வடக்கு- கிழக்கில் பொதுமக்களின் காணிகளிலுள்ள இராணுவ முகாம்களை வேறு இடங்களில் அமைப்பதற்கு செலவாகும் நிதியை, படையினருக்கு பெற்றுக் கொடுப்பதற்கான பத்திரத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
தகவல் திணைக்களத்தில் இன்று (10.05.18) நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் அமைச்சரவை இணைப்பேச்சாளர் ராஜித சேனாரத்ன இதனை தெரிவித்துள்ளார். வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் உள்ள தனியார் காணிகளில் 522 ஏக்கரினை விடுவிப்பதற்கு படையினர் இணக்கம் தெரிவித்திருந்தனர்.
அதனடிப்படையில், யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட தனியார் காணிகளை விடுவிக்கும் போது அவற்றில் அமைக்கப்பட்டு இருந்த இராணுவ முகாமினை வேறு இடத்தில் மீள நிர்மானிப்பதற்கு 866.71 மில்லியன் ரூபாய் செலவாகும் என மதிப்பிடப்பட்டிருந்தது.அதன் அடிப்படையில் இத்தொகையை பெற்றுக் கொடுப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.