தமிழகத்தில் உள்ள தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடுவதற்கான அரசாணையை தமிழக அரசு இன்று வெளியிட்ட நிலையில், ஆலைக்கு மாவட்ட ஆட்சியர் சீல் வைத்தார்.தூத்துக்குடியில் கடந்த 22 மற்றும் 23ஆம் திகதிகளில் ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பாளர்கள் நடத்திய போராட்டத்தின்போது காவற்துறையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 13 கொல்லப்பட்டனர். இன்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் உயரதிகாரிகளுடன் இது தொடர்பில் ஆலோசனை நடத்தினனார்.
இந்நிலையில், ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடுவதற்கு தமிழக அரசு இன்று மாலை அரசாணை வெளியிட்டுள்ளது. பொதுமக்களின் உணர்வுகளுக்கும், கருத்துக்களுக்கும் மதிப்பளித்து இந்த அரசாணை வெளியிடப்பட்டுள்ளதாக, இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசாணை வெளியிடப்பட்ட சிலமணி நேரங்களில் ஆலைக்கு சீல் வைக்க மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி அங்கு சென்றுள்ளார். ஆலை நிர்வாகிகளிடம் பேச்சுவார்த்தை நடத்திய பின்னர், அவர் ஆலைக்கு சீல் வைத்து, அரசின் அரசானைப் பிரதியை வாசல் கதவில் ஒட்டினார்.
இது தொடர்பில் கருத்துத் தெரிவித்த மாவட்ட ஆட்சியர் “ஆலை நிரந்தரமாக மூடப்பட்டது. இனி ஆலை இயங்காது. அரசாணையின் படி சீல் வைக்கப்பட்டது. ஆலைக்குள் இருக்கும் பொருட்களை சீல் வைப்பது குறித்து பின்னர் முடிவெடுக்கப்படும்” என்று குறிப்பிட்டார்.