ஓட்டுசுட்டான் பகுதியிலுள்ள 64 ஆவது படைப்பிரிவில் அமைக்கப்பட்டுள்ள பௌத்த விகாரை தொடர்பான விசாரணைகளை மனித உரிமைகள் ஆணைக்குழு வவுனியா அலுவலகம் மேற்கொண்டு வருகின்றது.
இந்நிலையில் குறித்த படைமுகாமின் பொறுப்பதிகாரியையும் இலங்கை இராணுவத் தளபதியையும் எதிர்வரும் 25 ஆம் திகதி வவுனியா மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு விசாரணைகளுக்கு வருகை தருமாறு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.
கற்சிலைமடுப்பகுதியில் புதுக்குடியிருப்பு செல்லும் பிரதான வீதியில் தனியார் காணி ஒன்றில் 64 ஆவது படைப்பிரிவின் இராணுவ முகாம் அமைந்துள்ளது. அதில் பௌத்த விகாரை ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அப்பகுதி தனியார் ஒருவருக்குச் சொந்தமானது என்பதை பிரதேச செயலகம் உறுதிப்படுத்தியுள்ளது.
இந்நிலையில் இவ்விடயம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்த நிலையில், தனது காணியை மீட்டுத்தருமாறு காணியின் உரிமையாளர் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்திருந்தார்.
இதையடுத்து மனித உரிமைகள் ஆணைக்குழுவின் வவுனியா பொறுப்பதிகாரியும் சட்டத்தரணியுமான ஆர். எல். வசந்தராஜா தலைமையில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதுடன் எதிர்வரும் 25 ஆம் திகதி இந்தப் படை முகாமின் பொறுப்பதிகாரியையும், இலங்கை இராணுவத்தளபதியையும், காணியின் உரிமையாளரையும் விசாரணைக்கு சமூகமளிக்குமாறு மனித உரிமைகள் ஆணைக்குழு அழைப்பு விடுத்துள்ளது.
அண்மைக்காலங்களில் வவுனியா மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அலுவலகத்தின் விசாரணை நடவடிக்கைகள் அதிகரித்துக் காணப்படுவதுடன் மூவின மக்களின் பிரச்சினைகளுக்கும் உரிய தீர்வுகள் வழங்கப்பட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.