குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
தேசிய வீடமைப்ப அதிகார சபையின் அனைவருக்கும் நிழல் அல்லது வீடு (செமட்ட செவன) என்ற வேலைதிட்டத்தின் கீழ் கிளிநொச்சி இத்தாவில் பகுதியில் சுரபிநகர் மாதிரி கிராமம் இன்று வீடமைப்பு அமைச்சர் சஜித் பிரேமதாசவினால் திறந்து வைக்கப்பட்டது. குறித்த நிகழ்வு இன்று காலை 9 மணியளவில் இடம்பெற்றது. பச்சிலைப்பள்ளி பிரதேச செயலர் பிரிவில் உள்ள இத்தாவில் கிராமத்தில் குறித்த திட்டத்தின் கீழ் மாதிரி கிராமம் அமைக்கப்பட்டு 25 பயனாளிகளிற்கான காணி உரிமங்கள் கையளிக்கப்பட்டன. இந்த நிகழ்வில் அமைச்சர் சஜித் பிரேமதாச மற்றும் ராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம், பிரதேச செயலாளர், ப.ஜெயராணி வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபை அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
நிகழ்வில் 25 பயனாளிகளிற்கு காணி உரிமங்கள் வழங்கி வைக்கப்பட்டதோடு, கிளிநொச்சிமாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட 75 பேருக்கு மூக்கு கண்ணாடிகளும், 200 பேருக்கு தொழில் உபகரணங்களும், 800 பேருக்கு 50 ஆயிரம் மற்றும் ஒரு லட்சம் பெறுமதியான கடன் திட்டத்தின் கீழான காசோலைகளும் கையளிக்கப்பட்டன.
வீடில்லாதவர்களுக்கு குறிப்பாக யுத்தத்தில் அனைத்தையும் இழந்தவர்களுக்கு, வீடளிக்கும் இந்த கிராம அபிவிருத்தித் திட்டத்தின் கீழான அனைவருக்கும் நிழல் (வீடு) (செமட்ட செவண) திட்டம் வடக்கு கிழக்கு மக்களுக்கும் கிடைப்பது போற்றுவதற்கும் வரவேற்பதற்கும் உரியது.
எனினும் வரிக்கு வரி நல்லிணக்கம் பேசும் இந்த அரசாங்கமும், மொழிச் சமநிலை பேசுகின்ற, தேசிய சகவாழ்வு கலந்துரையாடல், நல்லிணக்க மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சும், அமைச்சரவை அந்தஸ்த்துள்ள அமைச்சர் மனோ கணேசனும் முழுமையான தமிழ்ப் பகுதிகளில் சிங்கள மொழிச் சொற்களை அப்படியே தமிழாக எழுதுகின்ற அவலத்தையும், சிங்கள கலாசார பண்பாட்டு சின்னங்களை முதன்மைப்படுத்தும் விடயங்களையும் ஏன் கவனிப்பது இல்லை என்ற கேள்விகள் பரவலாக எழுவதனை அவதானிக்க முடிகிறது.
நல்லிணக்கம் என்பது உதட்டளவில் இல்லாது இன, மொழி, பண்பாட்டு அடித்தளங்களில் இருந்து கட்டி எழுப்பப்படவேண்டும். இன்று திறந்து வைக்கப்பட்ட சுரபிநகர் மாதிரி கிராமம் பெயர்பலகையை அவதானிக்கும் எவருக்கும் கிளிநொச்சி சிங்களமயமாகி வருகிறதா? என்ற கேள்வி எழுவது நியாயமானதே என சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர். பெயர்பலகையின் இரு பக்கங்களிலும் பொறிக்கப்பட்டு இருக்கும் பௌத்த அடையாளமும், சிங்களச் சொற்களின் ஆதிக்கமும், 3 தசாப்தத்திற்கு மேலாக தொடர்கின்ற இனமுரண்பாட்டை நல்லணக்கமூலம் தீர்க்க முடியுமா என்ற ஆழமான உணர்வையும் தோற்றுவித்துள்ளதாக கூட்டிக்காட்டப்பட்டுள்ளது.