இங்கிருந்து தொடங்க வேண்டும் – குளோபல் தமிழ்ச் செய்திகள்…
சிவாபசுபதி கமம் 55 குடும்பங்களுக்கு பகிரந்தளிக்கப்பட்டுள்ளநிலையில் காணியை வழங்கிய உரிமையாளர்களுக்கு மக்கள் நன்றி தெரிவித்துள்ளனர். கிளிநொச்சி பன்னங்கண்டி சிவாபசுபதி கமத்தில் 1990 ஆம் ஆண்டு முதல் வாழ்ந்து வந்த மக்களுக்கு குறித்த காணிகளை காணி உரிமையாளர்கள் அவர்களுக்கு சொந்தமாகவே வழங்கியுள்ளனர்.
கடந்த வருடம் மார்ச் மாதம் குறித்த மக்கள் தாங்கள் குடியிருக்கும் காணிகளுக்கு அனுமதிபத்திரம் மற்றும் வீட்டுத்திட்டம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை கோரி தொடர் கவனயீர்ப்பு போராட்டத்தை ஆரம்பித்திருந்தனர்.
காணி உரிமையாளார்களான இலங்கையின் முன்னாள் சட்டாமா அதிபராக இருந்த சிவாபசுபதியும் அவர்களது சகோதரர்களும். இவர்களின் ஒருவரின் மகளான மருத்துவர் மாலதிவரனிடமும் இந்த மக்களின் கவனயீர்ப்பு போராட்டம் தொடர்பில் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. இதன் போது அவர் தனது உறவினர்களுடன் பேசி குறித்த காணியை குடியிருக்கும் மக்களுக்கே வழங்குவதற்கு தீர்மானித்திருந்தனர்.
இதற்கு பின்னர் மேற்கொண்ட நடவடிக்கைகளுக்கு அமைவாக கடந்த சனிக்கிழமை சிவாபசுபதி கமம் உரிமையாளர்களின் விருப்பத்திற்கு அமைவாக யோகர் சுவாமிகள் குடியிருப்பு என பெயர் மாற்றம் செய்யப்பட்டு காணி ஆவணங்களும் வழங்கி வைக்கப்பட்டது.
பெறுமதியான காணியினை உவந்தளித்து தங்களின் வாழ்நாளில் முதல்முறையாக சொந்தமாக காணி ஒன்றை வழங்கிய உரிமையாளர்களுக்கு பிரதேச பொது மக்கள் உருக்கமாக தங்களின் நன்றிகளை தெரிவித்துள்ளனர்.
காணிகளை வளைத்துப் பிடித்து முள்ளுக்கம்பி அடித்து வளவுக்காரர்களாக, பெருமையின் சின்னங்களாக அவற்றை பேணும் புலம்பெயர்ந்து வாழும் தமிழர்கள் சிந்திப்பார்களா?