குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய கேம்பிரிட்ஜ் அனலிடிகா நிறுவனம் அமெரிக்காவில்; மூடப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. தங்களது நிறுவனம் வங்குரோத்து அடைந்துள்ளதாகவும் இதனால் நிறுவனத்தை மூடுவதற்கு அனுமதிக்குமாறும் அமெரிக்க அதிகாரிளிடம் கேம்பிரிட்ஜ் நிறுவனம் கோரியுள்ளது.பல மில்லியன் கணக்கான முகநூல் பயனர்களின் தகவல்களை கசிய விட்டதாக கேம்பிரிட்ஜ் அனலிடிக்கா நிறுவனம் மீது குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.
இந்தக் குற்றச்சாட்டின் அடிப்படையில் பிரித்தானியாவில் இயங்கி வந்த கேம்பிரிட்ஜ் அனலிடிக்காவின் தாய் நிறுவனம் மூடப்பட்டிருந்தது. நிறுவனத்தின் சொத்துக்கள் வெறும் 5 லட்சம் டொலர்கள் எனவும், நிறுவனத்தின் பொறுப்புக்கள் ஒரு மில்லியன் முதல் பத்து மில்லியன் டொலர்கள் வரையில் இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.
தமது நிறுவனம் தொடர்பில் ஊடகங்களில் செய்யப்பட்ட பிழையான பிரச்சாரமே, வாடிக்கையாளர்கள் நிறுவனத்தை அவநம்பிக்கை ஏற்படுத்திக் கொள்ள ஏதுவாக அமைந்தது என நிறுவனம் தெரிவித்துள்ளது. இதேவேளை, நிறுவனம் மூடப்பட்டாலும் தகவல் கசிவு குறித்த விசாரணைகள் தொடரும் என அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.