இலஞ்சம் பெற்ற சம்பவம் தொடர்பாக கைதுசெய்யப்பட்டுள்ள ஜனாதிபதி பணிக்குழுவின் தலைமை அதிகாரி மஹாநாம மற்றும் அரச மரக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் பியசேன திஸாநாயக்க ஆகியோர் குறித்து ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
சிரேஷ்ட அதிகாரிகள் இலஞ்சம் பெற்றுள்ளமை தொடர்பில் ஜனாதிபதி கவனம் செலுத்தியுள்ளதுடன் அவர்களை உடனடியாக சேவையில் இருந்து இடைநிறுத்துமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உத்தரவிட்டுள்ளார்.
இலஞ்சம், ஊழலுக்கு எதிராக அரசாங்கத்தின் நிரந்தர கொள்கையை அமுல்படுத்துவது மற்றும் சுயாதீன ஆணைக்குழுக்கள் ஸ்தாபிக்கப்பட்டமை என்பன இதன் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்னன.
சட்டத்தை அமுல்படுத்தும் பொறுப்பை கொண்டுள்ள அதிகாரிகள் தமது பணிகளை சரியான முறையிலும் சுயாதீனமாகவும் பக்கசார்பின்றியும் செயற்பட்டுள்ளமை குறித்து மகிழ்ச்சியடைவதாக ஜனாதிபதி கூறியுள்ளதாகவும் ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
பத்து கோடி ரூபாய் இலஞ்சம் கோரி அதில் இரண்டு கோடி ரூபாயை முற்பணமாக பெற்றுக்கொள்ளும் போதும் ஜனாதிபதி பணிக்குக்குழுவின் தலைமை அதிகாரி ஐ.ஏ.கே.எஸ். மஹாநாம மற்றும் அரச மரக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் டி. திஸாநாயக்க ஆகியோரை தாம் நேற்று கைதுசெய்துள்ளதாக இலஞ்ச ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இந்திய முதலீட்டாளர் ஒருவர் கந்தளாய் பிரதேசத்தில் சீனித் தொழிற்சாலை ஒன்றை ஸ்தாபிக்க அனுமதி வழங்க இந்த அதிகாரி, அந்த முதலீட்டாளரிடம் இந்த பணத்தை இலஞ்சமாக கேட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட அரச மரக் கூட்டுத்தாபனத்தின் தலைவர், முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் செயலாளராகவும் பணியாற்றியுள்ளார்.
இந்த அதிகாரிகள் இலஞ்சமாக கோரிய பணத்தில் 2 கோடி ரூபாயை முற்பணமாக கொழும்பில் உள்ள 5 நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் வைத்து பெற்றுக்கொள்ளும் போது கையும் களவுமாக பிடிப்பட்டுள்ளனர்.