நுண்கடன் நிதி நிறுவனங்களின் செயற்பாடுகளால் தேவையற்ற உயிரிழப்புகளும், சமூக சீர்கேடுகளும் பெருகியுள்ளதாக அம்பாறை மாவட்டம் காரைதீவு பிரதேசசபை தவிசாளர் கி.ஜெயசிறில் கூறியுள்ளார். மேலும் பிரதேச சபையின் அனுமதியின்றி நுண்கடன் நிதி நிறுவனங்கள் காரைதீவு பிரதேசத்திற்குள் தமது நடவடிக்கைகளில் ஈடுபட முடியாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அத்துடன் நுண்கடன்கள் ஏழைகளின் குரல்வளையை நெரிக்கின்ற கருவிகளாக செயற்படுவதை இனியும் அனுமதிக்கப்போவதில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
; நுண்கடன்களால் குடும்பம் பிரிவது முதல் தற்கொலை வரை சமூக அவலங்கள் தொடர்வதாகவும் கடன்பெற்றவர்கள் திரும்ப செலுத்தக் கூடியவர்களா என்பதை பரிசீலனை செய்த பின்பே கடன் வழங்க வேண்டும் என்றும் பயனாளிகளின் கொள்ளளவிற்கு ஏற்ப நுண்கடனை வழங்கவேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
ஒருநாள் கடன், ஒருவார கடன், ஒருமாத கடன் என பலவகையான நுண்கடன்கள் மக்கள் மத்தியில் விதைக்கப்படுவதாகவும் சிலவேளை இது மதமாற்றும் கருவியாக பாலியல் இலஞ்சம் கோரும் துரும்பாக பயன்படுத்தப்படுவதை காண்பதாகவும் கூறிய அவர் இதனை ஒருசீரான நிலைக்குக் கொண்டுவர வேண்டிய தேவையுள்ளது என்றும் மேலும் தெரிவித்தார்.