Home இலங்கை நினைவு கூர்தல்: யாரை யாரால் யாருக்காக? நிலாந்தன்…

நினைவு கூர்தல்: யாரை யாரால் யாருக்காக? நிலாந்தன்…

by admin

புனர்வாழ்வின் பின் விடுவிக்கப்பட்ட ஒரு மூத்த புலிகள் இயக்க உறுப்பினர் சொன்னார்…….. ‘நினைவு கூர்தல் தொடர்பாக நடக்கும் இழுபறிகளைப் பார்க்கும் போது முன்பு சிரித்திரன் சஞ்சிகையில் வந்த ஒரு கேலிச்சித்திரம் ஞாபகத்திற்கு வருகிறது’ என்று. அந்த கேலிச் சித்திரத்தில் ஒரு கூட்டம் எதற்காகவோ ஆளுக்காள் பிச்சுப்பிடுங்கிக் கொண்டு நிற்பார்கள். ஒரு பிச்சைக்காரர் தூரத்திலிருந்து அதைப் பார்த்துக் கொண்டிருப்பார். அவரிடம் ஒருவர் கேட்பார் அவர்கள் எதற்காகச் சண்டை போடுகிறார்கள் என்று. அதற்கவர் சொல்வார் எங்களுக்கு யார் தலைமை தாங்குவது என்பதற்காக அவர்கள் வாக்குவாதப்படுகிறார்கள் என்று.

இக்கேலிச்சித்திரத்தைச் சுட்டிக்காட்டிக் கதைத்த அம் முன்னாள் இயக்கத்தவர் என்னிடம் கேட்டார் ‘போரின் இறுதிவரை சென்று அதிகம் பாதிக்கப்பட்டு சாவினால் சப்பித்து துப்பப்பட்ட சனங்களை வைத்து யார் நினைவு கூர்வது என்பதற்காக ஆளுக்காள் முரண்பட்டுக் கொள்வதைப் பார்க்கும் போது அக்கேலிச்சித்திரத்தில் வரும் பிச்சைக்காரனின் நிலையில் தான் நாங்கள் இருக்கின்றோமா என்று தோன்றுகிறது.’ என்று.

கடந்த பத்தாண்டுகளாக நினைவு கூர்தல் தொடர்பில் ஒரு பொதுக்கருத்தை உருவாக்கி அந்த அடிப்படையில் ஒரு பொது அமைப்பை உருவாக்கி நினைவு கூர்தலை முன்னெடுப்பதற்குத் தமிழ் மக்களால் முடியவில்லை. அதைத் தான் கடந்த சில வாரங்களாக நடந்து வரும் சம்பவங்கள் உணர்த்துகின்றன.

மே பதினெட்டு மட்டுமல்ல மாவீரர் நாளும் உட்பட நினைவு தினங்களை அனுஷ்டிப்பது தொடர்பில் புதிது புதிதாகச் சர்ச்சைகள் கிளப்பி வருகின்றன. அண்மையில் நடந்த அன்னை பூபதியின் நினைவு நாளிலும் இதே நடந்தது. அன்னை பூபதியின் பிள்ளைகள் தமது தாயை அரசியல் வாதிகள் நினைவு கூர்வது தொடர்பாக ஆட்சேபனை தெரிவித்திருந்தார்கள். ஆனால் அன்னையின் பிள்ளைகள் மத்தியில் இரு வேறுபட்ட கட்சிச் சாய்வுகள் இருப்பதாகத் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. முடிவில் பொலிஸ் பாதுகாப்புடன் பூபதியின் நினைவிடத்தில் நிகழ்வு அனுஷ்டிக்கப்பட்டது.

அன்னை பூபதி ஒரு குடும்பப் பெண்தான். அவருடைய குடும்பத்திற்கு அவர்மீது உரித்து உண்டு. ஆனால் அவர் ஒரு பொது இலட்சியத்துக்காக உண்ணாவிரதமிருந்து தனது உயிரைத்தியாகம் செய்தவர். எனவே அவருக்கு ஒரு பொதுப் பரிமாணம் உண்டு. அவர் தமிழ் மக்களின் பொதுச் சொத்து. அவரை நினைவு கூர்வது என்பது ஒரு பொது நிகழ்வு. அதை ஒரு பொது அமைப்பே ஒழுங்குபடுத்த வேண்டும். கட்சி வேறுபாடுகளுக்கு அப்பால் அப்பொது அமைப்பு அன்னையின் நினைவுகளை பேணிப் பாதுகாப்பதோடு நினைவு கூர்தலை ஒழுங்குபடுத்தவும் வேண்டும். ஆனால் இங்குள்ள பிரச்சனை என்னவென்றால் அப்படியொரு பொது அமைப்பு எதுவும் நாட்டில் இல்லை என்பதுதான்.

இதுதான் அடிப்படைப் பிரச்சினை தமிழ் மக்களின் ஒட்டுமொத்த அரசியலைக் குறித்து ஓர் ஒட்டுமொத்தத் தரிசனத்தைக்கொண்ட ஒரு பொது அமைப்போ அல்லது மக்கள் இயக்கமோ தமிழ் மக்கள் மத்தியில் பலமாக இல்லையென்பதுதான்.

அரங்கில் இருப்பவை அனேகமானவை தேர்தல் மையக் கட்சிகள்தான். இவை தமது தேர்தல் வியூகத்தின் ஒரு பகுதியாக நினைவு கூர்தலையும் முன்னெடுத்து வருகின்றன. நினைவு கூர்தல் எப்பொழுதும் உணர்ச்சிகரமானது. அவ்வுணர்ச்சிகரமான நிகழ்விற்குத் தலைமை தாங்குவதன் மூலம் ஒரு பொதுத் துக்கத்தை வாக்குகளாக மாற்றலாமா? என்றே ஒரு தொகுதி அரசியல்வாதிகள் சிந்திக்கிறார்கள். மாறாக அப்பொதுத் துக்கத்தை அதாவது கூட்டுத்துக்கத்தை ஒரு கூட்டுக் கோபமாக மாற்றி எப்படி இனப்படுகொலைக்கு எதிரான நீதியைப் பெற்றக்கொள்ளலாம் என்று சிந்திக்கும் தலைவர்கள் தமிழ் மக்கள் மத்தியில் மிகச்சிலரே உண்டு. ஈழத்தலைவர்களைப் பொறுத்தவரை நினைவு கூர்தல் எனப்படுவது ஓர் உணர்ச்சிகரமான சடங்கு அல்ல. மாறாக இனப்படுகொலைக்கு எதிரான நீதியைப் பெற்றுக்கொள்வதற்கான நீண்ட ஒரு போராட்டத்தின் ஒரு பகுதியே அது. அதை இந்த அடிப்படையில் விளங்கி வைத்திருக்கும் ஒரு கட்சி, அல்லது மக்கள் அமைப்பு அல்லது ஒரு செயற்பாட்டியக்கம், அல்லது அரசியல் வாதிகள் நினைவு கூர்தலை முன்னெடுப்பதற்குத் தகுதியானவர்களே.

இப்படிப்பார்த்தால் வடமாகாணசபை இனப்படுகொலைத் தீர்மானத்தை நிறைவேற்றியிருக்கின்றது. மே பதினெட்டை தமிழினஅழிப்பு நாளாகவும் தேசிய துக்க நாளாகவும் பிரகடனப் படுத்தியிருகிறது. எனவே அந்த அமைப்பு நினைவு கூர்தலை முன்னெடுப்பதற்கு உரித்துடையதுதானே என்று ஒரு கேள்வி எழும். ஆனால் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி கூறுகிறது மாகாணசபைக்கு அந்தத் தகுதி இல்லை என்று. வடமாகாணசபை நிகழ்வுகூர்தலை முன்னெடுக்கக் கூடாது என்று கடந்த ஆண்டிலேயே மக்கள் முன்னணி தெரிவித்திருந்தது. தமிழ் மக்களால் ஏற்றுக்கொள்ள முடியாத ஒரு கட்டமைப்பாகிய மாகாணசபையானது அந்நிகழ்வை முன்னெடுக்கக் கூடாது என்று அக்கட்சி தெரிவித்திருந்தது. மாகாணசபையை ஏற்றுக்கொள்ள மறுத்து தொடர்ந்து போராடிய காரணத்தினாலேயே நந்திக்கடற்கரையில் தமிழ் மக்கள் பெருமெடுப்பில் இனப்படுகொலை செய்யப்பட்டார்கள். எனவே இனப்படுகொலையை மாகாணசபை நினைவு கூர்வது பொருத்தமாக இருக்காது என்று அக்கட்சி கூறியது. இப்பொழுது பல்கலைக்கழக மாணவர் ஒன்றியமும் கூறுகிறது மாகாணசபைக்கு அந்தத் தகுதி இல்லை என்று.

அதேசமயம் முதலமைச்சர் விக்கினேஸ்வரனின் தலைமையில் தமிழ் மக்கள் பேரவை போன்ற ஏதும் ஓர் அமைப்பு அதை முன்னெடுத்தால் தாம் அதை ஆதரிப்பதாக மக்கள் முன்னணி கடந்த ஆண்டே கூறிவிட்டது. தமிழ் மக்கள் பேரவைக்குள் உள்ள சில தரப்புக்களும் அதை விரும்புவதாகத் தெரிகிறது. இது தொடர்பாக ஒரு மாதத்திற்கு முன்பு விக்கினேஸ்வரனுக்குக் கூறப்பட்டுள்ளது. ஆனால் அவர் அதற்கு தயாரில்லை என்று தெரிகிறது. மாகாண சபைக்குள் உள்ள சில தரப்புக்கள் அதைக் கடந்த ஆண்டைப்போல மாகாண சபையே நடாத்த வேண்டும் என்று விரும்புவதாகத் தெரிகிறது. ஆனால் கடந்த ஆண்டு குறைந்தளவு சனத்தைத் திரட்டியதிற்கும், அதில் கூட்டமைப்பு முக்கியஸ்தர்களை முன்னுக்குக்; கொண்டுவரப்போய் ஏற்பட்ட குழப்பங்களுக்கும் ஏற்பாட்டாளர்களே பொறுப்பு என்ற தொனிப்பட யாழ் பல்கழைக்கழக மாணவர் ஒன்றியம் கூறுகிறது.

வடமாகாண சபை உறுப்பினர்கள் சிலர் நிகழ்வைத் தமது கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்க முற்படுவதாக ஒரு குற்றச்சாட்டு உண்டு. வாக்குவேட்டை அரசியல்வாதிகளிடமிருந்து நிகழ்வை ஒரு பொது ஏற்பாட்டுக்குழுவிடம் கையளிப்பதே அதிகம் பொருத்தமாயிருக்கும் என்பதே கடந்த பத்தாண்டுகளில் கிடைத்த அனுபவம்;. ஆனால் அப்படியொரு பொது ஏற்பாட்டுக்குழுவை உருவாக்குவது பற்றி வடமாகாண சபையோ அல்லது முதலமைச்சரோ முன்கூட்டியே சிந்தித்துச் செயற்பட்டிருக்கவில்லை.

கடைசிக்கட்டப்போரில் அதிகம் இழப்புக்களைச் சந்தித்த ஒருவர் கேட்டார் ‘வடமாகாண சபை கடந்த மூன்றாண்டுகளாக நினைவு கூர்தலை எப்படி ஒழுங்கு செய்து வந்திருக்கிறது? குறைந்த பட்சம் இறந்தவர்களின்; தொகையைக் கூட அவர்களால் ஒப்பீட்டளவில் சரியாகக் கணக்கிடமுடியவில்லை.கடைசிக்கட்டப் போரில் மட்டுமல்ல ஈழப்போர் முழுவதிலும் கொல்லப்பட்ட பொதுமக்கள் தொடர்பாக ஒப்பீட்டளவில் திருத்தமான ஒரு புள்ளிவிபரம் வடமாகாண சபையிடம் உண்டா? அப்படியொரு புள்ளிவிபரத்தை ஏன் அவர்களால் திரட்ட முடியவில்லை? கடந்த சில அண்டுகளாக ஒரு பொது நினைவுச் சின்னத்தைக் கட்டியெழுப்புவது பற்றிக் கதைக்கப்பட்டு வருகிறது. முன்னைய ஆண்டுகளில் அதற்கென்று ஒரு குழுவும் நியமிக்கப்பட்டதாக ஒரு ஞாபகம். ஆனால் இன்று வரையிலும் ஒரு நினைவாலயத்தைக் கட்டியெழுப்ப அவர்களால் முடியவில்லை. மாறாக கத்தோலிக்க மதகுருமார்களால் உருவாக்கப்டட நினைவுச் சின்னம் மட்டும்தான் அங்கேயுண்டு. இவற்றையெல்லாம் கூட்டிக்கழித்துப்பார்த்தால் வடமாகாண சபையானது இது விடயத்தில் விசுவாசமாகச் செயற்படுகிறதா என்ற கேள்வி எழுகிறது’ என்று

அதில் உண்மையும் உண்டு. ஏனெனில், முள்ளிவாய்க்கால் நினைவு கூர்தலை ஓழுங்குபடுத்தி வரும் வடமாகாண சபைப் பிரமுகர்களில் பெரும்பாலானவர்கள் கூடுதலான பட்சம் சம்பந்தர் சுமந்திரனுக்கு விசுவாசமானவர்கள்தான். எதிர் காலத்தில் மாகாணசபைக்குள்ளும் அதற்கப்பால் நாடாளுமன்றத்திலும் பிரதிநிதிகளாக வர வேண்டும் என்று ஆசைப்படும் பலரும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு விசுவாசமாக இருப்பதை விடவும் கட்சித் தலைமைக்கு தமது விசுவாசத்தை எண்பிக்கவே முற்படுவர். இவ்வாறான தரப்புக்களால் ஏற்பாடு செய்யப்படும் நினைவு கூர்தலில் கட்சித் தலைமைக்கு முதன்மை தரப்படும்.

ஆனால் சம்பந்தரின் அரசியலின் மீது அதிருப்தியும் ஆத்திரமும் கொண்டிருக்கும் தரப்புக்கள் நினைவு கூருமிடங்களில் அவர்களைக் காணும் போது தமது எதிர்ப்பைக் காட்ட முற்படுகிறார்கள். ஏனெனில் நினைவு கூர்தல் எனப்படுவது அதிக பட்சம் உணர்ச்சிகரமான ஒரு நிகழ்வாகும். அவ் உணர்ச்சிகரமான ஒரு சூழலில் எதிர்ப்பு எப்படிக் கிழம்பும்? எங்கிருந்து கிளம்பும்? என்று தர்க்கபூர்வமாக முன்னனுமானிப்பது கடினம். இதுதான் கடந்த ஆண்டு நடந்தது. இம்முறையும் இப்படி நடக்கக் கூடாது என்றால் மாகாண சபை உரிய முன்னாயத்த ஏற்பாடுகளைச் செய்ய வேண்டியிருக்கும்.

எனவே வடமாகாண சபையால் ஏற்பாடு செய்யப்படும் நினைவுகூர்தலில் இது போன்ற குழப்பங்களுக்கு அதிகம் வாய்ப்புண்டு என்பதால் அதைத் தாங்களே முன்னெடுப்பது நல்லது என்று யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் கூறுகிறது. வடமாகாணசபை நினைவேந்தலை அரசியலாக்கப் பார்;க்கிறது என்று மாணவர்கள் குற்றஞ்சாட்டியுள்ளார்கள். ஆனால் நினைவேந்தல் என்பதே முழுக்க முழுக்க அரசியல்தான். அதன் அரசியலை நீக்குவதும் ஓர் அரசியல்தான். யாழ்ப்பாணத்திலிருந்து வரும் சில பத்திரிகைகள் மாணவர்களுக்கும் மாகாணசபைக்கும் இடையிலான முரண்பாட்டை ரசிப்பது போலவும் தெரிகிறது.

ஆனால் இது ரசிக்கத்தக்க ஒரு முரண்பாடு அல்ல என்று இக்கட்டுரையின் தொடக்கத்தில் குறிப்பிடப்பட்ட முன்னாள் இயக்கத்தவர் கூறுகிறார். முதலமைச்சரின் பதவிக்காலம் முடிவடைவதற்கு இன்னும் சில மாதங்களே உண்டு. எனவே இம்முறையாவது நினைவுகூர்தலுக்கான ஒரு பொது ஏற்பாட்டுக் குழுவை அவர் உருவாக்க வேண்டும் என்றும் அவர் கூறினார். தமிழ் மக்கள் பேரவைக்குள்ளும் இப்படியொரு அபிப்பிராயம் இருப்பதாகத் தெரிகிறது. மாகாணசபைக்குள் முதலமைச்சருக்கு ஆதரவான அணிக்குள்ளும் இப்படியொரு அபிப்பிராயம் இருப்பதாகத் தெரிகிறது. இது ஒரு பொதுக்கருத்து. இக்கட்டுரை ஆசிரியரும் உட்பட தமிழில் எழுதிக்கொண்டிருக்கும் பெரும்பாலானவர்களின் பொதுக்கருத்தும் இது தான். தமிழ் சிவில்ச்சமூகங்கள், செயற்பாட்டு இயக்கங்கள், மத நிறுவனங்கள் முக்கியமாகப் பாதிக்கப்பட்ட மக்கள் போன்ற எல்லாத் தரப்புக்களினதும் விருப்பமும் இதுதான். ஆனால் பூனைக்கு யார் மணியைக் கட்டுவது?

இது விடயத்தில் புலிகள் உறுப்பினர் மூத்த உறுப்பினர்கள் மூவர் தலையிட்டு ஓர் அறிக்கையை வெளியிட்டிருப்பது நிலமைகளில் தாக்கத்தை ஏற்படுத்தலாம் என்று தோன்றுகிறது. யாழ்ப்பாணம், திருமலை, மட்டக்களப்பு ஆகிய மூன்று மாவட்டங்களையும் பிரதிபலிக்கும் விதத்தில் புலிகள் இயக்கத்தின் மூத்த உறுப்பினர்கள் மூவர் சேர்ந்து ஓர் அறிக்கை வெளியிட்டிருக்கிறார்கள். இவ்அறிக்கையை வெளியிட்டு நடாத்திய ஊடகவியலாளர்கள் சந்திப்பில் பசீர் காக்கா என்று அழைக்கப்படும் புலிகள் இயக்கத்தின் மூத்த உறுப்பினர் ஒருவர் ஒரு கட்டத்தில் மனமுடைந்து அழுதிருக்கிறார். அவர் சிந்திய கண்ணீர் தமிழ் அரசியல் பரப்பில் குறிப்பாக முகநூற் பரப்பில் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. கடந்த மாவீரர் நாளை முன்னிட்டு வெளியிடப்பட்ட அறிக்கை போல இம்முறையும் இவர்கள் மூன்று பேரும் வெளியிட்டிருக்கும் அறிக்கை சம்பந்தப்பட்டவர்கள் மத்தியில் தாக்கத்தை ஏற்படுத்துமா?

‘ஒரு லேடிஸ் சைக்கிளில் வந்து பத்திரிகையாளர் மாநாட்டை நடத்திவிட்டுப் போன முதல் மனிதனாக காக்கா அண்ணைதான் இருப்பார்’; என்று யாழ் ஊடக அமையத்தைச் சேர்ந்த ஒரு ஊடகவியலாளர் சொன்னார். கடந்த மாவீரர் நாளன்று பசீர் காக்கா யாழ் ஊடக அமையத்தில் ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்றை நடாத்தினார். மாவீரர் நாளை யார் அனுஷ;டிப்பது என்பது தொடர்பாக சர்ச்சைகள் நிலவிய ஒரு காலச்சூழலில் அந்த ஊடகலவியலாளர் சந்திப்பு தாக்கம் மிகுந்ததாக இருந்தது. இம்முறையும் நினைவுகூர்தல் தொடர்பிலும் இம் மூன்று மூத்த உறுப்பினர்களுடைய அறிக்கை தாக்கத்தை ஏற்படுத்துமாக இருந்தால் சம்பந்தப்பட்ட தரப்புக்கள் ஒற்றுமையாக நினைவு கூர்தலை அனுஷ;டிக்கக் கூடும்.

ஆனால் இம்மூன்று பேர்களைக் குறித்தும் வெளியிடப்பட்ட அறிமுகக் குறிப்பில் ஒருவர் விவசாயி என்று கூறப்பட்டுள்ளது. ஒருவர் ஆலயம் ஒன்றில் தொண்டராக இருக்கிறார் என்று கூறப்பட்டிருக்கிறது. மற்றொருவருக்குத் தொழில் போடப்படவில்லை. பல தசாப்தகாலம் தமது வாழ்வை இளமையை கல்வியை சொத்துச் சுகங்களை பிள்ளைகளை உறவினர்களை போராட்டுத்துக்காக இழந்த இம்மூன்று பேர்களுடையதும் தற்போதைய தொழில்கள் இவை. இவர்களைப் போல பலர் கவனிக்கப்படாது உதிரிகளாக விடப்பட்டிருக்கிறார்கள.; உயிரோடிருக்கும் மூத்த போராளிகளின் நிலை இதுவென்றால் இறந்தவர்களை அதற்குரிய புனிதத்தோடு நினைவு கூரப்போவது யார்?

நிச்சயமாக வாக்குவேட்டை அரசியல் வாதிகள் அதைச் செய்யயப்போவதில்லை. நினைவு கூர்தல் எனப்படுவது இனப்படுகொலைக்கு எதிரான நீதியைப் பெறும் நீண்ட பயணத்தின் ஒரு பகுதிதான் என்பதை ஏற்றுக்கொள்ளாத அரசியல்வாதிகள் அதைச் செய்யப்போவதில்லை. கட்சி சார்பற்ற ஒரு பொது ஏற்பாட்டுக் குழுவே அதைச் செய்ய வேண்டும்.

தனது பதவிக்காலம் முடிவதற்கிடையில் விக்கினேஸ்வரனாவது அப்படியொரு ஏற்பாட்டுக்குழுவை உருவாக்க வேண்டும்.இம்முறை நினைவுகூர்தல் அவருடைய தலமைத்துவத்திற்கு ஒரு சவாலாக எழுந்திருக்கிறது. மாகாண சபைக்கும் தமிழ் மக்கள் பேரவைக்கும் இடையே கிழிபடப் போய் அவருடைய தலமைத்துவம் மீண்டும் ஒரு தடவை சோதனைக்குள்ளாகி இருக்கிறது. முரண்பட்டு நிற்கும் எல்லாத் தரப்புக்களையும் அரவணைத்து ஒரு பொதுக்கருத்தை உருவாக்கி ஒரு பொது ஏற்பாட்டுக்குழுவை உருவாக்க வேண்டிய பொறுப்பு அவருக்கும் உரியது. இல்லையென்றால் இறந்தவர்களின் பெயராலும் ஒற்றுமைப்படமுடியாத கேவலமான ஒரு மக்கள் கூட்டமாக ஈழத்தலைவர்கள் பழிக்கப்படுவார்கள்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More