சிறிசேன அவர்கள் கூறியுள்ளார். நாட்டில் தமிழீழத்தை கைவிட்டு விட்டோம், என்று நீதிமன்றத்தில் தமிழர் தரப்பு சத்தியம் செய்துவிட்டடு இலங்கை நாட்டுக்குள் தமிழர்களுக்கு சுயாட்சி ஒன்றை வழங்குங்கள் என்ற கேள்விக்கு நீங்கள் தலைசாய்த்தீர்களா? அல்லது அவர்களும் ஈழவாதிகளா? சாதாரணமாக ஒரு சுயாட்சித் தீர்வை வழங்குவதைக்கூட ராஜபக்சேக்களைப்போலவே பிரிவினைவாதம் அல்லது மற்றொரு நாடு என்ற அடிப்படையிலேயே நீங்களும் அணுகுவீர்கள் ஆயின் நீங்கள் யாருக்கான ஆகச்சிறந்த மனிதர்?

மைத்திரிபால சிறிசேன அவர்களே! நீங்கள் வரலாற்றில் ஆகச்சிறந்த மனிதராக இருங்கள். எளிமையானவராக ஆடம்பரமற்றவராக இருங்கள். அதைப்போலவே தெற்கில் வெளிப்படுத்தும் உண்மையை வடக்கு கிழக்கிலும் வெளிப்படுத்துங்கள். தெற்கில் காட்டும் மக்கள் பாசத்தை மனித நேயத்தை வடக்கு கிழக்கிலும் காட்டுங்கள். உண்மையும் மனிதநேயமும் எங்கும் ஒன்றுதான். அது வடக்கு கிழக்கில் ஒருவிதமாகவும் தெற்கில் இன்னொருவிதமாகவும் இருப்பதில்லை. அப்படி இருந்தால் அது இனவாதம். அது புறக்கணிப்பு. அது இனவொறுத்தல். அது பாரபட்சம். இவைகளால்தான் நாம் இத் தீவில் ஒடுக்கி அழித்து இனவழிப்புக்கு உட்படுத்தப்பட்டோம். இவைகளால்தான் இத் தீவின் அநீதிக்கு எதிராக ஈழத் தமிழர்கள் ஆயுதம் ஏந்தி போராடும் நிலை ஏற்பட்டது.

சர்வதேச அரசியல் சூழலை எதிர்கொள்ளும் ஒரு நிலைக்காக, உங்களையே கொல்ல வந்த விடுதலைப் புலி இளைஞனை விடுவித்தீர்கள். தன் கணவனை காண போராட்டம் புரிந்து இறந்துபோன பெண்ணின் பிள்கைள் அநாதரவாக இருக்கின்றனர். அவர்களின் தந்தை ஆனந்தசுதாகரனை மாத்திரம் விடுவிக்க ஏன் உங்களுக்கு இரக்கம் வரவில்லை. எங்கள் பெண்கள் எத்தனை பேர் இன்னும் தங்கள் கணவருக்காக தம்மை உருகி அழிப்பது? எங்கள் பிள்ளைகள் இன்னும் எத்தனை காலம் சிறைகளில் வாடும் தந்தையருக்காக காத்திருப்பது? உங்கள் சொல்லும் செயலுமே நீங்கள் இலங்கை வரலாற்றின் ஆகச்சிறந்த மனிதரா? ஆகச்சிறந்த தலைவரா? ஆகச்சிறந்த நடிகரா என்பதை எழுதப்போகிறது. கித்துல் மரத்தின் கீழான உங்கள் எளிமையும் கண்டித் தெருவில் காட்டும் மனித வாஞ்சையும் உங்களை எங்களின் ஜனாதிபதி ஆக்கிவிடாது.

நேற்றைய மேதினக் கூட்டத்தில், பலரது குருதியால்தான் இந்த தேசத்தை மீட்டிருப்பதாக கூறியிருக்கிறீர்கள். அதே போரில் லட்சக்கணக்கான ஈழத் தமிழ் மக்கள் கொல்லப்பட்டார்கள் என்பதையும் அவர்களை கொன்றே இந்த நாட்டை ஒன்றிணைத்தோம் என்பதையும் கூறிவிடுங்கள். இறுதி யுத்த களத்தில் சரணடைந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கும் அரச படைகளிடம் கையளிக்கப்பட்டவர்களுக்கும் என்ன நடந்தது என்பதையும் ஆகச்சிறந்த மனிதராக கூறிவிடுங்கள். அந்த அநீதிக்கு நீதியை வழங்க என்ன செய்வீர்கள் என்பதையும் சொல்லிவிடுங்கள். அறுபது ஆண்டுகளாக தமிழர்கள் உரிமை கோரிப் போராடடி வருகின்றளனர். முப்பது ஆண்டுகளாக அதற்காக ஆயுதமும் ஏந்தியிருந்தனர். ஆகச்சிறந்த மனிதராக அதற்கும் என்ன தீர்வை வழங்குவேன் என்பதையும் சொல்லி விடுங்கள்.

குளோபல் தமிழ் செய்திகளுக்காக தீபச்செல்வன்

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More