ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் விசாரணை மேற்கொள்ள மலேசிய முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை நேரில் முன்னிலையாகுமாறு ஊழல் தடுப்பு அமைப்பு அழைப்பாணை அனுப்பியுள்ளது. மலேசியாவில் அண்மையில் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில், 60 ஆண்டுகளாக ஆட்சி அதிகாரத்தில் இருந்து வந்த பேரிசன் நஷனல் கூட்டணி தோல்வியைத் தழுவியுள்ள நிலையில், 92 வயது மகாதீர் முகமது பிரதமர் ஆனார்.
அதனைத் தொடர்ந்து, அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி ஊழல் புரிந்து உள்ளதாக நஜிப் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளநிலையில் அவர் நாட்டை விட்டு வெளியேறக்கூடாது என தடை விதிக்கப்பட்டுள்ளது. அத்துடன் அவரது வீட்டிலும், அவருக்கு சொந்தமான இடங்களிலும் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு பணம் , நகைகளுடன் ஏராளமான கைப்பைகள் கைப்பற்றப்பட்டன.
இந்த நிலையில் அவர் வரும் செவ்வாய்க்கிழமை அவரை நேரில் விசாரணைக்கு முன்னலையாகுமாறு கூறி ஊழல் தடுப்பு அமைப்பு அழைப்பாணை அனுப்பி உள்ளது. இதன்போது அவரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டு அதைத் தொடர்ந்து அவர் கைது செய்யப்படலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது