குளோபல் தமிழ்ச் செய்தியாளர்…
எதிர்வரும் 7ம் திகதி நுவரெலியாவில் நடைபெறவுள்ள இலங்கை தொழிலாளர் காங்கிரசின் மேதின நிகழ்வில் மாற்று தொழிற்சங்கத்தை சேர்ந்த இருவர் இணைந்து கொள்ள இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இது தொடர்பாக தெரியவருவதாவது
தற்பொழுது மத்திய மாகாண சபையின் உறுப்பினராக இருக்கின்ற ஒருவரும் ஏற்கனவே இலங்கை தொழிலாளர் காங்கிரசில் இருந்து விலகி விவசாயிகளின் நன்மைகளுக்கென ஒரு அமைப்பை ஏற்படுத்தி நுவரெலியாவில் செயற்பட்டு வருகின்ற ஒருவருமே நாளை நடைபெறுகின்ற இ.தொ.கா வின் மேதின மேடையில் மீண்டும் இணைந்து செயற்படவுள்ளதாக நம்பகமான தகவல்கள் தெரிவிக்கின்றன.
இவர்கள் இருவரும் ஏற்கனவே இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் உறுப்பினர்களாக இருந்து செயற்பட்டு வந்தவர்கள். கட்சித் தலைமையுடன் தலைமைத்துவத்துடன் ஏற்பட்ட முறுகல் நிலை காரணமாகவே இவர்கள் இ.தொ.காவில் இருந்து வெளியேறி தங்களுக்கென தனியான ஒரு அமைப்பை ஏற்படுத்தி செயற்பட்டு வருகின்ற நிலையிலேயே இவர்கள் மீண்டும் இணையவுள்ளதாக தெரியவருகின்றது.
இவர்கள் இணையும் பட்சத்தில் இவர்களுக்கு எவ்வாறு பொறுப்புகள் வழங்கப்படும் என்பது தொடர்பாக தாங்களுக்கு தெரியாது எனவும் அது தொடர்பாக இறுதி தீர்மானத்தை இ.தொ.கா வின் தலைவரும் செயலாளரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ஆறுமுகன் தொண்டமானே தீர்மானிப்பார் எனவும் இ.தொ.கா வின் முக்கியஸ்தர் ஒருவர் தெரிவிக்கின்றார்.
இதே நேரம் தலவாக்கலையில் நடைபெறவுள்ள தமிழ் முற்போக்கு கூட்டணியின் மேதின கூட்டத்திலும் மாற்று தொழிற்சங்கங்களை சார்ந்தவர்கள் சிலர் இணைந்து கொள்ளவுள்ளதாக முண்னனியின் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் தெரிவிக்கின்றார்;.அவர்கள் யார் என்ற விபரத்தை கூறுவதற்கு அவர் மறுத்துவிட்டார்.நாளை நடைபெறவுள்ள மேதின கூட்டங்களின் மேடைகளில் யார் எங்கே இணையப் போகின்றார்கள் என்பதை பொறுத்திருந்த பார்க்க வேண்டும்.
அதே நேரம் கடந்த காலங்களில் ஒரு சிலர் மேதின மேடைகளில் இணைந்து கொண்ட பொழுது அவர்களை தகாத வார்த்தைகளால் பேசி மேடையை விட்டு இறக்கிய சம்பவங்களும் நடைபெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.