குளோபல் தமிழ்ச் செய்தியாளர்…
அடுத்து நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளர் யார் என்பதில் கூட்டு எதிர்க்கட்சிக்குள் பிரச்சினை ஏற்பட்டுள்ளதாக முன்னிலை சோசலிசக் கட்சியின் செயலாளர் குமார் குணரட்னம் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நடைபெற்ற மே தினக் கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார். ஜனாதிபதித் தேர்தலில் மகிந்த ராஜபக்சவுக்கு போட்டியிட முடியாது. கோத்தபாய ராஜபக்ச ஜனாதிபதித் தேர்தலில் வேட்பாளராக போட்டியிடுவதையும் மகிந்த ராஜபக்ச விரும்பவில்லை. மகிந்த ராஜபக்ச, தனக்கு பின்னர் தனது மகன் நாமல் ராஜபக்சவை நாட்டின் தலைவராக கொண்டு வர வேண்டும் என எண்ணுகிறார். இதனால், கோத்தபாய வருவதை அவர் விரும்பவில்லை. இதன் காரணமாக மகிந்த ராஜபக்ச ஜனாதிபதித் தேர்தலை நடத்துமாறு கோராது, பொதுத் தேர்தலை நடத்துமாறு கோருவதாகவும் குமார் குணரட்னம் குறிப்பிட்டுள்ளார்.