குளோபல் தமிழ்ச்செய்திகளுக்காக சீலன் ஜெயம்
அனைவருக்கான உரிமைகளுக்காகவும், அபிவிருத்திக்காகவும் போராடும் வேர்களை ஊடகவியல் தன்னகத்தே தாங்கி நிற்கின்றது என்றால் அது மிகைப்படாது. நமது தொழிலின் அடிப்படையில் நாம் அனைவரும் ஒரு வழியில் அல்லது வேறும் வழியில் ஜனநாயகத்திற்காக குரல் எழுப்புவோராகவே திகழ்கின்றோம். சமூகத்தில் ஜனநாயகக் கொள்கைகளை நிலைநாட்டுவது தொடர்பில் அடிக்கடி நாம் வலியுறுத்தி வருகின்றோம். நாம் உரிமைகளுக்காகவும், சுதந்திரத்திற்காகவும் போராடுகின்றோம். எனினும் எமது அன்றாட வாழ்க்கையில் நாம் ஜனநாயக நெறிமுறைகளை பின்பற்றுகின்றோமா? குறிப்பாக உரிமைகள் மற்றும் சுதந்திரத்திற்கு அப்பால் ஜனநாயகம் தொடர்பான விழிப்புணர்வு மற்றும் புரிதல் எம்மிடம் எவ்வாறு காணப்படுகின்றது. பால் நிலை பரிமாணம், ஊடகங்களில்; பெண்களின் வகிபங்கு, செய்தி அறிக்கையிடலில் பால்நிலை சமத்துவம் போன்றன தொடர்பில் எவ்வாறான புரிதல் காணப்படுகின்றது?
இந்தக் கேள்விகளுக்கு பதிலளிப்பதன் மூலம், எம்மை நாமே விமர்சனப் பாங்காக நோக்கிக்கொள்ள வழியமைக்கும். ஆண்கள் பெண்கள் உள்ளிட்ட ஊடகவியலாளர்களும், ஊடகத்துறையும் இந்த முயற்சியில் பங்களிக்க வேண்டும். செய்தி அறையில் என்ன நடைபெறுகின்றது என்பது எமது செய்தி வெளிப்பாட்டில் தாக்கத்தை ஏற்படுத்தும்.
நாம் எவ்வளவு முற்போக்கானவர்களாக இருக்க வேண்டும் என்று கருதிக்கொள்வதில் பயனில்லை. எமது அன்றாட தொழிலில் ஒரே மாதிரியான கலாச்சாரத்தை எவ்வாறு முறியடிப்பது என்பதே ஊடகவியலாளர்கள் என்ற ரீதியில் நாம் எதிர்நோக்கும் மிகப் பெரிய சவாலாகும். இதனை சுலபமான விடயமாகக் கருத முடியாது. 21ம் நூற்றாண்டிலும் பெண்கள், ஆண்களை ஈர்க்கும் ஓர் போகப் பண்டமாக நோக்கும் கலாச்சாரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கப்படவில்லை. அண்மையில் ஐரோப்பாவில் உயர் தொழில்நுட்ப கண்காட்சியொன்று நடத்தப்பட்டது. இந்த கண்காட்சியின் காட்சி கூடங்களில், பார்வையாளர்ளை ஈர்க்கும் உத்தியாக அறைகுறை ஆடையணிந்த பெண்கள் பயன்படுத்தப்பட்டனர். இலங்கையின் பெண்கள் தொடர்பான அநேகமான தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் அழக்குக் கலை மற்றும் ஆடை வடிவமைப்பு போன்றன தொடர்பிலேயே ஒளிபரப்புச் செய்யப்படுகின்றன. அநேகமான சஞ்சிகைகள் மற்றும் குறும் பத்திரிகைகளின் முன் அட்டைப் படத்தை பெண்களைக் கொண்டு அலங்கரித்துக் கொள்ளவே இன்னமும் அவற்றின் ஆசிரியர்கள் நாட்டம் காட்டுகின்றனர்.
அனைத்து கலாச்சாரங்களிலும் நிலவி வரும் மரபு ரீதியான நிலைப்பாடுகள், பக்கச்சார்பான கருதுகோள்கள், ஆழமான தப்பெண்ணம் போன்றன ஊடகவியலாளர்களுக்கும், ஊடக நிறுவனங்களுக்கும் பெரும் சவாலாக அமைந்துள்ளது. ஊடகத்திற்குள் ஜனநாயகம் நிலவ வேண்டுமாயின் செய்தி அறைகளில் மரபு ரீதியான திரிபியலுக்கு எதிராக போராட வேண்டிய நிர்ப்பந்தம் காணப்படுகின்றது. ஏனெனில், மரபு ரீதியான தவறுகளை நாம் அப்படியே சகித்துக் கொண்டால் மாற்றங்கள் ஏற்பட வாய்ப்பே கிடையாது. அவை மேலும் அதிகரிக்குமே தவிர, குறைவடையாது.
கடந்த 25 ஆண்டுகளில் ஊடகங்களில் பெண்களின் வகிபங்கு பாரியளவில் முன்னேற்றம் அடைந்துள்ளது என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை. தற்போது அதிகளவான பெண்கள் ஊடகத்துறையை தமது தொழிற்துறையாக தெரிவு செய்து கொள்வதுடன், முன்னொருபோதும் இல்லாத அளவிற்கு பெண் செய்தி ஆசிரியர்களின் எண்ணிக்கை அதிகரிதுள்ளது.
எனினும், வருந்தத்தக்க வகையில் சமூகத்தின் பெண்களின் அதிகாரங்கள் தொடர்ந்தும் ஒரே விதமாக நோக்கப்படுகின்றன. சமூகத்தில் பெண்களுக்கான அங்கீகாரம் இதேவிதமாக நீடித்தால் பால் நிலை சமத்துவத்தை எட்டுவதற்கு இன்னமும் 75 நீண்ட ஆண்டுகள் காத்திருக்க வேண்டியேற்படும் என அண்மைய உலகப் புள்ளி விரபத் தகவல் ஒன்று சுட்டிக்காட்டியுள்ளது.
பெண் ஒடுக்குமுறைகளை தடுக்கும் நோக்கில் கடந்த அரை நூற்றாண்டு காலத்திற்கு மேலாக உலக அளவில் பல்வேறு சட்டங்கள் இயற்றப்பட்டுள்ள நிலையில், பால் நிலை சமத்துவம் திருப்தி அடையக் கூடிய வகையில் அமையவில்லை. பெண்களுக்கு அரசியல், தொழில்வாய்ப்பு, சமூக உரிமைகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்களில் சம சந்தர்ப்பம் அளிக்கும் வகையில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. எனினும், சட்டத்தை உருவாக்குவோரின் சட்டங்களினால் இந்தப் பாரபட்ச நிலைமை களையப்படவில்லை என்பதே நிதர்சனமான உண்மை.
உலகின் எல்லா நாடுகளிலும் சமத்துவத்திற்கான போராட்டங்கள் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றன. பல்வேறு வகையிலான ஒடுக்குமுறைகளை தடுப்பதற்கு பயிற்சி, செயன்முறை செயலமர்வு மற்றும் ஊடாடல்கள் போன்ற சில வழிகள் பின்பற்றப்படுகின்றன.
இலங்கை உள்ளிட்ட உலகின் பல நாடுகளில் ஊடகத்துறை தொடர்ந்தும் ஆணாதிக்கத்திற்கு கட்டுப்பட்ட நிலையிலேயேதான் இயங்கி வருகின்றது. குறிப்பாக முதன்மைப் பொறுப்புக்கள், பதவிகள் ஆண்களை மையப்படுத்தியே காணப்படுகின்றன. ஒரு சில முற்போக்கான நிறுவனங்களைத் தவிர்ந்த ஏனைய அநேக செய்தி நிறுவனங்களில் பெண்கள் ஒடுக்கப்படுகின்றனர் அல்லது ஓரம்கட்டப்படுகின்றனர். செய்தியின் உள்ளடக்கம் மற்றும் சந்தர்ப்பங்கள் ஆகிய காரணிகளில் பெண்களுக்கு உரிய பெறுமதி வழங்கப்படுவதில்லை.
ஊழியப் படையில் அதிகளவு பெண் ஊடகவியலாளர்களை உள்ளடக்கிய ரஸ்யா, சுவீடன் போன்ற நாடுகளில் கூட செய்தி அறிக்கையிடும் பணிகளில் பெண்களுக்கு சம சந்தர்ப்பம் அளிக்கப்படுவதில்லை. 1995ம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஐந்து ஆண்டுக்கு ஒரு தடவையும் உலக ஊடக கண்காணிப்புத் திட்டம் ஆய்வு ஒன்றை நடாத்தி வருகின்றது. 2010ம் ஆண்டில் நடத்தப்பட்ட ஆய்வில் உலகத் தொலைக்காட்சிகளில் 57 வீதமான செய்தி வாசிப்பாளர்கள் பெண்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது. எனினும், 29 வீதமான செய்திகளே பெண் செய்தியாளர்களினால் எழுதப்பட்டுள்ளது. மேலும் 32 வீதமான கடுமையான அல்லது அதிக பெறுமாணமுடைய செய்திகளையே பெண் செய்தியாளர்கள் அறிக்கையிட்டுள்ளனர். சமூகப் பிரச்சினைகள், குடும்ப விவகாரம், வாழ்க்கை முறைமை, கலை போன்ற மென்மையான செய்திகளை 40 வீதமான பெண்கள் செய்தியறிக்கையிடுகின்றனர்.
இந்தப் புள்ளி விபரத் தரவுகள் ஓர் ஆரோக்கியமான மாற்றத்தைப் பதிவு செய்துள்ளது என்பதில் ஐயமில்லை. அதிகளவான பெண்கள்; பயிற்சி பெற்று, ஊடகத்துறையில் இணைந்து கொள்கின்றனர் என்பதனை புலப்படுத்துகின்றது. எனினும், தயாரிப்பாளர்கள், பிரதம ஆசிரியர்கள், நிறைவேற்று அதிகாரிகள், பிரசூரிப்பாளர்கள் போன்ற ஊடகத்துறையின் முக்கிய பதவிகளை வகிக்கும் பெண்களின் எண்ணிக்கையளவு அதிர்ச்சியூட்டும் வகையில் மிக சொற்பளவில் காணப்படுகின்றது. தனிப்பட்ட நாடுகளின் புள்ளி விபரத் தரவுகளும் இதனை உறுதிப்படுத்துகின்றன.
கனடாவில் 8 வீதமான பெண் பிரதம ஆசிரியர்களும், 12 வீதமான பெண் பிரசூரிப்பாளர்களும் கடமையாற்றி வருவதாக கனேடிய பத்திரிகை ஒன்றியம் சில காலங்களுக்கு முன்னர் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. 2008ம் ஆண்டில் 20 வீதத்திற்கும் குறைந்தளவான பெண் செய்தியாசிரியர்களே பிராந்திய வலயத்தில் கடமையாற்றியதாக கிழக்கு ஆபிரிக்க ஊடகவியலாளர் ஒன்றியம் தெரிவித்துள்ளது.
அநேக நாடுகளில் செய்தி சேகரிப்பு மற்றும் முகாமைத்துவ பொறுப்புக்களை பெரும்பான்மையாக ஆண்களே வகித்து வருகின்றனர். இந்த நாடுகளில் 73 வீதமான முக்கிய நிர்வாக மற்றும் முகாமைத்துவ பதவிகளை ஆண்கள் வகிப்பதுடன், 27 வீதமான பதவிகளை பெண்கள் வகித்து வருகின்றனர். செய்தி அறிக்கையிடல் துறையில் ஆண்களின் பங்களிப்பு பெண்களை விடவும் கிட்டத்தட்ட இரட்டிப்பாகக் காணப்படுகின்றது. 36 வீதமான பெண்கள் மட்டுமே செய்தி அறிக்கையிடல் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
எனினும், செய்தி சேகரிப்பு, செய்தி தொகுப்பு மற்றும் செய்தி எழுதுதல் போன்ற துறைகளின் சிரேஸ்ட பதவிகளில் பெண்களின் பங்களிப்பு முன்னேற்றகரமாக அமைந்துள்ளது. இந்தத் துறைகளில் 41 வீதமான பெண்கள் பணியாற்றி வருகின்றனர்.
செய்தி ஊடகத்துறையில் கடயைமாற்றி வரும் 170000 பேரிடம் இரண்டு ஆண்டுகள் இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளது. நிர்வாக மற்றும் உயர் முகாமைத்துவ பதவிகளில் அதிகளவு பெண்களின் பங்களிப்பு காணப்படும் பிராந்தியங்களாக கிழக்கு ஐரோப்பா மற்றும் நோர்டிக் ஐரோப்பா ஆகியவற்றை சுட்டிக்காட்ட முடியும். கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் முறையே 33, 43 வீதமான பெண்களும், நோர்டிக் ஐரோப்பிய நாடுகளில் முறையே 36, 37 வீதமான பெண்களும் நிர்வாக மற்றும் உயர் முகாமைத்துவ பதவிகளில் கடமையாற்றி வருகின்றனர். ஒப்பீட்டளவில் ஏனைய பிராந்திய நாடுகளை விடவும் இந்த இரண்டு நாடுகளிலும் பெண்கள் ஊடகத்துறையில் உயர் பதவிகளை வகிக்கின்றனர்.
ஆசிய பசுபிக் பிராந்திய வலயத்தில் 13 வீதமான பெண்களே ஊடகத்துறையில் சிரேஸ்ட முகாமைத்துவ பதவிகளை வகிக்கின்றனர்.
எனினும் குறிப்பிட்ட சில நாடுகளில் ஆண்களை விடவும் பெண்கள் உயர் பதவிகளை வகிக்கின்றனர். உதாரணமாக தென் ஆபிரிக்காவில் 79.5 வீதமான சிரேஸ்ட முகாமைத்துவ பதவிகளை பெண்களே வகித்து வருகின்றனர். லித்துவேனியாவில் செய்தி அறிக்கையிடும் பணியின் சிரேஸ்ட மற்றும் கனிஸ்ட பதவிகளை அதிகளவு பெண்கள் வகித்து வருகின்றனர். செய்தி அறிக்கை தொடர்பான சிரேஸ்ட பதவிகளில் 78.5 வீதமான பெண்களும், கனிஸ்ட பதவிகளில் 70.6 வீதமான பெண்களும் கடமையாற்றுகின்றனர். மத்திய மற்றும் சிரேஸ்ட முகாமைத்துவ பதவிகளில்; ஆண்களுக்கு ஓரளவு நிகரான அளவில் பெண்கள் பதவி வகிக்கின்றனர்.
எனினும், ஆய்வு நடத்தப்பட்ட 59 நாடுகளில் 20 நாடுகளில் பெண்கள் ஊடகத்துறையில் பணியாற்றுவதற்கு கண்ணுக்கு புலப்படாத வகையிலான தடைகள் காணப்படுகின்றன. அதிகளவில் மத்திய மற்றும் சிரேஸ்ட முகாமைத்துவ பதவிகளை வகிப்பதற்கு கண்களுக்கு புலப்படாத தடைகள் காணப்படுகின்றன. ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட அரைவாசிக்கும் மேற்பட்ட நிறுவனங்கள் பால்நிலை சமத்துவத்தை நிலைநாட்டுவதனை நிறுவனக் கொள்கைகளில் உள்ளடக்கியவை. கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் 16 வீதமான நிறுவனங்களும், மேற்கு ஐரோப்பிய மற்றும் சஹாரா ஆபிரிக்க நாடுகளில் 69 வீதமான நிறுவனங்களும் இந்தக் கொள்கையைக் கொண்டவை. துரதிஸ்டவசமாக இலங்கை இந்த ஆய்வில் சேர்த்துக்கொள்ளப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
பால்நிலை சமத்துவத்தில் சமநிலை, பக்கச்சார்பற்ற தன்மை போன்ற எண்ணக்கருக்கள் ஆணாதிக்க நோக்கில் வரையறுக்கப்படுவதாக கருத வேண்டிய நிலைமை காணப்படுகின்றது. பொது அல்லது தனிப்பட்ட தகவல் ஒன்றின் அடிப்படையிலான செய்தியொன்றின் உள்ளடக்கமும் இதன் அடிப்படையிலேயே நிர்ணயிக்கப்படுகின்றது.
இ;வ்வாறான பின்னணியில், திட்டமிட்ட அடிப்பiயில் பெண்களின் குரல்கள் ஒடுக்கப்படுகின்றன. பால்நிலை அடிப்படையில் ஒவ்வொரு தரப்பினரதும் நோக்கு வித்தியாசப்படும் என்ற யாதார்த்தம் புறக்கணிக்கப்பட்டிருப்பதாகவே கருதவேண்டியுள்ளது.
நியாயமான பால்நிலை சித்தரிப்பானது தொழில்சார் மற்றும் ஒழுங்கு நெறி அபிலாஷைகளைக் கொண்டமைந்தவையாகும். துல்லியம், நேர்மை மற்றும் நியாயத்திற்கு வழங்கப்படும் கௌரவத்திற்கு இதனை ஒப்பீடு செய்யலாம். ஒரு நாணயத்தின் மறுபுறத்தைப் போன்றே அதிகளவு பெண்கள் செய்தித்துறையில் முகாமைத்துவ பதவிகளை வகிக்க வேண்டுமென சிலர் இதனை சுட்டிக்காட்டக்கூடும்.
கடினமான செய்தி அறிக்கையிடலுக்கு ஆண்களின் பங்களிப்பு அவசியமானது என்பதே இன்னமும் உலக நிலைப்பாடகக் காணப்படுகின்றது. இவ்வாறான செய்திகளை இன்னமும் ஆண்களே செய்தி அறிக்கையிட்டு, சமர்ப்பிக்கின்றனர். பால்நிலை சமத்துவத்திற்காக ஊடகவியலாளர்கள் குரல்கொடுக்க வேண்டும். பால் நிலை சமத்துவம் என்பது பெண்களின் பிரச்சினையாக கருதக் கூடாது, ஒடுக்குமுறைகளை இல்லாதொழிப்பதன் மூலம் அனைவரும் நன்மை அடைகின்றனர்.
ஊடகங்கள் சமூகத்தின் பிம்பமாகக் கருதப்படுகின்றது. அவ்வாறானால், பால்நிலை சமத்துவம் என்பது அடிப்படை மனித உரிமைகளில் ஒன்று என்ற யதார்த்தம் சரியான முறையில் பிரதிபலிக்கப்பட வேண்டும். ஆண்களும் பெண்களும் சமநிலையாக நடத்தப்பட வேண்டுமென வலியுறுத்தப்படுகின்றது. சம அளவிலான சம்பளம், சம அளவிலான தொழில் வாய்ப்பு, சம அளவில் தீர்மானம் எடுக்கும் அதிகாரம் போன்றவற்றையே சமநிலையாக நடத்தப்பட வேண்டும் என்பதன் மூலம் வலியுறுத்தப்படுகின்றது.
ஊடகவியலில் பால்நிலை குறித்த நியாயமான சித்தரிப்பு அவசியமானது. குறிப்பாக செய்திகளில் இந்த விடயம் இன்றியமையாதது. நடுநிலையான, பால்நிலையை குறித்து கூறாத மொழிப் பிரயோகத்தைப் பயன்படுத்த முடியும், மேலும் பெண்கள் மென்மையான செய்தி அறிக்கையிடுவோராக அடையாளப்படுத்தப்படக் கூடாது.
ஊடகங்கள் பால்நிலை சமத்துவத்தை மேம்படுத்த வேண்டியது மிகவும் இன்றியமையாதது. தொழில் சூழல் மற்றும் பிரதிநிதித்துவம் போன்றவற்றில் பெண்களுக்கு சம சந்தர்ப்பம் அளிக்கப்பட வேண்டும். செய்தித்துறையில் பால்நிலை சமத்துவம் தொடர்பில் வலியுறுத்தப்பட வேண்டிய அவசர அவசியம் எழுந்துள்ளது. இந்த விடயம் குறித்து பேசப்பட வேண்டும். மரபு ரீதியான பால்நிலை ஆதிக்கத்திலிருந்து மீள்வதற்கு அது தொடர்பில் சமூகத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட வேண்டியது அவசியமானது.
மேலும், ஊடகப் பொறிமுறைமை ஜனநாயகமானதாக அமைய வேண்டும். ஊடக ஒன்றியங்கள் இந்த விடயத்தில் முக்கிய பங்களிப்பினை வழங்க முடியம். சகல ஊடகப் பணியாளர்களும் ஒரே விதமாக நடத்தப்பட வேண்டும் என்பது ஊடக நிகழ்ச்சி நிரலில் உள்ளடக்கப்பட வேண்டும்.
மெய்யானதும், முழுமையானதுமான பால்நிலை சமத்துவம் இன்னமும் எட்டக் கனியாக அல்லது எய்தப் படாத இலக்காகவே தொடர்ந்தும் நீடித்து வருகின்றது.
ஒடுக்குமுறை, வளப்பற்றாக்குறை, பொருளாதார வாய்ப்புக்களை வழங்காமை, தீர்மானம் நிறைவேற்றும் பணிகளில் வரையறுக்கப்பட்ட வாய்ப்புக்களை மட்டும் வழங்குதல் போன்ற காரணிகளினால் பெண்கள் தொடர்ந்தும் மோசமாக பிற்படுத்தப்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகள் அமைப்பின் செயலாளர் நாயகம் பான் கீ மூன் தெரிவித்துள்ளார்.
இதன் மூலம் பால் நிலை சமத்துவம் என்ற இலக்கு இன்னமும் எட்டப்படவில்லை என்பதனை அவரே ஒப்புக்கொண்டுள்ளார்.
பெண் உரிமை, பால்நிலை சமத்துவம் போன்ற விடயங்களில் ஊடகத்துறை ஒன்றும் விதிவிலக்கல்ல. ஊடக நிறுவனங்கள் மற்றும் ஊடகவியலாளர்களின் நடவடிக்கைகளின் மூலம் பால்நிலை சமத்துவத்தை நிலைநாட்ட இன்னமும் எவ்வளவு அர்ப்பணிப்புக்களை செய்ய வேண்டும் என்பது நிரூபணமாகியுள்ளது.