பாகிஸ்தானின் தாக்குதலில் இருந்து காஷ்மீர் எல்லை பகுதியில் வசிக்கும் மக்களைப் பாதுகாப்பதற்காக 5,500 பதுங்குக் குழிகள் மற்றும் 200 சமூகநல கூடங்கள் கட்டும் பணி விரைவில் ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. காஷ்மீரின் சர்வதேச எல்லைப் பகுதிகளில் யுத்த நிறுத்தத்தை மீறி பாகிஸ்தான் ராணுவத்தினர் தொடர்ந்து பீரங்கிக் குண்டுகளை வீசியும் துப்பாக்கிச் சூடு நடத்தியும் வருகின்றனர்.
அத்துடன் தீவிரவாதிகளும் அவ்வப்போது ஊடுருவி தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்நிலையில், காஷ்மீரின் எல்லைப்குதிகளில் வசிக்கும் கிராம மக்களைப் பாதுகாக்கும் நோக்குடன் இவ்வாறு பதுங்குக் குழிகளும் சமூகநல பதுங்குக் குழிகளும் அமைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் ஒரே நேரத்தில் 10 ஆயிரம் பேர் தங்கும் வசதி கொண்ட ‘எல்லை பவன்’கள் கட்டுவதற்கும் முடிவெடுக்கப்பட்டுள்ளதாகவும் இத்திட்டத்துக்கு மாநில அரசும் மத்திய உள்துறை அமைச்சகமும் அனுமதி அளித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக 153.60 கோடி ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் இந்த நிதியாண்டுக்குள் பதுங்குக் குழிகள் கட்டி முடிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் தாக்குதல் நடத்தும்போதோ அல்லது அவசரமாக மக்களை வெளியேற்றும் சூழ்நிலையோ ஏற்பட்டால், இந்தப் பதுங்குக் குழிகளில் மக்கள் பாதுகாப்பாக தங்க வைப்படுவார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது