212
பிறசர் கிளினிக் சென்ற 11வயதுச் சிறுமி – குளோபல் தமிழ் செய்திகளுக்காக தீபச்செல்வன்…
வகுப்பறைக்குச் சென்றவுடனேயே சில மாணவர்களைத் தேடுவதுண்டு. அந்த மாணவர்கள் கல்வியில் ஆகக் குறைந்த நிலையிலும் ஏறத்தாழ 50 வீதத்தை தொடுபவர்களாகவும் இருந்தார்கள். அவர்களில் ஒருவர் முழுமையாக எழுதவோ, வாசிக்கவோ தெரியாதவர். இந்த மாணவர்களின் இயல்புகளாலும் கல்வி நிலையினாலும் வகுப்பறைக்குச் சென்றதும் முதலில் இவர்களை தேடுவது வழக்கமாக கொண்டிருப்பேன். அப்படித்தான் அன்றைக்கு அந்த மாணவியை விசாரித்தேன். “அவள் பிறசர் கிளினிக்குக்கு போயிட்டாள் சேர்” என்றாள் இன்னொரு மாணவி.
நான் அதிர்ந்தே போய்விட்டேன். அவளின் அழுத்தம் நிறைந்த பேச்சும் பார்வையும் திடீர் திடீர் என கலங்கும் கண்களும் நினைவுக்கு வந்தன. ஒருநாள் தந்தை ‘மகனுக்கு எழுதிய கடிதம்’ என்றொரு பாடம் கற்பித்தேன். ஏதோவொரு தருணத்தில் திடீரென எழுந்து “எனக்கு அப்பாவும் இல்லை. அவர் போட்ட கடிதமும் இல்லை” என்றாள். அப்படிச் சொன்னபோது கண்கள் கலங்கின. அவளது தந்தை முள்ளிவாய்க்காலில் கொல்லப்பட்டு விட்டார். ‘தந்தை மகனுக்கு எழுதிய கடிதம்’ என்ற அந்தப் பாடம் கூட அவளுக்கு அழுத்தத்தை தந்திருக்கும். அந்த மாணவி பிறசர் கிளின் சென்றுவிட்டாள் என்பதை எனக்கு சொன்ன மாணவி சொன்னாள், சேர் எனக்கு சுகர் இருக்குது. இப்ப 87 என்று.
பொம்மைகளையும் பறவைகளையும் பற்றி அறிந்தும் பேசியும் கொண்டிருக்க வேண்டிய எங்கள் குழந்தைகள் நோய்மைகள் பற்றி பேசிக் கொண்டிருக்கிறார்கள். ஒரு காலத்தில் இந்த வயதில் உள்ள குழந்தைகளுக்கு தடிமனையும் காய்ச்சலையும்கூட சொல்லத் தெரியாமல் இருந்தது. நாற்பது வயது கடக்கத்தான் இந்த நோய்களை பற்றி அறியும் ,உணரும் காலம் ஒன்று இருந்தது. ஆனால் ஆரம்ப வகுப்பு வயதிலேயே இந்தப் பிள்ளைகள் தொற்றாத உடல் நோய்களைப் பற்றி பேசுகிறார்கள் என்பது எவ்வளவு துயரமானது?
பிறசர் கிளினிக் சென்ற அந்த மாணவி மறுநாள் பாடசாலைக்கு வந்திருந்தாள். தனியே அழைத்து, எனக்கு எல்லாம் தெரியும். நேற்று வைத்தியசாலையில் என்ன கூறினார்கள் என்று கேட்டேன். 137இல் இருந்தது. இப்ப 127இல் இருக்குது என்றாள். எனது நடுகல் நாவலை வாசித்த தமிழக எழுத்தாளர் அம்பை ஒரு எனக்கு கடிதம் எழுதியிருந்தார். அந்த நாவலில் வரும் சிறுவன் “குழந்தையாக இருக்கும்போதே பெரியவனாக்கப்பட்டவன்.” என்று எழுதியிருந்தார். இந்தப் பிள்ளைகளைப் பார்க்கும்போதும் அப்படித்தான் தோன்றுகிறது. ஆம், இவர்கள் குழந்தைகளாக இருக்கும்போதே பெரியவர்களாக்கப்பட்டு விட்டார்கள்.
யுத்தமும் யுத்தத்திற்குப் பிந்தைய சூழலும் அவர்களின் உலகத்தை பாதித்து விட்டது. அவர்களுக்கு பொம்மை இல்லை என்ற கவலைகள் இல்லை. தந்தை இல்லை என்ற கவலையே உள்ளது. அவர்களுக்கு பிஸ்கட் வேண்டும் என்ற கவலை இல்லை. அவர்களுக்கு சோறு வேண்டும் என்ற கவலையே உண்டு. குழந்தமை பருவத்திலேயே பெரியவர்களாக்கப்பட்ட இந்தக் குழந்தைகளுக்கு பெரியவர்களுக்கு வரவேண்டிய நோய்கள் வருகின்றன.
வகுப்பில் உள்ள பிள்ளைகளில் சுமார் ஐந்துபேர் ஆஸ்துமா நோயினால் பாதிக்கப்பட்டவர்கள். அவர்களில் ஒருவன் எப்போதுமே ஆஸ்துமா நோயை கட்டுப்படுத்தும் பம் உடன் இருப்பவன். இவர்கள் எல்லோருமே 2007ஆம் ஆண்டு பிறந்தவர்கள். தம்முடைய இரண்டாவது வயதில் முள்ளிவாய்க்காலை சந்தித்தவர்கள். இது ஒரு வகுப்பறையின் நிலமைதான். ஏனைய பாடசாலைகளில் கல்வி கற்பிக்கக்கூடிய சில ஆசிரிய நண்பர்களுடன் பேசியபோதும் இத்தகைய நோய்களுடன் சில மாணவர்கள் இருப்பதையும் சந்தித்ததையும் கூறினார்கள்.
இதைப்போலவே எமது பாடசாலையில் கல்வி கற்கும் சிறுவன் ஒருவன் மிகவும் வறுமைப்பட்ட குடும்பத்தை சேர்ந்தவன். ஒருநாள் பாடசாலையில் தவறுதலாக விழுந்தபோது அவன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டான். அப்போது அவனது சிறுநீரகம் செயலிழந்திருப்பது தெரியவந்தது. இப்போது அவன் கண்டி வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருக்கிறான். அறியக்கூடிய இந்த தகவல்களும் நிகழ்வுகளும் சாதாரணமானவை என்று கடந்து செல்ல முடியவில்லை. எங்களை சுற்றி நடக்கக்கூடிய இந்த நிகழ்வுகள் அல்லது பிரச்சினைகள் அதிகமும் சிந்திக்கவும் விவாதிக்கவும் வேண்டிய அவசியத்தை தூண்டுவதாகவே அமைகின்றது.
ஏனெனில், இலங்கை அரசு நிகழ்த்திய யுத்தம் என்பது வெறுமனே யுத்த களத்தில் மாத்திரம் இன அழிப்பை நோக்கமாக கொண்டதல்ல. ஈழப் போராட்டத்தில் பங்கெடுத்த போராளிகளாக இருந்தாலும் சரி, யுத்த களத்தில் வாழ்ந்த சாதாரண மக்களாக இருந்தாலும் சரி அவர்களை இந்த யுத்தம் தெளிவாகவே அழித்திருக்கிறது. அதாவது யுத்த களத்தில் தமது உடல் அவயங்கள் பாதிப்புக்கு உள்ளாக்கப்பட்டவர்கள் பின்னாளில் தொற்றாத கடும் நோய்களுக்கு ஆளாகியுள்ளதைதான் இந்த நிகழ்வுகள் உணர்த்துகின்றன.
யுத்தம் முடிந்த தருவாயில், சுவாசம் தொடர்பான வைத்தியதுறை நிபுணர் கலாநிதி யமுனானந்தா இந்த விவகாரம் குறித்து பகிரங்கமாகவே எச்சரித்திருந்தார். யுத்தத்தின்போது பொதுமக்கள் மீது வீசப்பட்ட குண்டுகள் தடைசெய்யப்பட்ட குண்டுகள். குண்டுகள் என்றாலே அழிவை உருவாக்குபவை. தடைசெய்யப்பட்ட குண்டுகள் எனில் அவை எத்தகைய அழிவை உருவாக்குபவை? கொத்துக் குண்டுகளும் நஞ்சுக் குண்டுகளும் அத்தகையவே. அவற்றை இலங்கை அரசு தமிழ் மக்கள்மீது வீசியதற்கான ஆதாரங்கள் பகிரங்கமாக வெளியாகியுள்ளது.
இந்த யுத்த களத்தில் இருந்த மக்கள் சுவாசம் சம்பந்தப்பட்ட நோய்களுக்கு ஆளாகுவார்கள் என்று அவர்கள் நீரிழிவு, இரத்த அழுத்தம் சம்பந்தப்பட்ட நோய் தாக்கத்திற்கு உட்படலாம் என்றோ கலாநிதி யமுனானந்தா 2010ஆம் ஆண்டில் எச்சரித்திருந்தார். அதற்கான மருத்துவ ஆய்வுகளை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர் கூறியிருந்தார். மேற்குறித்த மதிப்பீடுகளை ஆய்வு ரீதியாகவே உறுதி செய்ய முடியும் என்பதே இப் பத்தியின் கருத்து. மருத்துவ ரீதியாக இந்தப் பிரச்சினைகள் குறித்து ஆய்வுகளும் இந்தப் பாதிப்பு பற்றிய புள்ளி விபரங்களும் சமூகத்தை பாதிக்காத வகையில் கையாளப்பட வேண்டும்.
000
யுத்தத்திற்குப் பிந்தைய காலத்தில் கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள பாடசாலைகளில் தரம் ஒன்றுக்கு சேரும் மாணவர்களின் எண்ணிக்கை குறைவடைந்து செல்வதாக கிளிநொச்சி வலயக் கல்விப் பணிப்பாளர் ஞானம்ஜோன் குயின்ரஸ் ஒருமுறை கூறியிருந்தார். தொடர்ச்சியாக மூன்றவாது வருடமாகவும் இந்த எண்ணிக்கை குறைந்து செல்வதாகவும் அவர் கூறியிருந்தார். இதுவும் அதிர்ச்சியூட்டக் கூடிய மற்றொரு புள்ளி விபரமாகும்.
அதன்படி 2016ஆம் ஆண்டில் 2ஆயிரத்து 565 மாணவர்களும் 2017ஆம் ஆண்டில் 2ஆயிரத்து 319 மாணவர்களும் 2018 ஆம் ஆண்டில் 2ஆயிரத்து 180 மாணவர்களும் தரம் ஒன்றில் இணைந்துள்ளனர். இன விருத்தியின் வீழ்ச்சியை இந்த புள்ளி விபரம் கட்டுவதையும் அவர் சுட்டிக்காட்டியிருந்தார். வடக்கு மாகாணத்திலேயே இந்த நிலமைதான் காணப்படுவதாகவும் யாழ்ப்பாணப் பாடசாலைகளிலும் தரம் ஒன்றில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை வீழ்ச்சியடைந்து செல்வதாகவும் யாழ்ப்பாணத்தை சேர்ந்த ஒரு ஊடகவியலாளர் கூறினார்.
அண்மையில் இந்தியாவிலிருந்து யாழ்ப்பாணம் வந்திருந்த பிரசாந்த் குழந்தையின்மை சிகிச்சை மற்றும் ஆராய்ச்சி மையத்தின் கருவாக்கல் விசேட வைத்திய நிபுணர் கீதா ஹரிப்பிரியா மகப்பேறின்மை தொடர்பாக இரண்டாயிரம் பேருக்கும் அதிகமானவர்கள் தன்னை வந்து சந்திருப்பதாக கூறினார். இந்த எணிக்கை தனக்கு அதிர்ச்சியளிப்பதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார். யாழ்ப்பாணத்தில் இந்த நிலமை காணப்பட்டால் வடக்கு கிழக்கில் நிலமை என்னவாக இருக்கும் என்பதையும் சிந்தித்து பார்க்க வேண்டும்.
இலங்கையில் தமிழர்கள் இன விருத்தியில் மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார்கள். போரில் கணிசமானவர்கள் அழிக்கப்பட்டு விட்டனர். பல ஆயிரக்கணக்கானவர்கள் காணாமல் ஆக்கபட்டு உடைந்த குடும்பங்கள் ஆகிவிட்டனர். போரை கடந்து வந்த மனிதர்களின் நிலமையும் போருக்குள் பிறந்த குழந்தைகளின் நிலமையும் ஒருபுறம் நோய்மை நிறைந்துவிட்டது. பிறந்து பள்ளிசேரும் குழந்தைகளின் எண்ணிக்கையும் குறைந்துவிட்டது. இப்போது குழந்தைகள் பிறப்பதும் குறைந்துவிட்டது.
தமிழ் இனம் எல்லாவகையிலும் இன அழிவை, இன அழிப்பை ஒடுக்குமுறையை சந்திக்கிறது. எமது நிலங்கள் எவ்வளவு வேகமாக அபகரிக்கப்படுகின்றதோ, எமது உரிமைகள் எவ்வளவு வேகமாக பறிக்கப்படுகிறதோ அந்த அளவுக்கு இனத்தின் வீழ்ச்சியும் காணப்படுகின்றது. எல்லையில் ஒரு துண்டு நிலத்தை இழக்கும்போது எம் மண்ணில் ஒரு மனிதர் இல்லாமல் போகிறார். நிலமும் சரி, இனமும் சரி சுருங்கி வருவதையே இந்த நிகழ்வுகளும் விபரங்களும் காட்டுகின்றன.
இந்த மரணங்கள், குற்றசாட்டுக்கள், சரிவுகளை எவரும் எளிதில் புறந்தள்ளிவிட முடியாது. இலங்கை அரசு நிகழ்த்திய யுத்தம் என்பது அவ்வளவு சாதாரணமானதல்ல. விடுதலைப் புலிகளை மத்திரம் அழிப்பது அதன் நோக்கமல்ல. யுத்தத்தை சாதாரணமாக மதிப்பிட முடியாது. அதிலும் கடுமையான பேரினவாத ஒடுக்குமுறை நோக்கம் கொண்ட இலங்கை அரசின் யுத்தம் அவ்வளவு சாதாரணமானதல்ல. ஈழத் தமிழர்களை அழித்தொழிப்பதையே நோக்காக கொண்டு முன்னெடுக்கப்பட்ட யுத்தத்தினால் தமிழ் உடல்கள் அடைந்த பாதிப்பை இலங்கை அரசு சீர் செய்யுமென எதிர்பார்க்கவே முடியாது. அதற்கான முயற்சிகளில் நாமே ஈடுபடவேண்டும்.
குளோபல் தமிழ் செய்திகளுக்காக தீபச்செல்வன்
Spread the love