தமிழகத்தின் தூத்துக்குடியில் இன்று நடந்த துப்பாக்கிச் சூட்டில் இறந்துபோன காளியப்பனின் உடலுடன் தமிழகப் காவல்துறையினர் நடந்தகொண்டவிதத்துக்கு பல்வேறு தரப்பினரும் கண்டனங்களை வெளியிட்டுள்ளனர். தூத்துக்குடியில் நேற்று நடந்த போராட்டத்தின் சுவடுகள் மறைவதற்குள் இன்றும் துப்பாக்கிச்சூடு சம்பவம் நடைபெற்றிருப்பது தமிழகத்தை மேலும் அதிரவைத்துள்ளது.
நேற்று நடந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் பலியானவர்களின் உடல்களை ஸ்டெர்லைட் ஆலையை மூடும் வரை வாங்க மாட்டோம் என உறவினர்கள் மறுப்புத் தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களைக் கலைப்பதற்காக மருத்துவமனை பகுதியில் இன்று மீண்டும் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் காளியப்பன் என்ற இளைஞர் சம்பவ இடத்திலேயே குண்டு துளைத்து சாவடைந்தார்.
காளியப்பனை சுட்டுக்கொன்ற பின்னர், தமிழக காவல்துறையினர்நடந்துகொண்ட விதம் குறித்து நியூஸ்மினிட் செய்தியாளர் அனா ஐசக் என்பவர் பகிர்ந்துள்ள வீடியோ வெளியாகியுள்ளது. அதில், காவல்துறையினரின் துப்பாக்கிச் சூட்டால் காளியப்பன் கீழே சரிந்து இறந்துகிடக்க அவரைச் சுற்றி 10 முதல் 15 காவல்துறையினர் இருந்தனர்.
அப்போது சிலர் அவன் ‘நடிக்கிறான், நடிக்கிறான்’ என்று கூற ஒருவர் அதற்கும் ஒருபடி மேலேபோய் தான் வைத்திருந்த லத்திக் கம்பால் காளியப்பனைத் தொட்டு, `ஏய் ரொம்ப நடிக்காதே போ’ என்று கூறியுள்ளார்.காவல்துறையினரின் மனசாட்சியற்ற இந்தச் செயலுக்கு கண்டனங்கள் குவிந்துவருகின்றன. ஏற்கெனவே, நேற்று நடந்த துப்பாக்கிச் சூட்டுக்கு 11 பேர் பலியாகியுள்ள நிலையில் இன்று மேலும் ஒருவர் பலியாகியிருப்பது தூத்துக்குடியில் மேலும் பதற்றத்தை அதிகரித்துள்ளது.