தமிழில் குளோபல் தமிழ்ச்செய்திகள்
பிள்ளைகளின் நுண்ணறிவுத் திறனை மேம்படுத்துவதற்கு பண ரீதியான சன்மானங்களை வழங்க முடியும் என ஆய்வுத் தகவல்கள் தெரிவிக்கின்றன. பெற்றோரினால் பிள்ளைகளுக்கு பண ரீதியான ஊக்குவிப்பு வழங்கப்படும் சந்தர்ப்பங்களில், மாணவர்களின் புள்ளிகள் இருபதனால் உயர்வடைவதாகவும் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
உலகின் முதனிலை நுண்ணறிவு அமைப்புக்களில் ஒன்றான மென்சா நுண்ணறிவு அமைப்பினால் நடத்தப்படும் பரீட்சைகளில் தோற்றிய மாணவர்களிடம் இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளது. ஊக்குவிப்புக்களின் மூலம் எவ்வாறு அறிவாற்றலை விருத்தி செய்ய முடியும் என்பது தொடர்பில் பென்சில்வேனிய பல்கலைக்கழக ஆய்வாளர்கள் ஆய்வு செய்துள்ளனர்.2000 சிறுவர் சிறுமியர்கள் தொடர்பில் நடத்தப்பட்ட 46 ஆய்வுகளை மீளாய்வு செய்து இந்த முடிவு அறிவிக்கப்பட்டுள்ளது.
நிதி ரீதியான ஊக்குவிப்புக்கள் வழங்கப்படும் சந்தர்ப்பத்தில் மாணவர்களின் நுண்ணறிவு ஆற்றல் அதிகம் வெளிப்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. சராசரியான நிதிக் கொடுப்பனவுகள் திறமைகளை உயர்த்தியதாகவும், பத்து அமெரிக்க டொலர்களுக்கு அதிகமான தொகை ஊக்குவிப்பாக வழங்கிய போது நுண்ணறிவு ஆற்றல் மேலும் அதிகரித்ததாகவும் குறிப்பிடப்படுகிறது.பண ஊக்குவிப்பின் தொகையின் அடிப்படையில் நுண்ணறிவுத் திறனின் வெளிப்பாடு உயர்வடைவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இரண்டாவது ஆய்வில் 500 மாணவ மாணவியர் பங்கேற்றதாகவும் ஊக்குவிப்பு குறைவாக அறிவிக்கப்பட்ட இந்தப் பரீட்சைகளில் மாணவர்கள் குறைந்த புள்ளிகளையே பெற்றுக்கொண்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது. நுண்ணறிவு ஆற்றலை வெளிக்கொணர்வது தொடர்பில் சமூக விஞ்ஞானிகள், கல்வியலாளர்கள், கொள்கை வகுப்போர் உள்ளிட்ட தரப்பினர் கூடுதலான கவனம் செலுத்த வேண்டுமென உளவியலாளர் அன்ஜலா லீ டொக்வர்த் தெரிவித்துள்ளார்.