குளோபல் தமிழச் செய்தியாளர்
மத்திய அரசாங்கத்தின் முறையான அனுமதியின்றி வெளிநாட்டு நபர்களுக்கோ நிறுவனங்களுக்கோ முசலிப் பிரதேசத்தில் காணிகளை வழங்குவதை முசலி பிரதேச அபிவிருத்தி குழு தடைசெய்துள்ளது. மேற்குறிப்பிட்ட சாரார் காணிகளைப் பெற்றுக்கொண்டு தாங்கள் விரும்பியவாறு வளங்களை சூறையாடுவதாலும் சூழலை மாசுபடுத்துவதாலும் மற்றும் உள்ளுர்வாசிகளின் வாழ்வாதார நடவடிக்கைகளுக்கு தடையை ஏற்படுத்துவதாலுமே அபிவிருத்திக்குழு இந்த நடவடிக்கையை மேற்கொண்டது.
முசலி பிரதேச அபிவிருத்திக்குழுவின் இணைத்தலைவர்களான அமைச்சர் ரிஷாத் பதியுதீன் பாராளுமன்ற உறுப்பினர்களான காதர் மஸ்தான் சாள்ஸ் ஆகியோரின் தலைமையில் அபிவிருத்திக்குழுக் கூட்டம் நேற்று (21.05.2018) இடம்பெற்றபோது உள்ளுர்வாசிகளினதும் தொழில்முயற்சியாளர்களினதும் முறைப்பாட்டை கருத்திற்கொண்டே இந்த தீர்க்கமான முடிவு எடுக்கப்பட்டது.
இக்கூட்டத்தில் மக்களின் காணிப்பிரச்சினை, வாழ்வாதாரம், சமூர்த்தித்திட்டம், மின்சாரம், ஆசிரியர் பற்றாக்குறை, மண் அகழ்வு, வன இலாகா நெருக்கடி போன்ற பல பிரச்சினைகள் பேசப்பட்டு சில முடிவுகள் மேற்கொள்ளப்பட்டன.
குறிப்பாக சிலாவத்துறை முஸ்லிம்களுக்கான வீட்டுத்திட்டம் பிரதேச செயலாளரால் இடைநிறுத்தப்பட்டமை குறித்து நீண்ட நேரம் விவாதிக்கப்பட்டது.
கூட்டம் முடிவடைந்ததும் குறித்த வீட்டுத்திட்டக் காணிக்கு நேரடியாகச் சென்ற கூட்ட முக்கியஸ்தர்கள் முடிவு எட்டப்படாத நிலையில் அங்கிருந்து திரும்பினர்.