குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
மன்னார் நகரத்தை பொறுத்த மட்டில் கடந்த காலங்களில் பல அபிவிருத்தித்திட்டங்கள் முன்னெடுக்கப்படும் என தேர்தல் காலங்களில் ஒவ்வொரு கட்சிகளும் வாக்குறுதிகளை வழங்கினாலும் இன்று வரை அபிவிருத்தித்திட்டம் பின்னடைவில் இருந்து வருகின்றது என மன்னார் நகர முதல்வர் ஞானப்பிரகாசம் அன்ரனி டேவிட்சன் தெரிவித்தார்.
மன்னார் நகர சபையில் இன்று வெள்ளிக்கிழமை(11) காலை இடம் பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் அவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,,,
மன்னார் நகரத்திற்குள் வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபடும் வர்த்தகர்கள் தொடர்பாக பொது மக்களினால் எனக்கு பல்வேறு முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளது. அதற்மைவாக நேற்று வியாழக்கிழமை (10) குறித்த பகுதிகளுக்குச் சென்று பார்வையிட்டதில் வீதிகளை ஆக்கிரமித்து நடை பாதைகளில் வியாபார நடவடிக்கைகளை மேற்கொள்ளுவதை நேரடியாக அவதானித்தேன்.
அவ்வாறு நேரடியாக அவதானிக்கப்பட்ட விடயங்களை கருத்தில் எடுத்து நடை பாதை வியாபாரிகளுக்கு வழங்கப்பட்ட இடத்தின் அளவுத்திட்டத்திற்கு அமைவாக குறித்த இடங்களுக்குள் வைத்து வியாபார நடவடிக்கைகளை மேற்கொள்ள வர்த்தகர்களுக்கு அறிவித்தல் வழங்கப்பட்டுள்ளது.
வழங்கப்பட்ட இடங்களை தவிர நடை பாதைகளில் மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் மேற்கொள்ளப்படும் வர்த்தக நடவடிக்கைகளுக்கு மன்னார் நகர சபை தடை விதித்துள்ளது.
மன்னார் நகர சபையின் அறிவித்தல்களையும் மீறி பாதசாரிகளுக்கு இடையூரை ஏற்படுத்துகின்ற வகையில் மேற்கொள்ளப்படும் வியாபார நடவடிக்கைகளுக்கு எதிராக நகரசபை சட்டதிட்டங்களுக்கு அமைவாக சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
மன்னார் நகரத்தை பொறுத்த மட்டில் கடந்த காலங்களில் பல அபிவிருத்தித்திட்டங்கள் முன்னெடுக்கப்படும் என தேர்தல் காலங்களில் ஒவ்வொறு கட்சிகளும் வாக்குறுதிகளை வழங்கின. எனினும் மன்னார் நகரத்தை பொறுத்த மட்டில் இன்று வரை அபிவிருத்தித்திட்டம் பின்னடைவில் இருந்து வருகின்றது.
-இனி வரும் காலங்களில் எங்களினூடாக யாரிடம் என்ன நிதியை பெற்று என்ன வேலைத்திட்டங்களை முன்னெடுக்க முடியுமோ அனைத்து வேளைத்திட்டங்களும் நடை முறைப்படுத்தப்படும். பொய் வாக்குறுதிகளை நாம் மக்களுக்கு வழங்குவதற்கு இடம் இல்லை. எமது மக்களுக்கு என்ன விடையங்கள் சென்றடைய வேண்டுமோ அந்த விடையங்கள் மக்களை சென்றடைவதற்கு செய்வேன் .
இனி வரும் காலங்களில் மன்னார் நகரத்தை ஒரு நல்ல நிலைக்கு கொண்டு வர வேண்டும் என்பதே எனது எண்ணம். சக உறுப்பினர்களின் ஒத்துழைப்புடனும் சகல நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படும். கடந்த காலங்களில் அபிவிருத்தி என மன்னார் நகரத்தை மையப்படுத்தி அரசியல் வாதிகளினால் நிதி பெற்றுக்கொள்ளப்பட்டது. ஆனால் அந்த நிதிகள் எமது நகரத்தை மையப்படுத்தி மேற்கொள்ளப்படவில்லை.இனி வரும் காலங்களில் அபிவிருத்தி என்பது மன்னார் நகரத்தை மையப்படுத்தி இருக்க வேண்டும்.
அந்த அடிப்படையில் நிதி வழங்கப்படும் பட்சத்தில் மன்னார் நகரத்தை அழகு படுத்துவதோடு மன்னார் நகரத்தின் செயற்பாடுகளை நாங்கள் முன்னுக்கு கொண்டு வருவோம் என தெரிவித்தார். இதன் போது எதிர்வரும் மே-18 ஆம் திகதி முள்ளிவாய்க்கால் நினைவு தினம் தொடர்பில் அவரிடம் வினவிய போது,,,,,,
மே-18 ஆம் திகதி முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு தொடர்பில் பல தரப்பட்டவர்களினால் பல்வேறு விதமாக பேசப்படுகின்றது.இந்த நினைவேந்தல் நிகழ்வானது ஒட்டு மொத்த தமிழ் மக்களுக்கான நிகழ்வாக கருதப்படுகின்றது. அதன் அடிப்படையில் அனைவரும் ஒன்று சேர்ந்து ஒற்றுமையாக ஒரே நேரத்தில் ஒரே இடத்தில் நினைவேந்தலை மேற்கொள்ள வேண்டும்.என அவர் மேலும் தெரிவித்தார்.