குளோபல் தமிழ்ச் செய்தியாளர்..
எரிபொருள்களின் விலை இன்று நள்ளிரவுடன் அதிகரிக்கப்படுவதாக அரசு அறிவித்த நிலையில் எரிபொருள் விநியோகஸ்தர்கள் சிலர் அவற்றைப் பதுக்க முயற்சித்த போதும் பாவனையாளர் அதிகார சபையினர் தலையிட்டு சீரான விநியோகத்து வழிசமைத்தனர்.
இந்தச் சம்பவம் யாழ்ப்பாண மாவட்டத்திலுள்ள சில எரிபொருள் நிரப்பு நிலையங்களில் இன்று (10) இரவு இடம்பெற்றது. பெற்றோல் 20 ரூபாவாலும் டிசல் 9 ரூபாவாலும் மண்ணெண்ணை 57 ரூபாவாலும் இன்று நள்ளிரவு முதல் அதிகரிக்கப்படுகிறது.
பெற்றோல் மற்றும் மண்ணெண்ணையைக் கொள்வனவு செய்வதில் மக்கள் மும்முரமாக உள்ளனர். அதற்காக மோட்டார் சைக்கிள்கள், முச்சக்கர வண்டிகள் மற்றும் பெற்றோல் வாகனங்களுடன் மக்கள் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் வரிசையில் காத்திருக்கின்றனர்.
அத்துடன் விவசாயிகள் உள்பட பலர் மண்ணெண்ணையைக் கொள்வனவு செய்வதற்காக கான்களுடன் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் வரிசையில் காத்திருக்கின்றனர்.
இந்த நிலையில் யாழ்ப்பாணத்திலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்கள் சில பெற்றோல் மற்றும் மண்ணெண்ணை விநியோகத்தை நிறுத்தி வாடிக்கையாளர்களுக்கு இல்லை எனத் திருப்பியனுப்பினர்.
இதுதொடர்பில் பொது மக்கள் வழங்கிய முறைப்பாட்டின் அடிப்படையில் சம்பவ இடங்களுக்கு விரைந்த பாவனையாளர்கள் அலுவல்கள் அதிகார சபையின் யாழ்.மாவட்ட அதிகாரிகள், பெற்றோலிய கூட்டுத்தாபன அதிகாரிகளுக்கு அறிவித்து சீரான எரிபொருள் விநியோகத்துக்கு வழிசமைத்தனர்.