குழந்தை கடத்தல் கும்பல் என்ற வாந்தி பரப்பியமையினால் மேலும் ஒருவர் அடித்துக் கொல்லப்பட்டதைத்தொடர்ந்து, வதந்தி பரப்பினால் ஒரு வருடம் சிறைத்தண்டனை விதிக்கப்படும் என காவல்துறையினர் எச்சரிக்கை விடுத்து உள்ளனர். காஞ்சீபுரம், திருவள்ளூர், வேலூர், திருவண்ணாமலை உள்ளிட்ட சில வட மாவட்டங்களில் குழந்தைகளை கடத்தும் வடமாநில குழுக்களின் நடமாட்டம் இருப்பதாக கடந்த சில நாட்களாக சமூக வலைத்தளங்கள் மூலம் வதந்தி பரவி வருகிறது. இத்தகைய வதந்திகளால், இதுவரை அப்பாவிகள் பலர் தாக்கப்பட்டு உள்ளதுடன் சிலர் உயிர் இழந்துள்ளனர்.
நேற்றுமுன்தினம் மலேசியாவில் இருந்து சென்று உறவினர்களுடன் திருவண்ணாமலையிலுள்ள குலதெய்வம் கோவிலுக்கு சென்ற 65 வயதான பெண் ஒருவர் குழந்தை கடத்தல் கும்பலைச் சேர்ந்தவர் என்ற சந்தேகத்தில் கிராமவாசிகளால் அடித்துக்கொல்லப்பட்டிருந்தார்.
மேலும் 30 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவரையும் குழந்தையை கடத்த வந்தவர் என நினைத்து சிலர் அடித்ததில் அவர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார். இந்தநிலையில் திருவள்ளூரில் நேற்று முன்தினம் இரவு மேலும் ஒருவர் குழந்தை கடத்தல் கும்பலினைச் சேர்ந்தவர் என்ற சந்தேகத்தின் பேரில் அடித்துக்கொல்லப்பட்டார். குறித்த நபர் மனநிலை பாதிக்கப்பட்டவர் என தெரியவந்துள்ளது.
இவ்வாறு குழந்தை கடத்தல் வாந்தி காரணமாக அப்பாவிகள் தாக்கப்படுவதும், அதில் சிலர் உயிர் இழப்பதும் பெரும் பிரச்சினையை ஏற்படுத்தி உள்ள நிலையில் குழந்தை கடத்தல் தொடர்பாக சமூகவலைத்தளங்களில் வதந்தி பரப்புவோர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு ஒரு வருடம் சிறையில் அடைக்கப்படுவார்கள் என காவல்துறையினர் ச்சரிக்கை விடுத்து உள்ளனர்.