முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு ஒரு விவகாரமாகவே மாறியிருப்பது வருந்தத் தக்கது. தமிழ் இனத்தின் அரசியல் உரிமைப் போராட்ட வரலாற்றில் முள்ளிவாய்க்கால் அவலம் என்பது, மிகமோசமான துன்பியல் சம்பவமாகப் பதிவாகியிருக்கின்றது. பல்வேறு பரிமாணங்களைக் கொண்ட அந்தத் துன்பியல் நிகழ்வை நினைவுகூர்வதில் ஏற்பட்டுள்ள முரண்பாடுகளும் ஏட்டிக்குப் போட்டியான நிலைப்பாடுகளும்கூட முள்ளிவாய்க்கால் சோக நிகழ்வின் நினைவுகூரல் வரலாற்றில் ஒரு கரும் புள்ளியாக இடம் பெற்றிருக்கும் என்பதில் சந்தேகமில்லை.
யுத்தத்தின் இறுதிக்கட்டத்தில், முல்லைத்தீவு மாவட்டத்தின் குறுகியதொரு நிலப்பரப்பில் பொதுமக்களையும் விடுதலைப்புலிகளையும் கொண்டு ஒதுக்கி, ஒடுக்கிச் சுற்றி வளைத்து, அவர்கள் மீது யுத்த நியதிகளை மீறிய வகையில் நடத்தப்பட்ட தாக்குதல்களில் மக்கள் கொத்து கொத்தாகக் கொல்லப்பட்டார்கள். கொத்துக் குண்டுகளும் இரசாயனம் கலந்த குண்டுகளும் தாக்குதல்களில் பயன்படுத்தப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.
அடிப்படையில் அந்த மக்களுக்குத் தேவையான மருந்து, அத்தியாவசிய உணவுப் பொருட்கள் மற்றும் எரிபொருள் என்பவற்றைக் கிடைக்கவிடாமல் தடுத்து, விடுதலைப்புலிகளுடனான யுத்தத்தில் அவற்றையும் அரச தரப்பினர் ஆயுதங்களாகப் பயன்படுத்தி இருந்தனர்.
ஐநா தொண்டு நிறுவனங்களையும், சர்வதேச செஞ்சிலுவைக் குழுவினரையும் யுத்த மோதல்கள் தீவிரம் பெற்ற பகுதிகளில் இருந்து அரசாங்கம் முழுமையாக வெளியேற்றி இருந்தது. மனித உரிமை மீறல்களுக்கும், சர்வதேச மனிதாபிமான சட்ட மீறல்களுக்கும் சாட்சியாக அவர்கள் அமைந்து விடக் கூடாது; என்ற ஒரே காரணத்திற்காக அவர்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டிருந்தார்கள். அந்த மனிதநோயப் பணியாளர்கள் யுத்த மோதல்களில் சிக்கி உயிரிழக்கவும் காயமடையவும் நேரலாம் என குறிப்பிட்டு, அவர்களது பாதுகாப்பை உறுதி செய்வதற்காகவே இந்த வெளியேற்றல் நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக அப்போது அரசாங்கம்; காரணம் கற்பித்திருந்தது.
யுத்தத்தின்போது, நடுநிலையாளர்களாகக் கருதப்பட்ட இவர்களை வெளியேற்றியதன் பின்னர் முள்ளிவாய்க்காலைச் சூழ்ந்த பகுதிகளிலும், முள்ளிவாய்க்காலிலும் சாட்சிகளற்ற ஒரு மோசமான இன அழிப்பு நடவடிக்கையே அரங்கேற்றப்பட்டிருந்தது. உயிர்ப்பாதுகாப்புக்காகப் பதுங்கு குழிகள் அமைத்துப் பதுங்கியிருந்த பொதுமக்கள் மீது தொடர்ச்சியாக எறிகணை தாக்குதல்கள் நடத்தப்பட்டன. உணவுப் பற்றாக்குறை காரணமாக, விடுதலைப்புலிகளி;னால் ஒழுங்கமைக்கப்பட்டிருந்த கஞ்சி வழங்கும் இடங்களில் வரிசையில் நின்றிருந்த பொதுமக்களும் இலக்கு வைக்கப்பட்டார்கள்.
இறுதி யுத்தத்தின்போது நாற்பதினாயிரம் பேர் வரையில் பொதுமக்கள் கொல்லப்பட்டதாக ஐநா அறிக்கையிட்டிருக்கின்றது. ஆயினும் இந்த எண்ணிக்கை அதிலும் அதிகம் என்பது நேரடி சாட்சிகளான யுத்தத்தில் சிக்கி நேரடியாகப் பாதிக்கப்பட்டவர்களுடைய கருத்தாகும்.
உற்றவர்களையும் உறவினர்களையும் குடும்பத்தினரையும் சகோதரர்களையும், தாய் தந்தையரையும் கண்மூடித்தனமான எறிகணை மற்றும் பீரங்கித் தாக்குதல்களிலும், கண் மூடித்தனமான துப்பாக்கிச் சூட்டுத் தாக்குதல்களிலும் இழந்த பலரும் தாங்கள் நேரடியாகக் கண்டவற்றையும் தமக்கு நேர்ந்த அவலத்தையும் தமது வாக்குமூலங்களில் பதிவு செய்திருக்கின்றார்கள்.
இறுதி நேரச் சண்டையின் அகோரமான தாக்குதல்களில் சிக்கி அவயவங்களை இழந்தும் படுகாயமடைந்தும் பலர் உயிர் தப்பியுள்ளனர். இறுதி நேரச் சண்டையின்போது இடம்பெற்ற அளவுக்கு மிஞ்சிய அதிகாரப் பிரயோகம் மற்றும் அளவுக்கு மிஞ்சிய கடுமையான ஆயுத பலப்பிரயோகத்தின் அகோரங்களை அவர்களில் பலர் விலாவாரியாக விபரித்திருக்கின்றார்கள். அவர்களுடைய வாக்குமூலங்கள் சர்வதேச மனிதாபிமானச் செயற்பாட்டாளர்கள் மற்றும் மனித உரிமை அமைப்புக்களின் இலங்கை யுத்தம் தொடர்பான ஆவணங்களாகப் பதிவாகியிருக்கின்றன.
மனித உரிமை சார்ந்த ஐநா அமைப்புக்கள் பலவற்றின் அறிக்கைகளிலும், இறுதி யுத்தகாலத்து அவலங்கள் மனித உரிமை மீறல் செயற்பாடுகளாகப் பதிவாகியிருக்கின்றன. ஐநாவின் மனித உரிமை சார்ந்த பல்வேறு குழுக்கள், யுத்தம் முடிவடைந்த பின்னர் இலங்கையில் யுத்தம் நடைபெற்ற பிரதேசங்களுக்கு விஜயம் செய்து நிலைமைகளை உறுதிப்படுத்தி அவ்வப்போது அறிக்கைகளை வெளியிட்டிருக்கின்றன.
அரச தரப்பின் நிலைப்பாடு
இலங்கையின் இறுதி யுத்தத்தில் இடம்பெற்ற அத்துமீறிய மனித உரிமை மீறல்கள், மனிதாபிமான சட்ட மீறல்கள், படுகொலைகள் என்பன, இங்கு இன ஒழிப்பு நடவடிக்கைகள் இடம்பெற்றிருக்கின்றன என்ற அனுமானத்திற்கான ஆதாரங்களாகியிருக்கின்றன. இதன் அடிப்படையிலேயே இங்கு இடம்பெற்றுள்ள மனித உரிமை மீறல்கள் மற்றும் மனிதாபிமான சட்ட மீறல்களுக்குப் பொறுப்பு கூற வேண்டும் என்ற சர்வதேச அழுத்தத்திற்கு அரசாங்கம் முகம் கொடுக்க நேர்ந்;திருக்கின்றது.
அரசாங்கத்தைப் பொறுத்தமட்டில், அரசுக்கு எதிராகவும், பொதுமக்களுக்கு எதிராகவும் ஆயுதமேந்திய விடுதலைப்புலிகள் தாக்குதல்களை நடத்தியிருக்கின்றார்கள். ஆகவே, இந்தத் தாக்குதல்கள் பயங்கரவாதச் செயற்பாடுகளாகும். அந்தத் தாக்குதல்களை நடத்தியவர்கள் பயங்கரவாதிகளாவர் என்பதே அரசாங்கத்தின் முடிவாகும். அந்த வகையிலேயே விடுதலைப்லபுpகளையும், அவர்களுக்கு ஆதரவாகச் செயற்பட்டவர்களையும் பயங்கரவாதிகள் என பட்டியலிட்டு, பயங்கரவாதிகளுக்கு எதிராகவே இராணுவத்தினர் தாக்குதல் நடவடிக்கைகளை மேற்கொண்டார்கள் என கூறி வருகின்றது.
பயங்கரவாதிகளின் பிடியில் சிக்கியிருந்த தமிழ் மக்களை இராணுவத்தினர் உயிர்த்தியாகம் செய்து மீட்டிருந்தார்கள் என்பது அரசாங்கத்தின் பிரசாரமாகும். அந்த அடிப்படையிலேயே இறுதி யுத்தத்தின்போது பொதுமக்கள் கொல்லப்படவில்லை. அங்கு படுகொலைகள் இடம்பெறவில்லை. மனித உரிமை மீறல்களிலும் இராணுவத்தினர் ஈடுபடவில்லை என அடியோடு மறுத்துரைக்கின்றது. இத்தகைய மறுதலிப்பின் அடிப்படையிலேயே இறுதி யுத்தத்தின்போது இடம்பெற்ற உரிமை மீறல்களுக்கு பொறுப்பு கூற வேண்டும் என்ற சர்வதேசத்தின் வலியுறுத்தல் காரணமாக ஒப்புக்கொண்டுள்ள விசாரணை பொறிமுறையில் வெளிநாடுகளைச் சேர்ந்த எவரும் அவசியமில்லை உள்ளக விசாரணையே போதும் என்று பிடிவாதம் பிடித்துக் கொண்டிருக்கின்றது.
இந்த வகையில், முள்ளிவாய்க்கால் அவலஙக்ளை நினைவுகூர்வதென்பது விடுதலைப்புலிகளை நினைவுகூர்வதாகும். பயங்கரவாதிகளை நினைவுகூர்வதாகும். பயங்கரவாதத்தைத் தூண்டுகின்ற செயற்பாடாகும் என்ற நிலைப்பாட்டை அரச தரப்பினர் கொண்டிருக்கின்றனர். அதன் காரணமாகவே, முன்னைய ஆட்சிக்காலத்தில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலுக்கு அரசாங்கம் அனுமதி வழங்க மறுத்திருந்தது. ஆயினும். ஆட்சி மாற்றத்தின் பின்னர் படிப்படியாக நிலைமைகளில் மாற்றங்கள் நிகழ்ந்திருக்கின்றன. இதனை மறுக்க முடியாது.
ஆயினும் கடந்த வருடம் முள்ளிவாய்க்கால் சென் ஜுட்ஸ் கத்தோலிக்க தேவாலயத்தில் நடைபெற்ற நினைவேந்தல் நிகழ்வுக்கு பொலிசார் நீதிமன்றத்தின் ஊடாகத் தடையுத்தரவு பெற்றிருந்தனர். இந்தத் தேவாலய வளாகத்திற்கு வெளியில் அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவுச் சின்னத்தைச் சூழவுள்ள பகுதியில் எவரும் பிரவேசிக்கக் கூடாது என நீதிமன்றம் தடை விதித்திருந்தது.
இந்த நினைவுச் சின்னத்தைச் சுற்றிலும் முள்ளிவாய்க்காலில் கொல்லப்பட்ட பொதுமக்கள் பலருடைய பெயர்கள் பொறிக்கப்பட்ட நினைவுக் கருங்கற்களை அடுக்கி வைப்பதற்கான ஒழுங்குகள் செய்யப்பட்டிருந்தன. ஆனால், இது பயங்கரவாதிகளான விடுதலைப்புலிகளை நினைவுகூர்வதற்காகவே ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது எனவும் அதன் மூலம் பயங்கரவாதத்திற்கு உயிரூட்டுவதற்கான முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது எனவும்கூறி, அந்த நிகழ்வை ஒழுங்கு செய்திருந்த அருட்தந்தை ஒருவர் உள்ளிட்டவர்களுக்கு எதிராக முல்லைத்தீவு நீதிமன்றத்தில் பொலிசார் கடந்த வருடம் வழக்குத் தாக்கல் செய்திருந்தார்கள். ஆயினும் தேவாலயத்தில் நடைபெற்ற நினைவுப் பலிப் பூசை உள்ளிட்ட நிகழ்வுகளுக்குத் தடை ஏற்படுத்தப்படவில்லை.
இராணுவ வெற்றிச் சின்னங்களும், விடுதலைப்புலிகளின் அடையாளங்களும்
யுத்தம் முடிவடைந்து ஒன்பது வருடங்கள் கடந்துவிட்டன. யுத்தத்தில் வெற்றியடைய வேண்டும் என்ற காரணத்திற்காக திட்டமிட்ட நடவடிக்கைகளின் மூலம் இனங்களுக்கிடையில் உருவாக்கப்பட்டிருந்த பகைமை உணர்வைப் போக்குவதற்கு உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை. யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வந்த அரசு இனங்களுக்கிடையில் ஐக்கயத்தையும் நல்லுறவையும் ஏற்படுத்துவதற்கான நல்லிணக்க முயற்சிகளை உளப்பூர்வமாக மேற்கொள்ளவில்லை.
பயங்கரவாதிகளான விடுதலைப்புலிகளினால், இராணுவத்தினரும் படுகொலை செய்யப்பட்டார்கள் என்ற போலியான பிரசாரத்தை சிங்கள மக்கள் மத்தியில் அரசு முன்னெடுத்திருந்தது யுத்தத்தின் பின்னர், யுத்த மோதல்கள் இடம்பெற்ற பிரதேசங்களில் இராணுவத்தின் வீரப் பராக்கிரமங்களைப் பறைசாற்றுவதற்கான நினைவுச் சின்னங்களை அரசு அமைத்துள்ளது. கிளிநொச்சி, ஆனையிறவு, இறுதி யுத்தம் நடைபெற்ற ஆனந்தபுரம், முல்லைத்தீவு நகரம் என பல இடங்களிலும் இந்த நினைவுச் சின்னங்கள் நிரந்தரமான அமைப்பக்களாக நிறுவப்பட்டிருக்கின்றன.
அதேவேளை, இராணுவத்தினர் யாருக்கு எதிராக யுத்தம் புரிந்தார்களோ, அவர்கள் எந்த அளவுக்கு வலிமை பெற்றிருந்தார்கள் என்பதைக் காட்டுவதற்கான அடையாளங்கள் எதுவுமே இருக்கக் கூடாது என்பதில் அரசும், இராணுவமும் கண்ணும் கருத்துமாகச் செயற்பட்டு வருகின்றன.
விடுதலைப்புலிகளின் மாவீரர் துயிலும் இல்லங்கள், விடுதலைப்புலிகள் நவீன முறையில் அமைந்திருந்த நிலத்தடியிலான பாதுகாப்பு இடங்கள், விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் உள்ளிட்ட முக்கியஸ்தர்களின் மெய்ப்பாதுகாப்புக்காக அமைக்கப்பட்டிருந்த அதி உயர் நிலையிலான பாதுகாப்பு இடங்கள், அவர்களின் வாழ்விடங்கள், விடுதலைப்புலிகளின் உயர் மட்டத் தலைவர்கள் கூடிப்பேசுவதற்காக அமைக்கப்பட்டிருந்த அதிஉயர் பாதுகாப்பைக் கொண்ட மையங்கள் என்பன யுத்தத்திற்குப் பின்னர் அமைதி நிலவிய காலப்பகுதியில், இராணுவத்தினரால் குண்டு வைத்துத் தகர்த்து அழிக்கப்பட்டன.
ஆயுதப் போராட்டத்தை முன்னின்று செயற்படுத்திய விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் சொந்த ஊராகிய வல்வெட்டித்துறையில் அவர் பிறந்து வசித்து வந்த அவருடைய வீட்டையும் இராணுவத்தினர் விட்டு வைக்கவில்லை. அதையும் குண்டு வைத்துத் தகர்த்து அழித்துள்ளார்கள். போராட்டத்தில் ஈடுபடுவதற்காக அவர் தனது இளமைக்காலத்திலேயே வீட்டை விட்டுச் சென்றிருந்தார். போராட்ட காலத்தில் அவர் தனது சொந்த ஊரில் சொந்த வீட்டில் வசித்திருக்கவில்லை. ஆயினும் அந்த வீட்டையும் விட்டு வைப்பதற்கு இராணுவத்தினருடைய மனம் இடமளிக்கவில்லை. அதனையும் அழித்து நிர்மூலமாக்கி உள்ளார்கள். அந்த வீடு இருந்ததற்கு அடையாளமாக ஒரேயொரு குட்டிச் சுவர் மாத்திரமே எஞ்சி இருக்கின்றது.
விடுதலைப்புலிகளுடனான சண்டைகளில் வீர தீரச் செயல்களைப் புரிந்து உயிர்த்தியாகம் செய்த வீரப் புருஷர்களாகவே இராணுவத்தினரை சிங்கள மக்கள் மத்தியில் அரசு உருவகித்திருக்கின்றது. இதற்கான ஆதாரமாக, இராணுவத்திற்கு எதிரான யுத்தத்தில் மிகுந்த வல்லமை பெற்றிருந்த விடுதலைப்புலிகளின் அடையாளங்களை, யுத்தம் முடிவடைந்ததும், தென்பகுதிகளைச் சேர்ந்த சிங்கள மக்கள் திரண்டு வந்து பார்வையிடுவதற்கான வசதிகளை அரசு செய்திருந்தது. விடுதலைப்புலிகளின் படைப்பிரிவுகளில் ஒன்றாகிய கடற்புலிகளின் படகுகள், சிறிய அளவிலான நீர்மூழ்கிப் படகுகள் உள்ளிட்ட போர்த்தளபாடங்கள் என்பவற்றை காட்சிப் பொருளாக்கி சிங்கள மக்களின் கண்களுக்கும் சிந்தனைக்கும் இராணுவம் விருந்தாக்கி இருந்தது.
யுத்தம் முடிவடைந்த பின்னர் சில வருடங்களுக்கு இந்த நிலைமை நீடித்திருந்தது. அதன் பின்பே அந்த நினைவிடங்கள் அழிக்கப்பட்டன. இறுதி யுத்தத்தின்போது இடம்பெற்ற அதி முக்கிய சண்டை நிகழ்ந்த ஆனந்தபுரம் பகுதியில் நிறுவப்பட்டுள்ள இராணுவ வெற்றிச் சின்னத்திற்கு அருகில் வைக்கப்பட்டுள்ள விடுதலைப்புலிகளின் ஆயுதத் தளபாடக் கண்காட்சி இடத்திற்கு இப்போது இராணுவத்தின் வழிநடத்தலில் வருகின்ற சிங்கள மக்கள் மாத்திரமே அனுமதிக்கப்படுகின்றார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
நோக்கமும் நிலைமையும்
விடுதலைப்புலிகளை இராணுவ ரீதியாகத் தோற்கடித்த இராணுவத்தின் வீரப் பராக்கிரமத்தை நிலையான வெற்றிச் சின்னங்களாகப் பேணுவதற்கான நடவடிக்கைகள் வெகு நுணுக்கமாக அரசினாலும், இராணுவத்தினராலும் முன்னெடுக்கப்பட்டிருக்கின்றன. அதேவேளை, இந்த நாட்டின் வரலாற்றுப் பின்புலத்தைக் கொண்ட நிரந்தரக் குடிமக்களாகிய தமிழ் மக்களின் அரசியல் உரிமைக்கான ஆயுதப் போராட்டத்தின் எந்த அடையாளமும் இருக்கக் கூடாது என்பதில் அரசும், இராணுவமும் மிகத் தீவிரமாகக் கவனம் செலுத்தி இருக்கின்றன.
நாட்டில் இனப்பிரச்சினை என்பது எரிமலையை ஒத்ததாக, ஆறு ஏழு தசாப்தங்களாகக் கனன்று கொண்டிருக்கின்றது என்ற அரசியல் ரீதியான யதார்த்தத்தை முற்றாக இல்லாதொழிப்பதே பேரினவாத போக்கில் திளைத்துள்ள ஆட்சியாளர்களினதும், இராணுவத்தினதும் முக்கிய நோக்கமாகும்.
இந்த மண்ணின் மைந்தர்களாகிய தமது அடிப்படை உரிமைக்கும், இன ரீதியான அரசியல் உரிமைக்குமாகப் போராடி வருகின்ற சிறுபான்மை தேசிய இனத்தவராகிய தமிழ் மக்கள் அதிகாரங்களைக் கொண்டிருக்கக் கூடாது. அவர்கள் பெரும்பான்மை இனத்தவராகிய சிங்கள மக்களின் தயவிலேயே வாழ வேண்டும். தனித்துவமான இன, மத, கலை, கலாசார அடையாளங்களை அவர்கள் கொண்டிருக்கக் கூடாது. எல்லா நிலைகளிலும், பெரும்பான்மையினராகிய சிங்கள மக்களுக்கு தணிந்து தாழ்ந்தவர்களாக இருக்க வேண்டும் என்ற இனவாத, மதவாத அரசியல் சித்தாந்தத்தின் அடிப்படையிலேயே இந்த நடவடிக்கைகளை ஆட்சியாளர்கள் முன்னெடுத்து வருகின்றனர்.
யுத்தத்தின் பின்னரான கடந்த ஒன்பது வருட காலப்பகுதியில் யுத்த மோதல்கள் இடம்பெற்ற பிரதேசங்களில் பௌத்த மேலாதிக்கத்தையும், பெரும்பான்மை இனத்தவராகிய சிங்கள மக்களின் இனப்பரம்பலையும் மேம்படுத்துவதற்காக இராணுவ மயமான ஒரு சூழலில் திட்டமிட்ட வகையில் பல்வேறு நடவடிக்கைகளை அரசுகள் முன்னெடுத்து வருகின்றன. அத்துமீறிய வகையிலான சிங்களக் குடியேற்றங்கள், விவசாயம், மீன்பிடி, வர்த்தகம் உள்;ளிட்ட பல்வேறு தொழில்துறைகளிலும், அரச தொழில்வாய்ப்புக்களிலும் சிங்கள மக்களுக்கு முன்னுரிமை அளிக்கும் செயற்பாடுகள் போன்ற செயற்பாடுகள் ஆட்சி அதிகாரப் பலத்துடன் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன.
ஆனால் யுத்தத்தினால் மோசமாகப் பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் கிராமப்புற அபிவிருத்திச் செயற்பாடுகளிலும், பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கை மேம்பாட்டிற்கான வாழ்வாதாரம் உள்ளிட்ட முக்கியமான செயற்பாடுகளிலும் நீண்ட கால அடிப்படையிலான நிலைத்துப் பயன்தரத்தக்க வேலைத்திட்ட நடவடிக்கைகளை முன்னெடுப்பதில் அரசுகள் ஆர்வம் காட்டவில்லை.
சர்வதேச அளவில் நன்கு அறியப்பட்டுள்ள இறுதி யுத்தம் நடைபெற்ற முள்ளிவாய்க்கால் பிரதேசம் உள்ளிட்ட போரினால் சின்னாபின்னமாக்கப்பட்ட பிரதேசங்களில் அடிமட்டத்திலான அபிவிருத்திச் செயற்பாடுகளை அரசுகள் முன்னெடுக்கத் தவறியிருக்கின்றன. பெரும்பாலான இடங்களில் அழிவுக்கு வாழ்வதற்கும், விவசாயத்திற்கமான தண்ணீருக்குப் பற்றாக்குறை நிலவுகின்றது. கிராமிய வீதிகள் நடந்துகூட செல்ல முடியாதவாறு மோசமடைந்திருக்கின்றன.
யுத்தம் காலத்து இடப்பெயர்வின்போது, இடம்பெயர்ந்து உடைமைகளையும் உற்றவர்களின் உயிர்களையும் இழந்து தவிப்பவர்கள் இன்னும் ஏதிலிகளாகவே இருக்கின்றனர். முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வுக்குத் தலைமை ஏற்று நடத்துவது யார், அதனை எப்படி நடத்துவது, யார் யார் பங்கேற்கலாம் என்ற வாதப் பிரதிவாதங்களும் சர்ச்சைகளும் இடம்பெற்று வருகின்ற சூழலில் முள்ளிவாய்க்கால் பகுதியைச் சேர்ந்த பாதிக்கப்பட்ட மக்கள் தமது வாழ்க்கை மேம்பாட்டிற்கும் பிரதேச அபிவிருத்திக்கும் நடவடிக்கைகள் எடுக்க எவரும் இல்லையே என்று குமுறிக்கொண்டிருக்கின்றார்கள். முள்ளிவாய்க்கால் நினைவுகூரலின் அவசியத்தை வலியுறுத்துகின்ற அவர்கள் அதற்காக இடம்பெற்று வருகின்ற போட்டா போட்டிச் செயற்பாடுகளில் மனம் உடைந்தவர்களாகவும் வெறுப்படைந்தவர்களாகவும் காணப்படுகின்றார்கள்.
முள்ளிவாய்க்காலின் மகத்துவம்
தமிழ் மக்களைப் பொறுத்தளவில் முள்ளிவாய்க்கால் சோகம் என்பது காலத்தால் அழிக்க முடியாதது. தேசிய அளவில் துக்ககரமான நிகழ்வாகும். அது சாதாரணமான நினைவுகூர்தலுக்கு அப்பாற்பட்டது. அது, ஒடுக்கப்பட்ட மக்களின் அரசியல் விடுதலை சார்ந்து பரந்து விரிந்த பரிமாணத்தைக் கொண்டது.
அந்த நினைவுகூரல் அரசியல் கலப்பற்றதாக இருக்க வேண்டும் என்ற கோரிக்கை குரல்கள் எழுந்துள்ள போதிலும், முள்ளிவாய்க்கால் நினைவுகூரல் என்பது முழுக்க முழுக்க அரசியல் சார்ந்தது. ஆயினும், அது கட்சி சார்பான அரசியல் அல்ல. அது தேர்தல் வெற்றியை இலக்காகக் கொண்ட சந்தர்ப்பவாத அரசியலும் அல்ல. ஏனெனில் முள்ளிவாய்க்கால் படுகொலைகள் என்பது போர்க்குற்றம் சார்ந்தது. அந்தக் கொலைகளுக்கு இனப்படுகொலை என்ற பரிமாணமும் உண்டு. போர்க்குற்றமும் இனப்படுகொலையும் முழுக்க முழுக்க அரசியல் காரணங்களையே அடிப்படையாகக் கொண்டவை.
முள்ளிவாய்க்காலில் இடம்பெற்ற இறுதி யுத்தம் அறுபது வருடகால அரசியல் போராட்டத்தின் மிக மோசமானதொரு கட்டம். தமிழ் மக்களின் நீண்டகால அரசியல் உரிமைக்கான போராட்டத்திலும், இறுதி யுத்தத்திலும் மாண்டுபோன ஆயிரமாயிரம் பேரின் உன்னதமான உயிர்த்தியாகங்கள் சங்கமித்த புனிதமான ஓரிடம். அந்தத் தியாகங்களை நினைவு கூர்வதிலும், அங்கு இடம்பெற்ற அவலச் சாவுகளுக்காகக் கண்ணீர் உகுத்து மன ஆறுதல் அடைவதிலும் ஏட்டிக்குப் போட்டியான நிலைமைகள் காணப்படுவது விரும்பத்தக்கதல்ல. அங்கு எழுகின்ற கருத்து வேறுபாடுகள், கருத்தியல் நிலைப்பாடுகள் கௌரமான முறையில் வெளிப்படுத்தப்பட்டு இணக்கம் காணப்பட வேண்டியது முக்கியம்.
ஆயினும், தமிழ் மக்களின் அரசியல் உரிமைக்கான ஆயுதப் போராட்டத்தில் முள்ளிவாய்க்கால் என்பது ஒரு கரும் புள்ளித்தடம். அது, வலுவானதோர் ஆயுதப் போராட்டத்தை இல்லாமல் செய்து, மீண்டும் ஒரு சாத்வீகப் போராட்டத்திற்குள் தமிழ் மக்களை வலிந்து இழுத்துள்ள ஒரு வரலாற்றுத் திருப்பம். முப்பது வருடங்களுக்கு முன்னர் வலுவிழந்துபோன மிதவாத சாத்வீகப் போராட்டத்தை வீச்சுடன் முன்னெடுக்கப்பட வேண்டிய அவசியத்தை உணர்த்தியுள்ளதொரு வரலாற்று நிகழ்வு.
அதேவேளை செயலழந்துபோன மிதவாத அரசியல் தலைமைக்கு புதிய இரத்தம் பாய்ச்சி, காலச் சூழலுக்கு ஏற்ற வகையில் நுட்பமான இராஜதந்திரத்துடன் கூடிய செயற்பாட்டை முன்னெடுக்க வேண்டிய தேவையை உணர்த்தியுள்ள மிகவும் கசப்பானதொரு நிகழ்வு. அது ஆளுமையுள்ள அரசியல் தலைமையின் அவசியத்தையும் உணர்த்தியுள்ளது.
முள்ளிவாய்க்கால் நினைவுகூரல் என்பது வடமாகாண சபை, அல்லது பல்கலைக்கழக மாணவர்கள், ஆன்மீக ரீதியிலான சமூகப் பணியாளர்கள், அரசியல்வாதிகள் அல்லது பாதிக்கப்பட்ட மக்கள் போன்ற எவருக்கும் தனித்துவமான உரிமைக்கு உரித்தானதல்ல. இது அனைவருக்கும் பொதுவானது. சிறுமைப்படுத்தலுக்கும், அடக்குமுறைக்கும், ஒடுக்குமுறைக்கும் எதிராக மனிதாபிமான ரீதியில் கிளர்ந்தெழுகின்ற அனைவருக்கும் உரித்தானது. மொத்தத்தில் மனிதாபிமானமுள்ள அனைவருக்கும் அது உரித்தானது. அது வெறுமனே ஒரு வருடாந்த சடங்காகவோ அல்லது சம்பிரதாய நிகழ்வாகவோ இடம்பெறலாகாது.
அந்த வகையில் பாதிக்கப்பட்ட மக்கள், ஆன்மீகத் தலைவர்கள் பணியாளர்கள், இளைஞர்கள், மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள், புத்திஜீவிகள், துறைசார்ந்தவர்கள், சமூகச் செயற்பாட்டாளர்கள், அரசியல்வாதிகள், பொது அமைப்புக்கள், முள்ளிவாய்க்கால் பிரதேசத்தின் கிராமிய மட்டத்திலான அமைப்புக்கள் போன்ற அனைத்துத் தரப்பினரது பிரதிநிதிகளையும் உள்ளடக்கிய ஒரு குழுவின் வழிநடத்தலில், பிரதேச சபை, மாகாண சபை என்பவற்றின் அனுசரணையுடன் முள்ளிவாய்க்கால் நினைவுகூரல் நிகழ்வு தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படுவதற்கு வழி செய்யப்பட வேண்டும்.
ஏனெனில் முள்ளிவாய்க்கால் நினைவுகூரல் என்பது தமிழ் மக்களின் அரசியல், சமூக, கல்வி, கலை, கலாசாரப் பண்பாட்டு உரிமைகளுக்காக வரலாற்று ரீதியான தாயக மண் மீட்புக்கான போராட்டத்தின் மையப்புள்ளி. அதனை ஆண்டாண்டு காலம் உயிர்ப்புடன் வைத்திருக்க வேண்டியது வரலாற்றுக் கடமை என்றே கூற வேண்டும். தமிழ் மக்களின் அரசியல் உரிமைக்கான போராட்டம் துடிப்புடன் முன்னெடுத்துச் செல்லப்படுவதற்கு இந்த உயிர்ப்பும், அதன் ஊடான செயல் ஊக்குவிப்பும், வழிநடத்தலும் மிக மிக அவசியம.;