கர்நாடக மாநிலத்தின் 23-வது முதல்வராக எடியூரப்பா இன்று பதவியேற்றுள்ளார். அவருக்கு ஆளுநர் வாஜுபாய் வாலா பதவிப்பிரமாணம் செய்து வைத்துள்ளார். கர்நாடக சட்டசபை தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில் 104 இடங்களில் வென்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள பாஜகவின் முதல்வர் வேட்பாளரான எடியூரப்பா ஆளுநரை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரினார்.
அதேசமயம், மதச்சார்பற்ற ஜனதா தளம் ஆட்சியமைக்க காங்கிரஸ் ஆதரவு அளித்தமையால் இரு கட்சிகளும் இணைந்தால் பெரும்பான்மை ஏற்படும் என்பதனால் கூட்டணி ஆட்சி அமைக்க முடிவு செய்து முதல்வர் வேட்பாளராக தேர்வு செய்யப்பட்ட குமாரசாமி ஆளுநரை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரினார்.
இந்தநிலையில் எடியூரப்பாவை ஆட்சியமைக்க ஆளுநர் வஜுபாய் வாலா நேற்று இரவு அழைப்பு விடுத்ததுடன் மேலும் பதவியேற்ற நாளில் இருந்து 15 நாட்களில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டார்.
கர்நாடகாவில் பாஜகவை ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு விடுத்ததை எதிர்த்து காங்கிரஸ் சார்பில் உச்சநீதிமன்றத்தில் நேற்றிரவு மனுதாக்கல் செய்த போதும் மனுவை உடனடியாக விசாரித்த உச்ச நீதிமன்றம், பதவியேற்புக்கு தடை விதிக்க மறுத்துவிட்டது.
இந்நிலையில் ராஜ்பவனில் இன்று காலை பதவியேற்பு விழா நடைபெற்றது. கர்நாடக மாநிலத்தின் 23-வது முதல்வராக எடியூரப்பா பதவியேற்றுக்கொண்டார். இதனையடுத்து எடியூரப்பா பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.