முதல் நாளன்று தமிழ்த்தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன், இரண்டாம் நாள் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் எஸ்.கஜேந்திரன் ஆகியோர் அங்கு சென்று அந்த மக்களைச் சந்தித்து தமது ஆதரவை வழங்கியிருந்தனர். இந்த மகக்ளின் போராட்டத்திற்குத் தமது ஆதரவைத் தொடர்ந்து வழங்கியதுடன், அவர்களுக்கான உதவிகளையும் செய்ததைப் போன்று அந்த மக்கள் மீள்குடியேற்றப்படும் வரையில் தாங்கள் தொடர்ந்தும் உதவி செய்யத் தயாராக இருப்பதாக செய்தியாளர்களிடம் கஜேந்திரன் தெரிவித்தார்.
இதேவேளை, இரணைதீவுக்குச் சென்ற ஈபிஆர்எல்எவ் கட்சியின் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன் அந்த மக்களுக்கான ஒரு தொகுதி நிவாரண உணவுப் பொருட்களை வழங்கியிருந்தார்.
சட்டத்தரணி கே.எஸ்.ரட்னவேலுடன் மனம் திறந்து உரையாடிய ஊர் மக்கள், தங்களது பழைய ஊர் வாழ்க்கையை நினைவுகூர்ந்தனர். அத்துடன் காடாகிக் கிடக்கின்ற தமது குடியிருப்புக்களையும், அழிந்து சிதைந்துள்ள அந்தோனியார் ஆலயம் மற்றும் தமது வீடுகளின் எச்சங்களையும் அவர்கள் எங்களுக்குச் சுற்றிக்காட்டினர்.
செபமாலை மாதா ஆலயத்துக்கு அருகில் அமைந்துள்ள சிதைந்த கட்டிடங்களைக் கொண்ட பாடசாலையை அண்மித்ததாக கடற்கரையோரமாகச் செல்கின்ற பற்றைகள் வளர்ந்த வீதியொன்று மட்டுமே ஆட்கள் நடமாடக் கூடியதாக உள்ளது. ஏனைய இடங்கள் அனைத்தும் மரண்களும் செடிகளும் ஓங்கி வளர்ந்து வனாந்தரமாகவே காட்சியளிக்கின்றன. சிலருடைய வீடுகளுடன் இருந்த கிணறுகளும்கூட சிதைந்த நிலையிலேயே காணப்படுகின்றன. ஆடு மாடு கோழி வளர்ப்பதில் அந்த ஊர் மக்கள் அதிக ஈடுபாடு கொண்டிருந்தனர். மந்தைகளுக்குக் குடிநீர் தட்டுப்பாடின்றி கிடைப்பதற்காக ஊர் மனைகளுக்கு மத்தியில் ஆங்காங்கே சிறிய மோட்டைகள் எனப்படும் நீர்த்தேக்க நிலைகளையும் அமைக்கப்பட்டிருந்ததைக் காண முடிந்தது.
அடர்ந்து வளர்ந்த மரங்களிடையே இலந்தைப்பழ மரங்கள் பெருமளவில் காணப்படுகின்றன. அந்த மரங்களில் பெருமளவில் இலந்தைப் பழங்கள் கனிந்திருந்தன. மக்கள் இடம்யெயர்வதற்கு முன்னர் சிறிய அளவிலேயே இலந்தை மரங்கள் காணப்பட்டதாகவும், இடப்பெயர்வின் பின்னர் இலந்தை மரங்கள் பல்கிப் பெருகியிருப்பதாகவும் ஊர்வாசிகள் தெரிவித்தனர்.
ஊர்ப்பெரியவர்களில் அமிர்தநாதன் அந்தோனியும் ஒருவர். அவருக்கு 67 வயது. முதிர்ந்த வயதிலும் உடல் ஆரோக்கியத்துடன் உற்சாகமாகக் காணப்படுகின்றார்.
‘இரணைதீவிலதான் பிறந்தனான். என்னுடைய அப்பா அம்மாவும் இங்கதான் பிறந்தவை. என்னுடைய அப்பாவோட அப்பாகூடி இங்கதான் பிறந்து வளர்ந்தவர். அதெல்லாம் எங்களுக்கு வடிவா தெரியும். இப்படியெல்லாம் இருந்துதான் நாங்கள் 92 ஆம் ஆண்டு இங்க இருந்து இடம்பெயர்ந்து போனநாங்கள்’ என தன்னைப் பற்றி அந்தோனி கூறினார்.
‘எங்களுக்கு முக்கிய தொழில் மீன்பிடிதான். அதை வச்சுக்கொண்டு ஆடு, மாடு, கோழி யெல்லாம் எந்தவிதமான கட்டுப்பாடும் இல்லாமல் மேயவிட்டு வளர்க்கலாம். அதுக்கு காவல் போட வேண்டியதில்ல. ஆனால் இப்ப நிலைமை அப்படியில்ல. அப்படி ஆடு, மாடு, கோழி வளர்க்க முயற்சித்தாலும் இங்க பெருகி இருக்கிற நாய்கள் விடாது. நூற்றி ஐம்பதுக்கும் மேல நாய்கள் மட்டும் இங்க இப்ப இருக்குது. அவ்வளவு நாய்களையும் இங்க இருந்து வெளியில கடத்த வேணும். அல்லது உரிய ஆட்கள் வந்து அதுகள அப்புறப்படுத்த வேணும். ஏனெண்டா இப்ப பாருங்க மாடுகள் தாராளமா நிற்குது. ஆனால் கன்றுகள் இல்லை. சின்ன பசுக்கன்றுகள் இல்லை.
மாடுகள் கண்டு போட்ட உடனேயே ஒரு மணித்தியாலம் இரண்டு மணித்தியாலத்துக்குள்ள நாய்கள் வந்து அந்த கண்டுகள பிடிச்சுக் குதறி கொன்று போடுது. ஒரு மாடு கண்டுபோட்டதெண்டால் அதைச் சுற்றி பத்து நாய்கள் நிக்கும். கண்டுகள் தப்ப ஏலாது. அப்ப பெரிய மாடுகள் இருக்குதே தவிர, மாடு உற்பத்தியாக வழியில்லை. இப்ப இங்க நாங்கள் ஆடு வளர்க்கிறதெண்டால் வெளியில இருந்து கொண்டு வந்துவிட்டா நாய்கள் விடாது. இப்படி பல பிரச்சினைகள் இருக்கு. அந்தப் பிரச்சினைகள அரசாங்கம் எங்களுக்கு நிவர்த்தி செய்ய வேணும்’ என்றார் அந்தோனி.
மீள்குடியேற்றத்திற்கு அனுமதி வழங்கப்படாத போதிலும், தேவாலயத்தில் தங்கி, அருகில் உள்ள பாடசாலையின் இடிந்த கட்டிடத்தில்; பொது சமையல் செய்கின்ற அந்த மக்கள் அங்கிருந்து திரும்பிப் போகப் போவதில்லை என உறுதியாகக் கூறுகின்றார்கள்.
அதேவேளை, தாங்கள் தங்கியுள்ள இடத்தில் இருந்து சுமார் 3 கிலோ மீற்றர் தொலைவு சென்றே இப்போது குடிநீர் பெற வேண்டியிருப்பதனால், குடிநீரை எடுத்து வருவதற்காக இரு சக்கர உழவு இயந்திரம் ஒன்று அவசரமாகத் தேவைப்படுவதாக அவர்கள் தெரிவித்தனர். இந்த இயந்திரத்தை அரசாங்க அதிகாரிகளோ, பொது நிறுவனங்களோ அல்லது தனியாராவது வழங்கி உதவ முன்வர வேண்டும் என்றும் அந்த மக்கள் கோருகின்றனர்.
மீள்குடியேற்றத்திற்கு அனுமதி வழங்கப்பட வேண்டும். அதற்கு முன்னதாக செபமாலைமாதா ஆலயத்தில் தங்கியுள்ள நூற்றுக்கும் மேற்பட்டவர்களுக்கு தற்காலிகக் கொட்டில்களும் சமையல் வசதிகள் உட்பட அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்கள் கோருகின்றார்கள்.
மூன்று நான்கு வீடுகளில் மாத்திரமே கடற்படையினர் தங்கியிருக்கின்றனர். அங்குள்ள பொது விளையாட்டு மைதானம் மற்றும் அதனைச் சார்ந்த இடங்களும் கடற்படையினரின் பாவனையில் இருப்பதாகத் தெரிவி;க்கப்படுகின்றது.
‘என்னுடைய வீட்டில் நேவி இப்பவும் இருக்குது. பக்கத்தில உள்ள அண்ணருடைய வீடு, எங்கட மாமாவின்ர வீட்டிலயும் நேவி நிரந்தரமா இருக்குது. நேவி இருக்கிறதால இந்த வீடுகள் சேதமடையவில்லை. நல்லா இருக்கு. நாங்கள் எங்களுடைய வீடுகளில போய் நிரந்தரமா வசிக்க வேணும் எண்டுதான் இங்க வந்திருக்கிறம். ஆனால் நேவி வீடுகள விடேல்ல. ஒரு நாலு ஏக்கர் நிலத்திலதான் அவர்கள் இருக்கினம். அதைத்தவிர மற்ற இடங்கள் எல்லாம் சும்மாதான் கிடக்கு. எங்கட வீடுகள விட்டா நாங்க அங்கபோய் நிரந்தரமா குடியிருக்க முடியும். குடியிருந்து கொண்டு எங்கட தொழில்கள செய்ய முடியும். அக்கரையில இருக்கிற பிள்ளைகள் நேரம் கிடைக்கும்போது எங்கள வந்து பார்த்திட்டு திரும்பிப் போகலாம்’ என்று இரணைதீவின் நிலைமைகள் குறித்து அந்தோனி விபரித்தார்.
இரணைதீவைச் சேர்ந்தவர்கள் அந்தப் பகுதி கடற்பரப்பில் மீன்பிடிப்பதை அங்கு நிலைகொண்டுள்ள கடற்படையினர் முதலில் தடைசெய்திருந்தனர். இப்போது அந்தத் தடை நீக்கப்பட்டு மீன்பிடி தொழிலுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதனால், மீள்குடியேற்றத்திற்காக அங்கு சென்று தங்கியிருப்பவர்கள் அந்தத் தீவுப் பகுதியில் தொழில் செய்ய ஆரம்பித்திருக்கின்றார்கள். இருப்பினும் ஒரு சில இடங்களில் வெளிப்பிரதேசங்களில் இருந்து அத்துமீறி வருகின்ற தடைசெய்யப்பட்ட வகையில் வெடிப்பொருட்களைப் பயன்படுத்தி மீன்பிடிப்பதாக குற்றம் சுமத்தப்படுகின்றது.
இருந்த போதிலும் பல வருடங்களுக்குப் பின்னர் தமது சொந்தப் பிரதேசத்திற்குத் திரும்பியுள்ள இரணைதீவு மக்கள் அங்கு தங்கியிருக்கவும், தொழில் செய்யவும் சந்தர்ப்பம் கிடைத்துள்ளதையடுத்து ஓரளவு திருப்தி அடைந்துள்ளனர்.
ஆண்கள் மீன்பிடிப்பதற்காகக் கடலுக்குள் சென்றுள்ள அதேவேளை, மீனவ பெண்களும் கரையோர தொழில் நடவடிக்கைகளில் ஈடுபடத் தொடங்கியிருக்கின்றார்கள். கடலோரத்தில் சிப்பி பொறுக்குதல் அவற்றில் முக்கியமானதாகும். அதேநேரம் கடலோரத்தில் இயற்கையாக வளரும் தாவரங்களில் இருந்தும் உணiவுப் பெற்றுக்கொள்வதாக மீனவப் பெண் ஒருவர் கூறுகின்றார்.
‘மீள் அரிசி என்று ஒன்றிருக்கு. வைகாசி, ஆனி, ஆடி மாதங்களில் கடும் வெப்பத்தில் கடலோரத்தில் புல்லுகள் எல்லாம் பட்டிரும். அப்படி பட்டுப்போன புல்லுகளின் அடியில ஒருவiயான அரிசி இருக்கும். அதை எடுத்து ஒடியல் மா மாதிரி மாவாக்கி தேங்காப்பூவும் சீனியும் போட்டு சாப்பிடுவோம். அதுதான் எங்கட காலைச்சாப்பாடு’ என்றார் அந்தப் பெண்.
அது மட்டுமல்ல. தாழைக்கிழங்கையும் அவர்கள் உணவாகப் பயன்படுத்துவார்கள். அது பற்றியும் அந்தப் பெண் விபரித்தார்.
‘கடலோரத்தில் இருக்கின்ற தாழையில் விளையிற கிழங்கைக் கொண்டு வந்து தோலை உரிச்சுப் போட்டு காய விடுவம். காய்ஞ்ச பிறகு அந்த கிழங்கை மாவாக்கி சாப்பிடுவம். அந்த மாவை சும்மா சாப்பிடுறதில்ல. நண்டு, திருக்கை இதுகள தண்ணீர்விட்டு அவிச்சு அதில அந்த மாவைப் போட்டு கிண்டிட்டு, களி மாதிரி சாப்பிடுவம். இது ரெண்டுமே போஷாக்கான சாப்பாடு. அதைத்தான் நாங்கள் இடம்பெயர முன்னம் இங்க சாப்பிட்டம். ஆனால் இடம்பெயர்ந்து நாங்கள் அங்க போனோம். இது மாதிரியான சாப்பாடு எங்களுக்குக் கிடைக்கேல்ல. அங்க நாங்கள் கூலித் தொழில்தான் செய்தனாங்கள். கூலி வேலை செய்தாத்தான் சாப்பாடு.
இல்லாட்டி கஸ்டம்தான் இருவத்தாறு வருஷங்களுக்குப் பிறகு எங்கள் கடலோரத்தில சிப்பி பொறுக்கவும் கரையோரத் தொழில் செய்யவும் எங்களுக்குச் சந்தர்ப்பம் கிடைச்சிருக்கு. இப்ப நாங்கள் எங்கட மண்ணில சுதந்திரக் காற்றைச் சுவாசிக்கிறம். அந்த உணர்வு எங்களுக்கு நிம்மதிய தந்திருக்கு. மகிழ்ச்சியாகவும் இருக்கு என்று விபரித்தார் அந்தப் பெண்.
கடல் வளமும் நில வளமும் நிறைந்த இரணைதீவு வாழ்க்கை இயற்கையோடு ஒட்டிய மனதுக்கு இசைவான வாழ்க்கையாக அந்த மக்களுக்கு அமைந்திருந்தது. அந்த வாழ்க்கை மீண்டும் கிடைக்க வேண்டும் என்பதே அவர்களின் எதிர்பார்ப்பு. அந்த வாழ்க்கைக்காக அவர்கள் பெருநிலப்பரப்பில் இரணைமாதாநகரில் ஆரம்பித்த மண் மீட்புப் போராட்டம் பாக்குநீரிணைக் கடலில் இரணை தீவின் செபமாலைமாதா ஆலயத்தில் இப்போது தொடர்கின்றது.
இந்த மக்களைச் சந்தித்து அவர்களுடைய வாழ்க்கை நிலைகுறித்து கேட்டறிந்த சட்டத்தரணி கே.எஸ்.ரட்னவேல், தமது மூதாதையர்கள் வாழ்ந்த வாழ்க்கையை வாழ்வதற்காக சுய எழுச்சி பெற்று இந்த மக்கள் இங்கு வந்துள்ளது வரலாற்று முக்கியத்துவம் மிக்கதொரு நிகழ்வாகும் என வர்ணித்தார்.
‘தமது பூர்வீக இடத்திற்கு வந்துள்ள இந்த மக்கள் திரும்பிச் செல்வதற்காக வரவில்லை. இந்த மக்களுடைய வீடுகள் அனைத்தும் அழிந்து கிடக்கின்றன. அவர்களுடைய தேவாலயங்கள், பாடசாலை, வைத்;தியசாலை, மீனவர் கூட்டுறவுச் சங்கம் என்று எல்லாமே பேரழிவுக்கு உள்ளாகி இருக்கின்றன. ஓர் ஊர் மனை இருந்ததற்கான அடையாளமே இல்லாத வகையில் அங்கு பெரிய மரங்கள் வளர்ந்துள்ளன.
இங்கு பயன்தருகின்ற தென்னை மரங்கள் எல்லாம் இருந்திருக்கின்றன. ஆனால் அந்த மரங்கள் இயற்கையாக அழியவில்லை. வலிந்து அழிக்கப்பட்டதாகவே தெரிகின்றது. ஆயினும் அந்த மக்கள் மனம் தளரவில்லை. தங்களுடைய மூதாதையர்கள் வாழ்ந்த வாழ்க்கையைத் தொடர்ந்து வாழ்வதற்காகவே வந்துள்ளார்கள். அதில் அவர்கள் மிகவும் உறுதியாக இருக்கின்றார்கள்.
பழமைவாய்ந்த ஆலயத்தில் தங்கியுள்ள இந்த மக்களுக்கு அடிப்படைத் தேவைகள் பல இருக்கின்றன. அவைகளைப் பூர்த்தி செய்வதற்கும், அவர்களை அவர்களது சொந்தக் காணிகளில் மீள்குடியேற்றுவதற்கும் அரசும் அரச அதிகாரிகளும் உடன் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம். இந்த மக்களின் மீள்குடியேற்ற கனவு விரைவில் நனவாக நிறைவேற வேண்டும். அதற்கு நல்லுள்ளம் படைத்த மக்களினதும் வெளிநாடுகளில் உள்ளவர்களினதும் ஒத்துழைப்பும் உதவிகளும் கிடைக்க வேண்டும்’ என செய்தியாளர்களிடம் கருத்து வெளியிடுகையில் குறி;ப்பிட்டார்.
யுத்தம் முடிவுக்கு வந்து பல வருடங்களாகின்றன. யுத்த வடுக்களை ஆற்றி மக்கள் மத்தியில் ஐக்கியத்தையும் நல்லுறவையும் வளர்ப்பதற்கான முயற்சிகள் எடுக்கப்பட்டிருக்கின்றன. நிலைமாறுகால நீதி மற்றும் நல்லிணக்கத்திற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் முன்னெடுத்திருக்கின்றது. அந்தச் செயற்பாடுகள் கடந்த ஒன்பது வருடங்களாகத் தொடர்கின்றன. ஆயினும் மறுபுறத்தில், தமது பாரம்பரிய வாழ்விடத்தில் சென்று குடியேறுவதற்கான மண்மீட்புப் போராட்டத்தில் ஈடுபடுவதற்கு இரணைதீவு மக்கள் நிர்ப்பந்திக்கப்பட்டிருக்கின்றார்கள்.
அந்த மக்களுடைய போராட்டம் நியாயமானது. அடிப்படை உரிமை சார்ந்தது. அதனை அரசு தொடர்ந்தும் உதாசீனம் செய்து கொண்டிருக்க முடியாது. யுத்தம் காரணமாக வலிந்து இடம்பெயரச் செய்த இரணைதீவு மக்கள் தங்கள் சொந்தக் காணிகளில் மீள்குடியேறுவதற்கு வசதியாக அங்கு நிலவுகின்ற இராணுவ மயமான சூழல் அகற்றப்பட வேண்டும். மக்கள் நிம்மதியாகத் தமது சொந்தக் காணிகளில் மீளவும் குடியேறி வாழ்வதற்குரிய அனைத்து நடவடிக்கைகளையும் தாமதியாமல் முன்னெடுக்க அரசு முன்வர வேண்டும்.
மண் மீட்புப் போராட்டம் நிகழும் இரணைதீவு – ஒரு நேரடி விஜயம் – 01 – பி.மாணிக்கவாசகம்