குளோபல் தமிழ்ச் செய்தியாளர்..
உத்தேச புதிய அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கும் போது அதிகார பரவலாக்கம் உட்பட தீர்க்கப்பட வேண்டிய பிரச்சினைகளை உள்ளடக்காது, நிறைவேற்று அதிகாரத்தை ஒழிப்பதற்காக மாத்திரம் புதிய அரசியலமைப்புச் சட்டம் கொண்டு வரப்படுமாயின் அதனை ஆதரிப்பதில்லை என தேசிய அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் சிறுபான்மை கட்சிகள் தீர்மானித்துள்ளன.
புதிய அரசியலமைப்புச் சட்டம் உருவாக்கப்படும் போது தேசிய பிரச்சினைக்கு தீர்வை வழங்குவது, தேர்தல் முறையில் மாற்றங்களை ஏற்படுத்துவது உட்பட முக்கிய பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்கும் வகையில் அது அமைய வேண்டும் என்பது தமது கட்சி உட்பட சிறுபான்மை கட்சிகளின் நிலைப்பாடு என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் செயலாளர் நாயகம் நிசார் காரியப்பர் தெரிவித்துள்ளார்.
புதிய அரசியலமைப்புச் சட்டத்தை கொண்டு வரும் போது சர்வஜன வாக்கெடுப்போ அல்லது அதற்கு தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும் என்பதே தமது கட்சியின் நிலைப்பாடு எனவும் அவர் கூறியுள்ளார். ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், ஜனநாயக மக்கள் முன்னணி, தேசிய தொழிலாளர காங்கிரஸ், மலையக மக்கள் முன்னணி, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் கடந்த பொதுத் தேர்தலில் ஐக்கிய தேசிய முன்னணியின் கீழ் போட்டியிட்டு, தேசிய அரசாங்கத்தில் அங்கம் வகித்து வருகின்றன.