!
“பணம்தான் முக்கியம் என நினைக்கிற இந்த வாழ்க்கையில் ஒரு நிமிஷம் உண்மையான காதல் கிடைச்சாலே, அவ பணக்காரிதான். எனக்கு 20 வருஷங்கள் கிடைச்சிருக்கு. அப்போ நான் கோடீஸ்வரிதானே?” – உச்சபச்ச ஏற்றம், அடிமட்ட தாழ்வு என்றிருந்த தன் வாழ்க்கை பயணத்தை சாவித்திரி அணுகிய விதம் இதுதான்.
குழந்தைத்தனமான சிரிப்பு, நகைச்சுவையான பேச்சு, துருதுருப்பான பாவனைகள், கனிவான உள்ளம்… இதுதான் திரைக்குப் பின்னால் இருந்த சாவித்திரியின் குணாதியங்கள். அவரின் தனிப்பட்ட வாழ்க்கையை மையப்படுத்தி வெளிவந்திருக்கும் திரைப்படம், `நடிகையர் திலகம்’.
சாவித்திரி என்ற ஓர் ஆளுமையின் வாழ்க்கை வரலாற்றை, இந்தத் தலைமுறைக்குச் சொல்லும் மிகப்பெரிய பொறுப்பு, ஒரு சில படங்களே நடித்த கீர்த்தி சுரேஷுக்குக் கிடைத்தபோது, அவரின் நடிப்பை விமர்சித்து மீம்ஸ்களும் கேலிப் பேச்சுகளும் கொடிகட்டிப் பறந்தன. அந்த விமர்சன அம்புகளை எல்லாம், தான் நடித்த சாவித்திரி கதாபாத்திரத்தின் மூலம் சுக்குநூறாக்கியிருக்கிறார் கீர்த்தி.
ஒரு நடிகையின் வாழ்வில் என்ன இருக்கப்போகிறது? ஆரம்பகால போராட்டம், அதன்பின் வெற்றி, ஒரு சில பெரிய நடிகர்களுடன் ஜோடி, காதல், அதன்பின் திருமணம், வயதானதும் அக்கா மற்றும் அம்மா கதாபாத்திரங்கள் எனக் கடந்துபோகக்கூடிய வாழ்க்கை அல்ல சாவித்திரியுடையது. பிறப்பு முதலே `தன் தந்தையின் முகத்தைப் பார்த்துவிட மாட்டோமா?!’ என்ற ஏக்கம், பரதநாட்டியம் கற்றுக்கொள்ள வேண்டும் என்ற பிடிவாதம், நடிப்பு வராது என்ற விமர்சனத்தை மாற்றி, `நடிகையர் திலகம்’ எனத் தொட்ட அந்த வைராக்கியம், தோல்வி என்ற வார்த்தைக்கே தன் வாழ்வில் இடமில்லை என்ற தன்னம்பிக்கை, சிகரம் தொட்டாலும் காதலுக்கும் காதலனுக்குமே எப்போதும் முன்னுரிமை அளிக்கும் அப்பழுக்கற்ற அன்பு, தன் கடின காலத்திலும் பிறருக்குக் கொடுத்து வாழவேண்டும் என உறுதியாக நின்ற தாயுள்ளம், சொத்துகளை இழந்தபோதிலும், வாழ்வை நேசிக்கத் தெரிந்த மாபெரும் மனுஷியாகத் திகழ்ந்த சாவித்திரியை, அப்படியே திரையில் பிரதிபலித்து, 3 மணி நேரம் சாவித்திரியுடனே நம்மைப் பயணிக்கவைத்த கீர்த்தி சுரேஷின் விஸ்வரூப நடிப்புக்கு ஒரு ராயல் சல்யூட்!
வெறும் மேக்கப்பிலும், சிகையலங்காரத்திலும் மட்டும் கீர்த்தி, சாவித்திரி ஆகிவிடவில்லை. சின்ன கண் அசைவில், குழந்தை சிரிப்பில், அழுகையில், முன்நெற்றியின் முடி வளைவுகளில் என சாவித்திரியாக வாழ்ந்திருக்கிறார். சாவித்திரி எடை கூடிய பிறகு, அவருடைய நிறம் குறைந்தது, கல் வைத்த மூக்குத்தி அணிந்திருந்தது, பருத்த உடலின் எடை கன்னங்களிலும் பிரதிபலித்தது என ஒவ்வொரு காட்சியிலும் கீர்த்தி சுரேஷுக்குப் பதிலாக சாவித்திரியை மட்டுமே நம்மால் பார்க்கமுடிகிறது. குறிப்பாக, `மாயா பஜார்’ படத்தில் வரும் `டும் டும் என் கல்யாணம்’ பாட்டுக்கு ரங்கராவின் முரட்டுப் பாடிலாங்வேஜை தன் உடம்பில் கீர்த்தி சுரேஷ் கொண்டுவரும்போது, மொத்த தியேட்டரும் ஆர்ப்பரிக்கிறது. இந்தியத் திரையுலகுக்கு இன்னொரு `நடிப்பு ராட்சஷி’ கிடைத்திருக்கிறார்.
ஜெமினி கணேசன் என்கிற காதல் மன்னனை தன்னுடைய தோழனாகவும், கணவனாகவும் நினைத்து உருகியபோது, காதல் கசிந்த அன்பு, கீர்த்தியிடம்… ஸாரி… சாவித்திரியிடம் வெளிப்பட்டது. ஒரு பெண்ணுக்குரிய இயல்பான குணமான, கணவன் மீதான அதீத பாசம், எவரையும் எளிதாக நம்பும் சுபாவம், சில பலவீனங்கள்… இதுதான் சாவித்திரி என்ற கலை மேதையை வீழ்த்திய விஷயங்கள். இன்றைய தலைமுறையினருக்கு நிச்சயம் சாவித்திரியின் கஷ்டங்களும் போராட்டங்களும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஆனால், அதை ஓரளவு இந்தத் திரைப்படம் உணர்த்தியிருக்கிறது. சாவித்திரியின் வாழ்க்கையில் 25 சதவிகிதங்களே கூறி, அவரின் மற்ற பக்கங்களைச் சொல்லாமலே சென்றிருப்பதுதான் ஒரே நெருடல்.
நடிப்பில் சிவாஜியைத் திணறடித்தவர் எனச் சொல்லப்பட்ட சாவித்திரி, இரண்டாம் மற்றும் மூன்றாம் தர நடிகர்களுடன் சிறு சிறு வேடங்கள் என எந்த வாய்ப்பையும் விடாமல் நடிக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டார். ஆனால், தன் நிலையை உணர்ந்து, மகளைத் திருமணம் செய்துவைத்தது, மகனின் எதிர்காலத்துக்காக எந்தக் கதாபாத்திரமாக இருந்தாலும் நடிக்கும் அளவுக்குக் குடும்பச் சூழல் இருந்தது. அத்தனை துயரங்களுக்கு மத்தியிலும் சாவித்திரியின் அற்புதமான நடிப்பில் வெளியான திரைப்படங்கள், அவரது நினைவை அடுத்தடுத்த தலைமுறைகளுக்குக் கடத்திக்கொண்டிருக்கின்றன, கீர்த்தி சுரேஷின் விஸ்வரூப நடிப்பின் வழியாக.
ஒரு பேட்டியில், இந்தத் திரைப்படத்தை இயக்கிய நாக் அஸ்வினிடம், “கீர்த்தி சுரேஷிடம் சாவித்திரியின் அம்சங்கள் ஏதேனும் பார்த்தீர்களா?” என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர், “என் உள்ளுணர்வுதான், இந்தக் கதாபாத்திரத்துக்கு கீர்த்தி சுரேஷ் பொருத்தமாக இருப்பார் என்று கூறியது. அதையும் தாண்டி, கீர்த்தியின் கண்களில் சாவித்திரியிடமிருந்த ஒரு வெகுளித்தனம் தெரிந்தது. அதுதான் அவரை சாவித்திரியாக மாற்றும் தைரியத்தை எனக்கு அளித்தது” என்று கூறியிருந்தார்.
ஆ.சாந்தி கணேஷ், ஷோபனா எம்.ஆர், வெ.வித்யா காயத்ரி
நன்றி- ஆனந்த விகடன்