187
இரணைதீவு மக்களின் வாழ்வியல் உரிமைகளை மீட்டெடுக்கும் வரை தமிழ் தேசியக் கூட்டமைப்பினராகிய நாம் தொடர்ந்து செயற்படுவோம் என தமிழரசுக் கட்சியின் தலைவரும் யாழ்.மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினருமான மாவை.சேனாதிராசா இரணைதீவில் தெரிவித்தார்.
தமது வாழ்விடங்களைத் தம்மிடம் ஒப்படைக்குமாறு கோரி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த இரணைதீவு மக்களின் கோரிக்கைகளுக்கு அரசாங்கம் செவி சாய்க்காத நிலையில், கடந்த வாரம் தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன், வடமாகாணசபை உறுப்பினர் சு.பசுபதிப்பிள்ளை ஆகியோரது துணையுடன் படகுகளில் ஏறி தமது பூர்வீக வாழ்விடமான இரணைதீவுக்குச் சென்று அங்கு தற்போது தங்கியுள்ளார்கள்.
அங்கு அவர்களது வாழ்விடங்கள் சிதைவடைந்த நிலையிலும் பற்றைக் காடு பற்றியும் காணப்படுகின்றமையால் அங்குள்ள தேவாலயத்திலும் தேவாலயத்திற்கு அருகிலும் தங்கியுள்ளார்கள். அவர்களுக்கு அங்கு போதிய அடிப்படை வசதிகள் இல்லாத நிலை காணப்படுகின்றது.
இரணைதீவில் தரையிறங்கி தங்கியுள்ள மக்களைச் சந்திப்பதற்காக உலருணவுப் பொதிகளுடன் நேற்றைய தினம் தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினரும் தமிழரசுக் கட்சியின் தலைவருமான மாவை.சேனாதிராசா, பாராளுமன்ற உறுப்பினர்களான சிவஞானம் சிறீதரன், சாள்ஸ் நிர்மலநாதன் மற்றும் வடமாகாணசபை உறுப்பினர் த.குருகுலராசா, பூநகரி பிரதேசசபை தவிசாளர் அ.ஐயம்பிள்ளை, கரைச்சி பிரதேசசபை தவிசாளர் அ.வேழமாலிகிதன் உட்பட்ட குழுவினர் இரணைதீவுக்குச் சென்றிருந்தனர்.இதன் போது அங்குள்ள மக்களுக்கு உலருணவுப் பொதிகளை வழங்கி வைத்து மக்கள் மத்தியில் கருத்துரைத்த பாராளுமன்ற உறுப்பினர் மாவை.சேனாதிராசா கூறுகையில்,
இரணைதீவு உள்ளிட்ட தமிழர் தாயகப் பகுதிகளிலிருந்து ஆக்கிரமிப்பாளர்கள் வெளியேறி எமது மக்களின் நிலத்தில் எமது மக்கள் நிம்மதியாக வாழ வேண்டும் எமது மக்களுக்கு விடுதலை கிடைக்க வேண்டும் என்பதற்காக தமிழ் தேசியக் கூட்டமைப்பினராகிய நாம் தொடர்ந்தும் போராடி வருகின்றோம். எமது மக்களின் நிலங்கள் அவர்களிடமே வழங்கப்பட வேண்டும் என நாம் பாராளுமன்றத்திலும் சர்வதேச அரங்கிலும் தொடர்ந்தும் குரல்கொடுத்து வருகின்றோம். அதன் விளைவாக ஆக்கிரமிப்பாளர்கள் கையகப்படுத்தி வைத்திருந்த இராணுவத்தின் பிடியிலிருந்த சில பகுதிகள் எமது மக்களிடம் வழங்கப்பட்டுள்ள போதிலும் இன்னும் பெருமளவான மக்கள் வாழ்விடங்கள் இராணுவத்தின் பிடியிலுள்ளன. அந்த நிலங்களும் எமது மக்களிடம் வழங்கப்பட வேண்டும் என்பதற்காக நாம் தொடர்ந்தும் போராடி வருகின்றோம்.
இரணைதீவு மக்களுடைய பூர்விக வாழ்விடங்கள் இன்னமும் உங்களிடம் அரசினால் சட்டப்படி கையளிக்காத நிலை காணப்படுகின்றது. இந்த நிலை மாற வேண்டும். இரணைதீவு மக்களுடைய பூர்விக வாழ்விடங்கள் அவர்களிடம் கையளிக்கப்பட வேண்டும் என்பதற்காக எமது பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்கள் தொடர்ந்தும் பாராளுமன்றத்தில் குரல்கொடுப்பதுடன் தன்னாலான முயற்சிகளை எடுத்துள்ளார். நீங்கள் இங்கு வருவதற்குக்கூட உங்களுக்குத் துணையாக அவர் இருந்துள்ளார். அண்மையில்கூட உங்களது வாழ்வுரிமையை வலியுறுத்தி ஜனாதிபதி அவர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார். உங்களது வாழ்விடம் உங்களிடம் வழங்கப்பட வேண்டும் என்பதற்காக அவர் பல வழிகளில் முயற்சித்து வருகின்றார். இன்று கூட அவரது ஒழுங்கமைப்பில் தான் நாம் இங்கு வந்து உங்களைச் சந்தித்துள்ளோம்.
எனவே எமது மக்களது பூர்விக வாழ்விடங்கள் எமது மக்களிடம் கையளிக்கப்பட்டு எமது மக்களும் சகல உரிமைகளையும் பெற்று நிம்மதியாக வாழும் வரை தமிழ் தேசியக் கூட்டமைப்பினராகிய நாம் ஓயப்போவதில்லை. எமது மக்களுக்கான விடுதலை நோக்கிய எமது நீதியின் வழியான பயணம் தொடரும் என்றார்.
Spread the love