தன்னைக் கொலை செய்ய முயன்ற குற்றத்துக்காக நீண்டகாலம் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளுக்கு வெசாக்கை முன்னிட்டு மன்னிப்பு வழங்குமாறு, முன்னாள் அரச தலைவர் சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க விடுத்த வேண்டுகோள், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் நிராகரிக்கப்பட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
ஜனாதிபதியாக சந்திரிகா குமாரணதுங்க பண்டாரநாயக்கா பதவி வகித்த போது, அவர் மீது தாக்குதல் நடத்தத் திட்ட மிட்ட, உதவிய குற்றத்துக்காக தமிழ் அரசியல் கைதிகளுக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட் டுள்ளது. சந்தேக நபர்களாக மிக நீண்ட காலமாக சிறைவாசம் அனுபவித்திருந்த நிலையிலேயே அவர்களுக்கு சிறைத்தண்டனை விதித்து தீர்பளிக்கப்பட்டது.
இந்த நிலையில், வெசாக்கை முன்னிட்டு அவர்களை மன்னிப்பில் விடுவிக்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு, முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரணதுங்க பண்டாரநாயக்கா கடிதம் எழுதியிருந்தார். இது தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருக்கும் அவர் தெரியப்படுத்தியிருந்தார்.
இதுவரையில் அவரது கோரிக்கைக்கு அமைவாக அரசியல் கைதிகளுக்கு மன்னிப்பு வழங்கப்படவில்லை. ஜனாதிபதி மைத்திரிபாலசிரிசேன, முன்னாள் ஜனாதிபதியின் கோரிக்கையை ஏற்றுக் கொள்ளாமையினாலேயே அவர்களை விடுவிக்கவில்லை எனக் கூறப்படுகின்றது.
இதேவேளை, கிளிநொச்சியைச் சேர்ந்த அரசியல் கைதியான ஆனந்தசுதாகரது பிள்ளைகளை அரச தலைவர் மைத்திரிபால நேரில் சந்தித்திருந்தார். ஆனந்தசுதாகரை பொது மன்னிப்பில் சித்திரைப் புத்தாண்டுக்கு விடுவிப்பதாகத் தெரிவித்திருந்தார். ஆனால், இன்று வரையில் ஆனந்த சுதாகர் விடுவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.