குளோபல் தமிழ்ச் செய்தியாளர்..
அரசாங்கம் தேர்தல்களை ஒத்திவைத்து வருவதாகவும் மாகாண சபைத் தேர்தலை நடத்த அரசாங்கம் தயாரில்லை என்றால், மக்களுடன் வீதியில் இறங்கி தேர்தலை பெற்றுக்கொள்ள கூட்டு எதிர்க்கட்சி தயாராக இருப்பதாகவும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
காலி சமனல விளையாட்டு அரங்கியல் நேற்று நடைபெற்ற மே தினக் கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார். அரசாங்கத்தின் நிதி பயங்கரவாதம் காரணமாக மக்கள் துன்பப்படுகின்றனர். இந்த பயங்கரவாதத்திற்கு எதிராகவும் மக்களை வரிச் சுமையில் இருந்து விடுவிக்கவும் நாங்கள் அரசாங்கத்திற்கு எதிராக போரிட்டு வருகின்றோம்.
கடந்த உள்ளூராட்சி சபைத் தேர்தலின் பின்னர் அரசாங்கத்தினால் பணிகளை சரியாக செய்ய முடியவில்லை. அரசாங்கம் தற்போது ஊர்ந்து வருகிறது. பணிகளை சரியாக செய்ய முடியாத காரணத்தினாலேயே அரசாங்கம் ஜனநாயகம் என்று கூறி வருகிறது. விவசாயிகளின் நிவாரணங்கள் இரத்துச் செய்யப்பட்டுள்ளன. விவசாயிகளை போன்று அவர்களின் பிள்ளைகளையும் அரசாங்கம் பழிவாங்கி வருகிறது எனவும் மகிந்த ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.