குளோபல் தமிழ்ச் செய்தியாளர்..
வடக்கு மாகாண கிராமிய அபிவிருத்தித் திணைக்களத்தின் கீழ் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றிய தையல் போதனாசிரியர்கள் மூவரை பணியிலிருந்து நிறுத்த யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றம் இடைக்காலத் தடை வழங்கி கட்டளை வழங்கியது.
பதவி நீக்கப்பட்ட தையல் போதனாசிரியர் மூவர் சார்பில் யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட உறுதிகேள் எழுத்தாணை மனு மீதான விசாரணைக்காக எதிர் மனுதாரர்களான வடக்கு மாகாண கிராமிய அபிவிருத்தித் திணைக்களத்தின் பணிப்பாளர், திருமதி ந. இன்பராஜ், முதலமைச்சரின் அமைச்சு செயலாளர் திருமதி வி.கேதீஸ்வரன் மற்றும் மாகாண பொதுச் சேவைகள் ஆணைக்குழுவின் தலைவர் சி. பத்மநாதன் ஆகியோரை வரும் ஜூன் 21ஆம் திகதி மன்றில் முன்னிலையாகுமாறு யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் உத்தரவிட்டார்.
வடக்கு மாகாண கிராமிய அபிவிருத்தித் திணைக்களத்தின் கீழ் கீழ் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றிய தையல் போதனாசிரியர்களான யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த நடராசா புஸ்பரதி, மன்னாரைச் சேர்ந்த சியாமளா மவுன்லின் மற்றும் வவுனியாவைச் சேர்ந்த சுமர்டின் சுஜித்தா ஆகிய மூவர் சட்டத்தரணி குமாரவடிவேல் குருபரன் ஊடாக யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில் தனித் தனியே உறுதிகேள் எழுத்தாணை மனுவைத் தாக்கல் செய்தனர்.
மனுவில் எதிர்மனுதாரர்களாக வடக்கு மாகாண கிராமிய அபிவிருத்தித் திணைக்களத்தின் பணிப்பாளர், திருமதி ந. இன்பராஜ், முதலமைச்சரின் அமைச்சு செயலாளர் திருமதி வி.கேதீஸ்வரன் மற்றும் மாகாண பொதுச் சேவைகள் ஆணைக்குழுவின் தலைவர் சி. பத்மநாதன் ஆகியோர் குறிப்பிடப்பட்டுள்ளனர்.
“மனுதாரர்களை நிரந்தர நியமனத்துக்கு தகுதியற்றவர் என முறிவுறுத்தும் முதலாம் எதிர் மனுதாரரின் கடந்த ஏப்ரல் 11ஆம் திகதிய கடிதம் வெற்றும் வறிதானதும் என ஆணையிடவேண்டும்.
மனுதாரர்களை நிரந்தர தையல் போதனாசிரியர்களாக நியமிக்க ஆணையிடவேண்டும்.
2016ஆம் ஆண்டு ஜூலை 15ஆம் திகதி மாகாண ஆளுநரால் அங்கீகரிக்கப்பட்டதும் 2013ஆம் ஆண்டு ஜனவரி முதலாம் திகதியை செல்லுபடியாகும் திகதியாகக் கொண்டதுமான தையல் போதனாசிரியர் சேவவைப் பிரமாணக் குறிப்பை மத்திய அரசின் நிர்வாக மற்றும் முகாமைத்துவ அமைச்சின் இலக்கம் 28/2016, 01.12.2016ஆம் திகதிய சுற்றறிக்கைக்கு அமைவாக திருத்தவேண்டும் என்று ஆணையிடவேண்டும்.
இந்த மனுக்களை விசாரித்துத் தீர்ப்பளிக்கும் வரை மனுதாரர்கள் வகிக்கும் பதவியிலிருந்து அவர்களை நீக்கக் கூடாது என்றதும் அவர்களுக்குப் பதிலாக வேறு எவரையும் நியமிக்கக் கூடாது என்றதுமானத் தடைக் கட்டளையிடவேண்டும்.
வழக்குச் செலவும் மன்று நியாயமானவை எனக் கருதும் நிவாரணங்களுக்காகவும்” என்று மனுதாரர்கள் எழுத்தாணை மீதான நிவாரணங்களைக் கோரியுள்ளனர். இந்த மனுக்கள் யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் முன்னிலையில் நேற்று (23) புதன்கிழமை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. இதன்போது மன்று இடைக்காலத் தடையுத்தரவை வழங்கி கட்டளை வழங்கியது.
“மன்று மனுக்களை ஆய்வு செய்வதுடன் அவருடைய வாய்மூல விண்ணப்பத்தை பரிசீலனை செய்து முதற்றோற்றளவில் குறிக்கப்பட்ட மனுதாரர்களுக்கு நியாயமான எதிர்பார்ப்பு உள்ளது என்பதை மன்று ஏற்றுக்கொள்வதுடன் குறிக்கப்பட்ட மனுக்களில் கோரப்பட்ட இடைக்காலத் தடைக் கட்டளையை குறிக்கப்பட்ட எழுத்தாணை மனுக்கள் விசாரணை முடிவடையும் வரைக்கும் முதலாம், இரண்டாம் மற்றும் மூன்றாம் எதிர்மனுதாரர்களுக்கு மன்று பிறப்பிக்கின்றது.
மனுதாரர்களால் நியாயமான எதிர்பார்ப்பு முன்வைக்கப்பட்டுள்ளது என மன்று திருப்தியடைவதனால் இடைக்கால தடைக் கட்டளையை பின்வருமாறு பிறப்பிக்கின்றது,
எழுத்தாணை மனுக்கள் விசாரணை விசாரித்து தீர்ப்பளிக்கும் வரை மனுதாரர்கள் வகித்த பதவியிலிருந்து மனுதாரர்களான நடராசா புஸ்பரதி, சியாமளா மவுன்லின், சுமர்டின் சுஜித்தா ஆகியோரை நீக்கக் கூடாது என முதலாம், இரண்டாம் மற்றும் மூன்றாம் எதிர்மனுதாரர்களுக்கு மன்று இடைக்கால தடைக்கட்டளையை பிறப்பிக்கின்றது” என்று யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் கட்டளை வழங்கினார்.