குளோபல் தமிழ்ச் செய்தியாளர்…
ஜனாதிபதியின் பிரதம அதிகாரி கலாநிதி ஐ.எச்.கே. மஹானாம முக்கிய பிரபு ஒருவரின் சார்பில் லஞ்சம் பெற்றுக் கொண்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. அண்மையில், இந்திய வர்த்தகர் ஒருவரிடமிருந்து இரண்டு கோடி ரூபா லஞ்சம் பெற்றுக் கொண்ட போது கலாநிதி மஹானாம மற்றும் அரச மரக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் பீ.திஸாநாயக்க ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
காணி கொடுக்கல் வாங்கல் ஒன்று தொடர்பிலேயே இவ்வாறு லஞ்சம் பெற்றுக்கொள்ளப்பட்டிருந்தது. கொழும்பின் நட்சத்திர விடுதி ஒன்றின் வாகனத் தரிப்பிடத்தில் வைத்து இந்திய வர்த்தகரிடமிருந்து லஞ்சம் பெற்றுக் கொண்ட போது, லஞ்ச ஊழல் மோசடி தவிர்ப்பு ஆணைக்குழுவின் அதிகாரிகள் இரண்டு அதிகாரிகளையும் கைது செய்திருந்தனர். இந்த இருவரையும் உடனடியாக பணி இடைநிறுத்தம் செய்யுமாறு ஜனாதிபதி உத்தரவிட்டிருந்தார். இந்த நிலையில், இந்த கொடுக்கல் வாங்கல்களுக்காக மொத்தமாக 10 கோடி ரூபா லஞ்சம் பேசப்பட்டதாகவும், முற்பணமாக இரண்டு கோடி ரூபா செலுத்தப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இந்த லஞ்சத்தில் ஒரு தொகுதி மற்றுமொரு முக்கிய பிரபு ஒருவருக்கு கொடுக்கப்படவிருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.