குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
போட்டி நிர்ணய சதி குறித்து விசாரணை நடத்துமாறு இலங்கை கிரிக்கட் கட்டுப்பாடு சபையினர் குற்றப் புலனாய்வுப் பிரிவிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.அல் ஜசீரா ஊடக நிறுவனத்தினால் வெளியடப்பட்ட ஆவணப்படத்தில் இலங்கையில் போட்டி நிர்ணய சதி இடம்பெற்றதாக செய்தி வெளியிடப்பட்டிருந்தது. கடந்த 2017 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி இலங்கைக்குசுற்றுப்பயணம் மேற்கொண்டு டெஸ்ட் தொடரை 3–0 என்ற கணக்கில் முழுமையாக கைப்பற்றியிருந்தது.
இந்த போட்டியிலும் இதே மைதானத்தில் 2016 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் இலங்கை மற்றும் அவுஸ்திரேலியா இடையேயான போட்டி இரண்டிலும் சூதாட்டம் நடைபெற்றதாக அல் ஜசீரா செய்தி வெளியிட்டு உள்ளது.
மூன்றாவது டெஸ்ட் போட்டியின் போது நடைபெற்ற சூதாட்டம் ரகசிய கமராவில் சிக்கியதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் அதே வருடம் நவம்பர் மாதம் இலங்கைக்கு எதிரான இங்கிலாந்து போட்டியிலும் சூதாட்டம் நடைபெற திட்டமிட்டிருந்ததாகவும் குறித்த ஆவணப்பபடத்தில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இந்த குற்றச்சாட்டுகள் தொடர்பாக சர்வதேச கிரிக்கெட் கட்டுப்பாடுசபை விசாரணை செய்துள்ளது. கிரிக்கெட் சூதாட்டகாரர்கள் என்ற விவரண செய்தி ஞாயிறு அல் ஜசீரா இணையத்தில் ஒளிபரப்பாகியிருந்தது.
இந்தநிலையில் சர்வதேச ரீதியில் முன்னெடுக்கப்படும் எந்தவொரு விசாரணைகளுக்கும் தயார் எனவும் பூரண ஒத்துழைப்பு வழங்கப்படும் எனவும் ஸ்ரீலங்கா கிரிக்கட் நிர்வாகம் அறிவித்துள்ளது.
அத்துடன் காலி சர்வதேச கிரிக்கட் மைதானத்தின் உதவி முகாமையாளரின் பணி இடைநிறுத்தப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது
இந்தியா – இலங்கைக்கிடையிலான டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் போது சூதாட்டம் இடம்பெற்றதா?
May 27, 2018 @ 02:44
2017-ம் ஆண்டு ஜூலை மாதம் காலியில் நடைபெற்ற இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கிடையிலான டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் போதும் 2016-ம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் நடைபெற்ற இலங்கை, அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் போட்டியின் போதும் சூதாட்டம் இடம்பெற்றுள்ளதாக அல் ஜஸீரா செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
இது குறித்து அல் ஜஸீரா செய்தி நிறுவனம் தயாரித்துள்ள கிரிக்கெட் மட்ச் பிக்ஸர்ஸ் என்ற ஆவணப்படம் இந்தவிடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. காலி மைதானத்தின் ஆடுகளத்தை சூதாட்டக்காரர்களுக்கு ஏற்ற வகையில் மாற்றி அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மும்பையைச் சேர்ந்த ரொபின் மொரிஸ் என்ற சூதாட்டத் தரகர் காலி மைதானத்தின் ஆடுகள பராமரிப்பு துணை மேலாளரான தரங்கா இந்திகாவைத் தொடர்பு கொண்டு பேசி தங்களுக்கு ஏற்றார்போல் ஆடுகளத்தை மாற்றுமாறும் அதற்கு பணம் தருவதாக உறுதியளித்துள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது
தரங்கா இந்திகா ஆடுகளத்தை பந்துவீச்சாளர்களுக்கு சாதகமாக அமைக்க வேண்டுமா அல்லது துடுப்பாட்டக்காரர்களுக்கு சாதகமாக அமைக்க வேண்டுமா எனக் கேட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவுக்கு சாதகமாக ஆடுகளத்தை மாற்ற வேண்டுமானால், அது துடுப்பாட்டத்துக்கு சாதகமாக மற்ற வேண்டும். அதற்காக ஆடுகளத்தை நன்றாக இறுக்கமாக அமைத்து, கடினமாக்கி விடுகிறேன் என ஆடுகள துணை மேலாளர் தரங்கா இந்திகா அல்ஜசீரா எடுத்த ரகசிய வீடியோவில் இந்த தகவலைத் தெரிவித்துள்ளார்.
அதற்கு ஏற்றார்போல், காலியில் இடம்பெற்ற அந்த டெஸ்ட் போட்டியில், முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 600 ஓட்டங்களைக் குவித்தமையினால் சூதாட்டக்காரர்களுக்கு மகிப்பெரிய லாபமாக அமைந்தது.இலங்கை அணி 245 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்து தோல்வி அடைந்தது.
அதேபோன்றே அவுஸ்திரேலியா, இலங்கை அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் போட்டியின் போதும் ஆடுகளம் இலங்கை அணிக்கு ஏற்ற மாதிரி சாதகமாக மாற்றி அமைக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.அதுமட்டுமல்லாமல் எதிர்வரும் நவம்பர் மாதம் இலங்கை, இங்கிலாந்து அணிகளுக்கு இடையே காலியில் நடைபெறவுள்ள டெஸ்ட் போட்டியிலும் சூதாட்டம் மேற்கொள்ளத் திட்டமிடப்பட்டுள்ளதும் தெரியவந்துள்ளது.
அல்ஜஸீரா தயாரித்துள்ள இந்த ஆவணப்படம் இன்று இணைத்தில் வெளியிடப்பட உள்ள நிலையில் அதற்கு முன்னதாக இந்த தகவல்கள் வெளியாகியுள்ளன. இது குறித்து சர்வதேச கிரிக்கெட் கட்டுப்பாட்டுசபை இணையதளத்தில்,அல்ஜசீரா செய்தி நிறுவனம் வெளியிட்ட செய்தியை அறிந்துள்ளதாகவும் ஆவணப்படம் பார்த்த பின் அடுத்த கட்ட நடவடிக்கையை எடுபக்கவுள்ளதாகவும் ஊழல் தடுப்பு அமைப்போடு இணைந்து ஏற்கெனவே விசாரணையைத் ஆரம்பித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது