யாழ்ப்பாணத்தை சேர்ந்த புத்திஜீவிகள், இந்தியாவிலிருந்து தமிழ் வருவதை நிறுத்த வேண்டும் என கோரியிருந்தனர் –
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்..
நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி ஆட்சி முறையை ஒழிக்காது இலங்கையர்கள் என்ற அடையாளத்துடன் கூடிய ஐக்கியமான சமூகத்தை உருவாக்க முடியாது என சிரேஷ்ட எழுத்தாளர் குணசேன விதான தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று நடைபெற்ற கருத்தரங்கொன்றில் கலந்துக்கொண்டு பேசும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
எமது நாட்டில் ஒரு சர்வாதிகாரி குறித்து எமக்கு அறிய கிடைத்தது. எனக்கு நானே பொறுப்புக் கூற வேண்டும் என அவர் கூறியிருந்தார். அந்த சர்வாதிகாரியின் ஆத்மா 100 வருடங்களின் பின்னர் இலங்கையில் பிறந்தது. பெண் ஆணாகவும் ஆணை பெண்ணாகவும் மட்டுமே தன்னால் மாற்ற முடியாது எனவும் மற்ற அனைத்தையும் தன்னால் செய்ய முடியும் எனவும் நிறைவேற்று அதிகாரத்தை கொண்டு வந்த ஜே.ஆர். ஜெயவர்தன தெரிவித்திருந்தார்.
இந்த சர்வாதிகார தன்மையில் இருந்து விலகி, ஜனநாயக சமூகத்தை ஏற்படுத்துவது எப்படி என்பது குறித்து நாங்கள் சிந்தித்து வருகின்றோம். நாட்டிற்கு சுதந்திரம் கிடைப்பதற்கு முன்னரும், கிடைத்த பின்னரும் பல போராட்டங்கள் நடந்தன. சுதந்திரம் கிடைப்பதற்கு முன்னர் சட்டமயமல்லாத சமூக கூட்டுடன் கூடிய சகோதரத்துவம் காணப்பட்டது.
இலவச கல்வியை கொண்டு வந்த கன்னங்கரவின் அறிக்கைக்கு ஆலோசனைகளை பெற்றுக்கொண்ட போது, அதில் தமது நிலைப்பாடுகளை முன்வைத்த யாழ்ப்பாணத்தை சேர்ந்த புத்திஜீவிகள், இந்தியாவில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு தமிழ் வருவதை நிறுத்த வேண்டும் என கோரியிருந்தனர். எனினும் அந்த முக்கிய யோசனை செயற்படுத்தப்படவில்லை.
அதேபோல் சுதந்திரத்திற்காக எண்ணில் அடங்காத ஜனநாயக போராட்டங்கள் நடந்துள்ளன. சுதந்திர மனிதனாக வாழ்வதற்கு இருக்கும் உரிமைகளுக்காகவும் போராட்டங்கள் நடந்துள்ளன.
நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி ஆட்சி முறையை ஒழிக்குமாறு போராட்டம் நடத்தியவர்கள் தற்போது அதனை ஒழிக்கக் கூடாது என்று கூறிவருகின்றனர். நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி ஆட்சியை முறையை ஒழிக்காது இலங்கையர்கள் என்ற அடையாளத்துடன் கூடிய சமூகத்தை உருவாக்க முடியாது.
நாட்டில் பிறக்கும் அனைவரும், சிங்களவர், தமிழர், முஸ்லிம் என்ற பேதங்கள் இன்றி இலங்கையர்களாக மாறவேண்டும். யாழ்ப்பாணத்தை சேர்ந்த புத்திஜீவியான பேராசிரியர் கார்த்திகேசு சிவத்தம்பி, நான் தமிழன் ஆனால் இலங்கையன் என்று கூறினார். தேசிய ஐக்கியம் இருக்குமாயின் இலங்கையில் ஒரு போதும் நிறைவேற்று அதிகாரம் உருவாகாது. ஜனநாயக விரோத ஆட்சியும் ஏற்படாது. நாட்டின் தேசிய ஐக்கியத்திற்காகவே நாட்டை சேர்ந்த பல புத்திஜீவிகள் தமது உயிரை தியாகம் செய்தனர் எனவும் சிரேஷ்ட எழுத்தாளர் குணசேகர விதான குறிப்பிட்டுள்ளார்.