ஓர் ஆட்சி மாற்றத்தின் ஊடாக உருவாக்கப்பட்ட நல்லாட்சி அரசாங்கத்தில் அரசியல் ஸ்திரத்தன்மை ஆட்டம் கண்டிருப்பது துரதிஸ்டவசமானது. அரசியல் ஸ்திரத்தன்மை உறுதிப்படுத்தப்பட வேண்டியது மிகவும் முக்கியம். உறுதியான அரசியல் நிலைமை இல்லாமல் ஆட்சியைக் கொண்டு நடத்துவது என்பது கடினமான காரியம்.
நல்லாட்சி அரசாங்கத்தின் பங்காளிகளான இரண்டு அரசியல் கட்சிகளும் பலப்பரீட்சைக்கான மோதல்களில் மும்முரமாக ஈடுபட்டிருக்கின்றன. தனித்து ஆட்சியை நடத்துவதா அல்லது இணைந்து செயற்படுவதா என்பதில் இரண்டு கட்சிகளுக்கும் இடையில் முடிவு காண முடியவில்லை. அதிகாரத்தைத் தொடர்வதற்கான போராட்டம், அரசியல் இருப்புக்கான போராட்;டமாக விஸ்வரூபம் எடுத்துள்ளது.
ஊழல் செயற்பாடுகளை இல்லாமல் செய்து, சட்ட ஆட்சியை நிலைநிறுத்தி ஜனநாயகத்தை மேம்படுத்தி, நீண்டகாலம் இழுபறி நிலையில் உள்ள இனப்பிரச்சினைக்கு ஓர் அரசியல் தீர்வு காண வேண்டும் என்ற நோக்கத்துடன் உருவாக்கப்பட்ட புதிய ஆட்சி, அதன் மூன்றாண்டு காலத்திலேயே அல்லாடத் தொடங்கிவிட்டது. அதன் ஆட்சிக் காலம் முடிவடைய இன்னும் ஒன்றரை வருடங்களே இருக்கின்றன. இந்த எஞ்சிய காலத்;தில் எவ்வாறு அரசாங்கத்தைக் கொண்டு நடத்துவது என்பது குறித்த ஜனாதிபதியின், நாடாளுமன்றக் கொள்கைப் பிரகடனம் நாட்டு மக்களுக்கு நம்பிக்கை ஊட்டுவதாக அமையவில்லை.
யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வந்தபின்னர் நாட்டில் ஊழல்கள் மலிந்தன. எதேச்சதிகாரத்துக்காக ஜனாதிபதி ஆட்சி முறை தீவிரமாகப் பயன்படுத்தப்பட்டது. சவால்களுக்கு உட்படுத்த முடியாத நிறைவேற்ற அதிகாரம் கொண்ட ஜனாதிபதியின் அதிகாரங்கள் மேலும் வலுப்படுத்தப்பட்டன. யுத்த மோதல்கள் காரணமாக நலிந்திருந்த நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சிப் பாதையில் வேகம் கொண்டிருந்தது. இத்தகைய ஓர் அரசியல் சூழலிலேயே ஆட்சி மாற்றம் நிகழ்ந்தது. ஆயினும், நல்லாட்சிக்காக உருவாக்கப்பட்டதாகக் கூறப்பட்ட புதிய அரசாங்கம் நல்லாட்சியை வெற்றிகரமாக நடத்த முடியாமல் நடுவழியில் நிலைதடுமாறி தவிக்கின்றது.
நல்லாட்சி அரசாங்கத்தின் முதலாவது நாடாளுமன்ற அமர்வுத் தொடர் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டதையடுத்து, அதன் இரண்டாவது தொடர் அமர்வு, ஜனாதிபதியினால் ஆரம்பித்து வைக்கப்பட்டிருக்கின்றது.
கடந்த 2015 ஆம் ஆண்டு தேர்தலின் போது மக்களுக்கு அளித்த ஆணைகளை அரசாங்கம் நிறைவேற்றவில்லை. காலத்தை இழுத்தடிப்பதிலேயே நோக்கமாகக் கொண்டிருக்கின்றது. ஜனநாயகம் நிலைநிறுத்தப்பட்ட போதிலும், ஊழல்கள் ஒழிக்கப்படவில்லை. ஊழல் புரிந்தவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு, நீதி வழங்கப்படவில்லை என்ற குறைபாடுகள், பொதுவாக நாட்டு மக்கள் மனங்களில் மேலோங்கியிருந்தன.
இனிப்பான பேச்சுக்கள் ஏமாற்றம் தரும் போக்கு
யுத்தம் மூள்வதற்கு மூல காரணமாக விளங்கும் இனப்பிரச்சினைக்குத் தீர்வு காணப்படும். யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களின் எரியும் பிரச்சினைகள் பலவற்றை புதிய அரசாங்கம் தீர்த்து வைக்கும். பெரும்பான்மை இன மக்களுடன் சமமான உரிமைகளுடள் ஒற்றுமையாக சகவாழ்வு வாழ முடியும் என்று நம்பி இருந்த சிறுபான்மை தேசிய இனமாகிய தமிழ் மக்களின் எதிர்பார்ப்புக்களும் நிறைவேறவில்லை. மாறாக அவர்களின் நாளாந்தப் பிரச்சினைகள் மேலும் மேலும் அதிகரித்துச் செல்வதற்கே அரசாங்கத்தின் நடவடிக்கைகள் துணைபுரிவதாக அமைந்திருக்கின்றன என்ற மன உணர்வுக்கு அவர்கள் ஆளாக நேர்ந்துள்ளது. இந்த நிலையில் ஜனாதிபதியின் கொள்கைப் பிரகடன உரை பெரும் ஏமாற்றத்தையே அளித்திருக்கின்றது.
நல்லாட்சி அரசாங்கத்தின் கடந்த மூன்று ஆண்டு காலப்பகுதியில் கவர்ச்சிகரமான வாக்குறுதிகள் நிறைந்த இனிப்பான பேச்சுக்களையே அரச தலைவரிடமிருந்தும், பிரதமர் உள்ளிட்ட அமைச்சர்களிடமிருந்தும் வெளிப்;பட்டிருக்கின்றன. ஆனால் ஊழல்களை ஒழிப்போம், சட்டத்தையும் ஒழுங்கையும் பேணி, நீதியை நிலைநாட்டுவோம் என்ற தேர்தல் காலத்து ஆணை உள்ளிட்ட உறுதி மொழிகள் முறையாக நிலைநாட்டப்படவில்லை.
ஊழல் புரிந்தவர்களும், முறைகேடான செயற்பாடுகளுக்குப் பொறுப்பானவர்களும் தண்டனை பெறுவதில் இருந்து தப்பி இருப்பதற்கான தண்டனை விலக்கீட்டுக் கலாசாரமே புதிய அரசாங்கத்திலும் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. முன்னைய அரசாங்கத்தில் முறைகேடாகச் செயற்பட்டவர்களும், அவற்றுக்குப் பொறுப்பானவர்களும் தண்டிக்கப்படவில்லை. மாறாக அவர்கள் அதிகார பலத்தின் ஊடாக வெளிப்படையாகவே பாதுகாக்கப்பட்டார்கள். அதிகார பாதுகாப்பின் நிழலில் அவர்கள் தொடர்ந்து செயற்படுவதற்கான வாய்ப்புக்கள் உருவாகியிருந்தன.
ஆட்சி மாற்றத்தின் பின்னர் அத்தகைய வெளிப்படையான செயற்பாடுகள் குறைந்திருக்கின்ற போதிலும்இ ஊழல்கள் குறைவடைவதற்கான அறிகுறிககைள் காண முடியவில்லை. புதிய ஆட்சியின் கீழேயும் ஊழல்கள் குறித்து பல முறைப்பாடுகள் பதிவாகியிருக்கின்றன. பெருந்தொகையான அரச நிதி மோசடி செய்யப்பட்டிருப்பது குறித்த தகவல்கள் வெளியாகியிருந்தன. மோசடி செய்தவர்கள் பற்றிய தகவல்களும் பகிரங்கமாக வெளியாகி பெரும் பரபரப்பும் ஏற்பட்டிருந்தது.
இலஞ்சம், ஊழல் மற்றும் நிதி மோசடிகள் தொடர்பாக பலர் லஞ்ச ஊழல்களை விசாரணை செய்யும் ஆணைக்குழுவினரால் விசாரணை செய்யப்பட்டார்கள். அந்த விசாரணை அறிக்கைகளில் பெருந்தொகையான அரச நிதி மோசடி செய்யப்பட்டிருப்பது பற்றிய தகவல்கள் அதிர்ச்சியளிக்கும் வகையில் வெளியாகியிருந்தன. விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட பலர் கைது செய்யப்பட்டு பின்னர் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டிருந்தார்கள். நிதிமோசடிகள் தொடர்பான பல விசாரணைகளுக்கு என்ன நடந்தது என்பது பற்றிய வெளிப்படைத்தன்மை காணப்படவில்லை.
இத்தகைய ஒரு பின்னணியில்தான் மூன்று முக்கிய குறிக்கோள்களை அடிப்படையாகக் கொண்டு 15 வேலைத்திட்டங்கள் நல்லாட்சி அரசாங்கத்தின் இரண்டாவது நாடாளுமன்ற அமர்வின் கொள்கைப் பிரகடனத்தில் உள்ளடக்கப்பட்டிருக்கின்றன.
அதன்படி, துரித பொருளாதார வளர்ச்சியை அடிப்படையாகக் கொண்டு, இலங்கையை அனைத்து துறைகளிலும் வளர்ச்சி பெறச் செய்வது அரசாங்கத்தின் முதலாவது கொள்கை. அரசியல் ஸ்திரத்தன்மைக்காக தேசிய மற்றும் மத நல்லிணக்கத்தைப் பெற்றுக்கொள்வது இரண்டாவது கொள்கையாகும். ஊழல் மற்றும் மோசடிகளற்ற செயல்வினை மிக்க அரச தந்திரத்தை உருவாக்குவது மூன்றாவது குறிக்கோளாகும். ‘எனது ஆட்சிக்காலத்திற்குள் மேற்குறிப்பிட்ட வெற்றிகளைப் பெறுவதே எனது ஒரே எண்ணமாகும்’ என்று ஜனாதிபதி தனது கொள்கைப் பிரகடனத்தில் கூறியுள்ளார்.
பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான 15 விடயங்கள்
மக்களின் பொருளாதார சுபிட்சம், வறுமை ஒழிப்பு, இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு, அரச பணியாளர்களுக்குத் திருப்திகரமான சூழல் என்பவற்றை ஏற்படுத்துவதுடன் பொலிஸ் மற்றும் முப்படையினரின் தன்னம்பிக்கையையும், உயர் குறிக்கோளையும் உறுதிப்படுத்தல், சட்டம், அதிகாரம், ஜனநாயகம், மனித உரிமை மற்றும் பேச்சுச் சுதந்திரத்தை உறுதி செய்தல், தமிழ் மக்களின் சம உரிமை அடிப்படையிலான அபிலாசைகளை ஏற்றுக்கொள்வது, முஸ்லிம் மக்களின் சமூகஇ கலாசார தேவைகளை உறுதி செய்தல், மலையக மக்களின் பொருளாதார, சமூக நிலையை மேம்படுத்தல், பெரும்பான்மையினராகிய சிங்கள மக்களின் கலாசார உரிமைகளை பலப்படுத்தி உறுதி செய்து தேசத்தின் அடையாளத்தை வலுப்படுத்தல், பெண்களின் நேரடி பங்களிப்புக்காக அவர்களைப் பலப்படுத்தல், விசேட தேவை உடையவர்களுக்கான உணர்வுபூர்வச் செயற்பாடு, இயற்கை சூழலைப் பாதுகாக்கும் தேசிய வளங்களின் அபிவிருத்தி, சமய நம்பிக்கைகளையும், மரபுரிமைகளையும் பாதுகாக்க, சமயப் பெரியார்களையும் மதகுருமார்களையும், மகா சங்கத்தினரையும் போஷித்தல், தேசிய அபிவிருத்திக்காக, அரசியல் பலப்பரீட்சைக்கு அப்பால், சகல அரசியல் கட்சிகளையும் ஒன்றிணைத்தல் ஆகிய விடயங்களை உள்ளடக்கிய 15 வேலைத்திட்டங்களே ஜனாதிபதியினால் குறிப்பிடப்பட்டிருக்கின்றன.
அரசாங்கத்தின் மீதமுள்ள ஆட்சிக் காலமாகிய ஒன்றரை வருடங்களில் இந்த வேலைத்திட்டங்களை நிறைவேற்றுவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்பதே ஜனாதிபதி வெளியிட்டுள்ள பிரகடனத்தின் சாராம்சமாகும்.
ஜனநாயகத்தை உறுதிப்படுத்துவது, ஊழல்களை ஒழித்து நீதியை நிலைநாட்டுவது, பிரச்சினைகளுக்குத் தீர்வு கண்டு நாட்டில் இன நல்லிணக்கத்தையும் ஐக்கியத்தையும் உருவாக்கி நல்லாட்சி நடத்துவது என்ற முன்னைய கொள்கை நிலைப்பாட்டில் மாற்றமில்லை என குறிப்பிட்டிருந்தாலும்கூட, அரசியல் ரீதியான பிரச்சினைகளுக்கு, பொருளதார அபிவிருத்தியின் மூலம் தீர்வு காண்கின்ற மூலோபாயம் இப்போது ஜனாதியினால் வெளிப்படுத்தப்பட்டிருக்கின்றது.
யுத்தத்தினால் மிக மோசமாகப் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுடைய பிரச்சினைகள் நாளுக்குள் நாள் பல்கிப் பெருகிக் கொண்டிருக்கின்றன. பிரச்சினைகளுக்குத் தீர்வு கண்டு, அவற்றைப் படிப்படியாகக் குறைத்து நீடித்த நிலையான அரசியல் உறுதிப்பாட்டிற்காக இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காணுகின்ற வழிமுறைகள் கைவிடப்பட்டுள்ளதான ஒரு தோற்றத்தையே நாடாளுமன்றத்தின் இரண்டாவது செயலமர்வுத் தொடருக்கான பிரகடனம் ஏற்படுத்தியிருக்கின்றது.
ஊழல்கள் ஒழிக்கப்படாமையும், ஊழல், உரிமை மீறல், இன, மதவாதச் செயற்பாடுகள் உள்ளிட்ட மக்கள் நலன்களுக்குப் பாதகமான செயல்களில் ஈடுபடுபவர்களைக் கண்டறிந்து நிதியை நிலைநாட்டுகின்ற செயற்பாடுகள் பலவீனமாகவே இருக்கின்றன. நாட்டில் நீதித்துறைக்கான கட்டமைப்பு செயற்பட்டு வருகின்ற போதிலும் சட்டத்தையும் ஒழுங்கையும் முறையாகப் பேணி, நீதியை நிலைநாட்டுகின்ற செயற்பாடுகள் வல்லமை குறைந்ததாகவே காணப்படுகின்றது.
ஜனநாயகத்தை வலுப்படுத்துவதாகவும் அதனை மேம்படுத்துவதாகவும் அரசு கூறினாலும், ஜனநாயகத்தின் அடிப்படை அம்சமாகிய மனித உரிமை மீறல்கள் பல்வேறு வடிவங்களில் தொடர்கின்றன. இறுதி யுத்தத்தின்போது இடம்பெற்ற மனித உரிமை மீறல்களுக்கான பொறுப்பு கூறுகின்ற சர்வதேச கடப்பாட்டை நிறைவேற்றுவதில் உளப்பூர்வமான ஆர்வத்தைக் காண முடியவில்லை. வெறுமனே கண்துடைப்பு நடவடிக்கைகளே முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. நலிந்து போயுள்ள நாட்டின் பொருளாதாரத்தைத் தூக்கி நிமிர்த்தும் நோக்கத்திற்காக சர்வதேச பொருளாதார உதவி நலன்களைப் பேணுவதற்கான நடவடிக்கைகளே முதன்மை பெற்றிருக்கின்றன.
நாட்டு மக்களிடையே ஐக்கியத்தையும் நல்லிணக்கத்தையும் ஏற்படுத்துவதற்கான நடவடிக்கைகள், பொருளாதார நலன்களுக்காக சர்வதேச மட்டத்தில் சந்தைப்படுத்துகின்ற ஒர் அரசியல் இராஜதந்திரச் செயற்பாடே முன்னெடுக்கப்படுகின்றது. சர்வதேச அழுத்தங்களுக்கு அமைவாக உறுதி மொழிகள் வழங்கப்படுகின்றன. பொறுப்புக்கள் ஏற்றுக்கொள்ளப்படுகின்றன. இந்த வகையிலேயே ஐநா மனித உரிமைப் பேரவையின் தீர்மானங்களுக்கு இணை அனுசரணை வழங்கப்பட்டது. ஆனால் அந்த பொறுப்பை நிறைவேற்றுவதில் காலம் தாழ்த்தும் போக்கிலான திசைமாறிய நடவடிக்கைகளே முதன்மை பெற்று வருகின்றன.
இத்தகைய செயற்பாட்டு நிரலின் கீழேயே நாடாளுமன்றத்தின் இரண்டாவது தொடர் செயலமர்வுக்கான விடயங்கள் முன்னுரிமைப்படுத்தப்பட்டிருக்கின்றன. அரசியல் ரீதியாக அணுகப்பட்டு, தீர்வு காணப்பட வேண்டிய விடயங்களுக்கு, பொருளாதார அபிவிருத்தியின் மூலம் முடிவு காண்பதற்கான தந்திரோபாயம் பதிலீடு செய்யப்பட்டிருப்பதைக் காண முடிகின்றது.
முதன்மை பெறாத அரசியல் ஸ்திரத்தன்மை
நாட்டின் அரசியல் ஸ்திரத்தன்மையை ஏற்படுத்துவதும், அதனை உறுதிப்படுத்துவதும் முதன்மை பெற்றிருக்க வேண்டும். அரசியல் ஸ்திரத்தன்மை இல்லையேல் எந்தவொரு காரியத்தையும் முன்னெடுக்க முடியாது. சுவர் இருந்தால்தான் சித்திரம் கீற முடியும். பொருளாதார அபிவிருத்தியென்றாலும்சரி, அரசியல் மேம்பாடாயினும்சரி, அரசியல் ஸ்திரத்தன்மை அடிப்படையில் அவசியம்.
இருகட்சிகள் இணைந்து உருவாக்கிய அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடனம், ஜனாதிபதி தரப்பினால் தனித்து தயாரிக்கப்பட்டதாகத் தகவல்கள் கசிந்திருக்கின்றன. ஐக்கிய தேசிய கட்சியும், சிறிலங்கா சுதந்திரக்கட்சியும் இணைந்ததே இன்றைய அரசாங்கம். ஐக்கிய தேசிய கட்சியின் தலைவரே பிரதமராகப் பதவி வகிக்கின்றார். சிறிலங்கா சுதந்திரகட்சிpயின் தலைவரே ஜனாதிபதி. அரசாங்கத்தின் முன்னெடுப்புக்களில் ஜனாதிபதியும் பிரதமரும் இணைந்து செல்ல வேண்டும். இணைந்து முடிவெடுக்க வேண்டும். இணைந்து மேற்கொள்கின்ற தீர்மானங்களே முன்னெடுப்பதற்கு உகந்தவையாக இருக்க முடியும்.
ஆனால் அரசாங்கத்தின் கொள்கைப் பிரடனம் அரசின் பங்காளிக் கட்சித் தலைவராகிய பிரதமருடன் கலந்தாலோசிக்காமல் ஜனாதிபதி தரப்பினால் தனிப்பட தயாரிக்கப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது. .இந்தப் பிரகடன உரை நாடாளுமன்றத்தில் விவாதத்திற்கு உட்படுத்தப்படுகின்ற போதிலும், பங்காளிகளின் பங்களிப்பின்றி தயாரிக்கப்பட்டிருப்பது என்பது ஏற்கனவே இடம்பெற்றுள்ள அதிகாரப் போட்டியை மேலும் மோசமடையவே செய்யும் என்பதில் சந்தேகமில்லை.
உள்ளுராட்சித் தேர்தலில் ஆளும் கட்சிகளில் ஒன்றாகிய சிறிலங்கா சுதந்திரக்கட்சி படுதோல்வி அடைந்துள்ளது. ஐக்கிய தேசிய கட்சியும் வெற்றிபெற்றிருக்க வேண்டிய அளவில் வெற்றி பெறவில்லை. அதுவும் தோல்வியையே தழுவியிருக்கின்றது. இரு கட்சிகளுக்கும் பொது அரசியல் எதிரியாகிய பொது எதிரணி இந்தத் தேர்தலில் அமோக வெற்றி ஈட்டியுள்ளது. அளவுக்கு அதிகமாக அரசியல் மயப்படுத்தப்பட்ட உள்ளுராட்சித் தேர்தலில் மக்கள் அரசு மீது கொண்டுள்ள அவநம்பிக்கையையும், ஆளும் கட்சிகள் மீதான அதிருப்தியையும் முகத்தில் அடித்தாற்போல வெளிப்படுத்தி இருக்கின்றார்கள். இந்தத் தேர்தல் தோல்வியே ஐக்கிய தேசிய கட்சிக்கும், அரசாங்கத்தின் பங்காளிகளாக உள்ள சிறிலங்கா சுதந்திரக்கட்சியைச் சேர்ந்த அணியினருக்கும் இடையே அதிகாரப் போட்டியை ஏற்படுத்தியுள்ளது.
இழுபறி நிலையில் தொடர்கின்ற இந்த அதிகாரப் போட்டிக்கு மத்தியிலேயே நாடாளுமன்றத்தின் இரண்டாவது செயலமர்வுத் தொடரை ஜனாதிபதி வைபவ ரீதியாக ஆரம்பித்து வைத்து, பிரகடன உரையாற்றியிருக்கின்றார். அதில் குறிப்பிடப்பட்டுள்ள 15 விடயங்களில் முதன்மை பெற்றிருக்க வேண்டிய அரசியல் ஸ்திரத்தன்மையை ஏற்படுத்துவதற்கான முயற்சி இறுதி விடயமாகக் குறிப்பிடப்பட்டிருக்கின்றது.
முதல் மூன்று விடயங்களும் பொருளாதார அபிவிருத்தியுடன் தொடர்புடையவை. அடுத்த இரண்டு விடயங்களும் அரச பணியாளர்களும், பொலிசார் உள்ளிட்ட படையினரின் மனநிலை சார்ந்த விடயமாகக் காணப்படுகின்றது. சட்டம், அதிஎhரம், ஜனநாயகம், மனித உரிமை விடயங்கள் ஆறாவது இடத்தில் குறிப்பிடப்பட்டிருக்கின்றன.
ஏழு, எட்டு, ஒன்பதாவது இடங்களிலேயே இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வுடன் தொடர்புடைய விடயங்கள் குறிப்பிடப்பட்டிருக்கின்றன. ஆயினும், இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு காணப்பட வேண்டியதன் அவசியம் அந்த விடயங்களில் அழுத்தம் பெறவில்லை. தமிழ் மக்களின் சம உரிமைகளை அடிப்படையாகக் கொண்ட அபிலாசைகளை ஏற்றுக்கொள்ளல் என்றே குறிப்பிடப்பட்டிருக்கின்றது.
இனச்சார்பற்ற மதச்சார்பற்ற தேசிய அடையாளமே தேவை
பெரும்பான்மை இனத்தவராகிய சிங்கள மக்களுக்கு உள்ளதைப் போன்ற உரிமைகள் சமமான முறையில் தங்களுக்கும் வழங்கப்பட வேண்டும் உறுதி செய்யப்பட வேண்டும் என்பதே தமிழ் மக்களின் கோரிக்கையாகும். இது, அவர்களின் இந்தக் கோரிக்கைக்கு அடிப்படையான அபிலாசைகளை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்ற கட்டத்தைக் கடந்தது. உரிமைகள் வழங்கப்பட வேண்டும். அந்த உரிமைகள் எவராலும் பறிக்கப்பட முடியாத வகையில் அரசியல் அமைப்பின் ஊடாக உறுதி செய்யப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்பதே அவர்களின் நீண்ட நாளைய வேண்டுகோள். அதனை நிறைவேற்றுவது தொடர்பில் அரச தரப்பு தயாராக இல்லை என்பதையே ஜனாதிபதியின் பிரகடனம் தொனி செய்திருக்கின்றது.
மத ரீதியான ஒடுக்குமுறைகளுக்கு உள்ளாகி வருகின்ற முஸ்லிம் மக்களின் பிரச்சினைக்குத் தீர்வு காண வேண்டும் என்றில்லாமல், அவர்களின் சமூக கலாசார தேவைகைள உறுதி செய்வது பற்றியே பிரகடனத்தில் குறிப்பிடப்பட்டிருக்கின்றது.
மலையக மக்களைப் பொறுத்தமட்டில், அவர்களின் அரசியல் உரிமைகளும் சமூக உரிமைகளும் நிரந்தரமான கிராமிய வடிவிலான குடியிருப்பு சார்ந்து வழங்கப்பட வேண்டும். தமிழ் மக்களைப் போலவே அவர்களுடைய பிரச்சினையும் அரசியலமைப்பின் ஊடாக திரும்பப் பெற முடியாத வகையில் நிரந்தரமாக அனுபவிக்கும் வகையில் உறுதி செய்யப்பட வேண்டும். வழங்கப்பட வேண்டும். மாறாக அவர்களின் பொருளாதார சமூக மேம்பாடு பற்றியே குறிப்பிடப்பட்டிருக்கின்றது.
பத்தாவது விடயமாகக் குறிப்பிடப்பட்டுள்ள சிங்கள மக்கள் தொடர்பிலான விடயம் பேரினவாத சிந்தனையை வெளிப்படுத்துவதாகவே அமைந்திருக்கின்றது. பல்லின மக்கள் வாழ்கின்ற பல சமயங்களைப் பின்பற்றுகின்ற பல சமூகங்களைக் கொண்ட நாடு என்பதை மறுதலிக்கும் தொனிசார்ந்த வகையில் இது அமைந்திருக்கின்றது. பெரும்பான்மை சமூகமான சிங்கள மக்களின் கலாசார உரிமைகளைப் பலப்படுத்தி, உறுதி செய்து, தேசத்தின் அடையாளத்தை வலுப்படுத்தல் என்று குறிப்பிடப்பட்டிருக்கின்றது.
சிங்கள மக்களுடைய கலாசாரமும், பௌத்த மதக் கோட்பாட்டு பயன்பாடும், எந்தவிதமான இடையூறுமின்றி இடம்பெற்று வருகின்றன. ஏனைய மதங்கள் எதிர்கொண்டுள்ள நெருக்கடிகளையும் அடக்குமுறைளையும் சிங்கள பௌத்தர்கள் எதிர் கொள்ளவில்லை. இந்த நிலையில் அவர்களுடைய கலாசார உரிமைகளைப் பலப்படுத்துவதும் உறுதி செய்வதும் ஏன் என்பது தெரியவில்லை. அவ்வாறு பலப்படுத்தி உறுதிப்படுத்துவதன் ஊடாகவே தேசத்தின் அடையாளம் வலுப்படுத்தப்படும் என இந்த பத்தாவது விடயத்தில் குறிப்பிடப்பட்டிருக்கின்றது.
இலங்கை என்ற தேசத்தின் அடையாளம் பௌத்த சிங்கள தேசம் என்பதையே இது சுட்டிக்காட்டுகின்றது. பல்லின மக்களும் பல மதங்களைப் பின்பற்றுகின்றவர்களும் இங்கு வாழ்கின்றார்கள். அவர்களின் சமய சமூக உரிமைகள் உறுதி செய்யப்பட்டு, அவர்கள் அனைவரையும் உள்ளடக்கிய ஒரு தேசத்தின் அடையாளமே அவசியமாகின்றது. அதற்கு இனச்சார்பற்ற, மதச்சார்பற்ற கொள்கையே அவசியம். அதன் ஊடாக மட்டுமே இலங்கையர் என்ற தேச அடையாளத்தை உருவாக்க முடியும்.
மொத்தத்தில் இன ஐக்கியம் இன நல்லிணக்கத்துடன் கூடிய தேசிய இருப்புக்குரிய முக்கியமான விடயங்கள் அவற்றுக்குரிய தன்மைகளுடன் நல்லாட்சி அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடனத்தில் இடம்பெறவில்லை. இது கவலைக்குரியது. மிகுந்த ஏமாற்றத்திற்குரியது. அது மட்டுமல்ல. நாட்டின் வளமான எதிர்காலத்திற்கும் நல்லதாகத் தென்படவில்லை.