முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் பொருத்தமான முறையில் நடைபெறுவதற்குரிய புரிந்துணர்வுக்கான அடிப்படைகள் முள்ளிவாய்க்கால் வரை உச்சிமீது வானிடிந்து வீழுகின்ற தாக்குதல்கள் மத்தியிலும் ஒரு நீதியான பேச்சுவார்த்தைக்கான போர்நிறுத்தத்தையே தமிழ் மக்கள் வலியுறுத்தினார்கள்.
அதை உருவாக்க ஐ.நா வும் பேச்சுவார்த்தைக்கு மத்தியஸ்தம் வகித்த சர்வதேச தரப்பும், குறிப்பாக இணைத்தலைமை நாடுகள், தவறியது மட்டுமல்ல, இன அழிப்பில் இருந்துமக்களைப் பாதுகாக்க வேண்டிய ஐநாவும் பொறுப் புக்கூறலில் இருந்தும் முறைதவறியதால் முள்ளிவாய்க்கால் நடந்தேறியது.
ஆகவே, முள்ளிவாய்க்கால் இன அழிப்பு நாளின் நினைவேந்தலை அதற்கு உரிய பண்புகளோடும் விழுமியங்களோடும் நடாத்த வேண்டிய பொறுப்பு எம் அனைவருக்கும் உண்டு.
இந்த வகையில்,
1. இன அழிப்பு நினைவேந்தல் நாம் சந்தித்த இழப்புக்களை நினைவுகூரும் நாள். அது துக்கத்துரிய நாள் மட்டும் அல்ல.
2. ஈழத்தமிழர்கள் ஒரு தேசிய இனமாகத் தமது தன்னாட்சி உரிமையையும் இறைமையையும் எந்நிலைவரினும் கைவிட்டு மண்டியிட மாட்டார்கள் என்பதை உலகறிச் செய்தமாண்புக்குரிய நாளும் அதுவே.
3. இன அழிப்பு நினைவேந்தல் என்பது உலகமானுடத்திற்கு முன் சர்வதேச நீதி குறித்த கேள்வி முன்வைக்கப்படுகிற நாளும் கூட.
இந்த மூன்று அடிப்படைகளில் நினைவேந்தல் அமையவேண்டும். வட மாகாண சபையினால் துக்கநிகழ்வாக மாத்திரமே இதை இதுவரை அணுகமுடிந்திருக்கிறது. இந்தப் போக்கில் யாழ் பல்கலைக்கழக மாணவர்களால் ஒரு காத்திரமான மாற்றத்தை ஏற்படுத்த முடியுமானால், அவர்களோடு இணைந்து இந்த நிகழ்வை நடாத்துவதே மிகவும் பொருத்தமாக இருக்கும் என்பதே நான் ஆராய்ந்து எடுத்துக் கொண்ட முடிவாகும்.
முள்ளிவாய்க்காலில் இறுதி நிமிடம் வரை நின்றவள் என்ற வகையிலும், அரசியல் உரிமைக்காகச் செயற்பட்ட எனது கணவர் இலங்கை இராணுவத்தால் எனதும் என்பிள்ளைகளதும் கண்முன்னாலே எடுத்துச் செல்லப்பட்டதைத் தொடர்ந்து இன்றுவரை அவரைத் தேடிக்கொண்டிருப்பவள் என்ற வகையிலும் எனது நீதிகேட்கும் பயணத்தில் ஓர் அங்கமாகவே மாகாணசபைக்குள் பெருமளவு ஆதரவுடன் மக்களால் தெரிவுசெய்யப்பட்டேன். இந்த நீதிப் பயணம் அனைத்து எல்லைகளையும் தாண்டித் தொடர்ந்து கொண்டிருக்கிறது.
வட மாகாண சபையைப் பொறுத்தவரை முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நல்லமுறையில் ஒற்றுமையாக நடந்தேற வேண்டும் என்ற நல்லெண்ணமே அவையில் மேலோங்கி இருக்கிறது என்பதை இங்கு தெரிவிக்க விரும்புகிறேன்.
இந்த மாகாணசபையின் அவையில் இன அழிப்பைப் நேரடியாகத் தரிசித்த வேறு சில உறுப்பினர்களும் இருக்கிறார்கள் என்பதையும் இங்கு கூறிவைக்கவிரும்புகிறேன். தவிரவும், நினைவேந்தல் நிகழ்வு நடைபெறும் இடம் தொடர்பான விவகாரங்களை மாகாணசபை கையாள வேண்டிய கடப்பாடு கொண்டிருக்கிறது.
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வடக்கிற்கும் கிழக்கிற்கும் பொதுவானது. உண்மையில் அது எல்லை கடந்தது. இலங்கைத் தீவுக்கு அப்பாலும் ஒரு மகத்தான போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. நெருப்போடு தம்மை ஆகுதியாக்கி நீதிகேட்ட தமிழக, புலம்பெயர் உறவுகளையும் நாம் எமது நெஞ்சில் இருத்தவேண்டும்.
ஆகவே, வடமாகாணசபையினதும் யாழ் பல்கலைக்கழக மாணவர் சங்கத்தினதும் இணைத் தலைமையில் இந்த நிகழ்வை முன்னெடுக்க என்னால் இயன்ற முயற்சியை மேற்கொள்வேன் என்று அனைவருக்கும் இத்தால் அறியத்தருகிறேன்.