குளோபல் தமிழ்ச் செய்தியாளர்…
இலங்கையின் நாடாளுமன்றில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலின் எதிரொலிகள் கேட்கவுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இன்று இலங்கை நேரம் பிற்பகல் ஆரம்பமாக உள்ள நாடாளுமன்ற அமர்வில், முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு, மற்றும் இறுதி யுத்தம் குறித்து, ஊடகவியலாளர் சந்திப்பில் அமைச்சர் ராஜிதசேனாரட்ன தெரிவித்த கருத்துக்கள் உள்ளிட்ட விடயங்கள் குறித்து கூட்டு எதிரணியினர் கேள்விகளைத் தொடுக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
மே மாதத்தின் இரண்டாம் வார நாடாளுமன்ற அமர்வுகள் சபாநாயகர் கரு ஜெயசூரிய தலைமையில் இன்று பிற்பகல் ஒரு மணிக்கு ஆரம்பமாகிறது. இதன்போது, பொது மனு தாக்கல்கள், வாய்மூல விடைக்கான கேள்விச் சுற்று, நாட்டில் ஏற்பட்டுள்ள இயற்கை அனர்த்தங்கள் குறித்த விசேட விவாதங்கள் உள்ளிட்ட விடயங்கள் முடிவுற்ற பின் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல், அது குறித்து வடமாகாண சபையின் செயற்பாடுகள், அமைச்சர் ராஜதவின் கருத்துக்கள், பிரதமர், ஜனாதிபதியின் நிலைப்பாடுகள் குறித்த விவாதங்கள் கடுமையான சர்ச்சைகளை ஏற்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.